search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இம்மையில் நன்மை தருவார் கோவில்
    X

    இம்மையில் நன்மை தருவார் கோவில்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது, இம்மையில் நன்மை தருவார் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது, இம்மையில் நன்மை தருவார் கோவில். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் இத்தலம், அற்புதங்கள் நிறைந்த தலமாக திகழ்கிறது. பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாகும். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் இருப்பவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தின் சில சிறப்பு தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    அதிசய சிவலிங்கம் :

    எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய் கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

    சித்தர் சிவன் :

    மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை மற்றும் சித்திரை மாதத்தில் வரும் பவுா்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கல் ஸ்ரீசக்கரம் :

    பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு. மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலாபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

    வருடத்திற்கு 54 அபிஷேகம் :

    இக்கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
     
    ராஜ உபசார அர்ச்சனை :

    மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலம் ஆகும். எனவே புது கட்டிடம் கட்டத் தொடங்குபவர்கள், சிவன் சன்னிதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டிடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் தொடங்குகிறார்கள்.

    சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அரசை ஏற்கும் முன் இங்கு ஈசன், லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் இத்தல இறைவனுக்கு ராஜ உபசார அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    காரமான புளியோதரை :


    கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம், காரமான புளியோதரை சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    பரிந்துரை செய்யும் சண்டிகேஸ்வரர் :

    பொதுவாக சிவன் கோவில்களில், அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்சினைகளில் இருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்சினை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், ‘பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.

    Phone: 094434 55311
    Next Story
    ×