search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகிலாண்டேஸ்வரி, பைரவர், ஜம்புகேஸ்வரர்
    X
    அகிலாண்டேஸ்வரி, பைரவர், ஜம்புகேஸ்வரர்

    கடன் தொல்லை தீர்க்கும் பைரவ நாத சுவாமி கோவில் - திருச்சி

    சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம்.
    பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

    சித்திரை மாதத்தில் ஸ்நாதனாஷ்டமி, வைகாசி மாதத்தில் சதாசிவாஷ்டமி ஆனி மாதத்தில் பசுபதாஷ்டமி, ஆடி மாதத்தில் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதத்தில் ஸ்தானுவாஷ்டமி, புரட்டாசி மாதத்தில் சம்புகாஷ்டமி, ஐப்பசி மாதத்தில் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதத்தில் ருத்ராஷ்டமி, மார்கழி மாதத்தில் சங்கராஷ்டமி, தை மாதத்தில் தேவ தேவாஷ்டமி, மாசி மாதத்தில் மகேச்வராஷ்டமி, பங்குனி மாதத்தில் திரியம்பகாஷ்டமி என்ற பெயர்களில் இந்த அஷ்டமி அழைக்கப்படுகின்றது.

    சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு. அவர்கள் ‘பஞ்ச குமாரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள். பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள்.

    அசுர கணங்கள் பூலேகத்துக்கும், தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரை தோன்றுவித்து அசுரர்களை அழித்து மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு.

    பைரவர் வழிபாடு என்பது சிவாலயங்களில் ஒரு சிறப்பு அம்சம். எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவபெருமானின் மூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு. பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும் பிரதானமாகக் கூறப்படுவது 64 பைரவர்கள் ஆகும். ஒரு பைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர்.

    சனீஸ்வரனின் குருநாதர் பைரவர். சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனீஸ்வரன். பிறவியிலேயே முடமான சனீஸ்வரனை, அவரது அண்ணன் எம தர்மன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்டார் சனி பகவான். தனது வேதனையை தனது அன்னை சாயாதேவியிடம் தெரிவித்தார் சனிபகவான்.

    உடனே தேவி ‘மகனே! சஞ்சலப்படாதே! காலபைரவரை நோக்கி தவமிரு. அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்’ என்றாள்.

    அன்னை சொன்னபடியே சனி பகவான், காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய பைரவர், சனி பகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர் பட்டம் பெற்றதும் பைரவரால் தான்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அர்த்த மண்டப நுழைவு வாசலில் 6 அடி உயர துவார பாலகர்கள் இருக்க வடதிசையில் விசுவநாதர்- காமாட்சி அருள்புரிகின்றனர். கருவறையில் பைரவர் எங்கும் காணாத அமைப்பாக சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலயத்தின் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமையப்பட்டுள்ளது. இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர்.

    திருச்சுற்றில் அன்பு கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி. நந்திகேஸ்வரர், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தங்கள் தம்பதிகளுடன் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தின் விமானம் இரண்டு அடுக்குடன் அமைந்துள்ளது.

    கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் ‘பைரவ தீபம்’ என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது.

    பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). கருவறையின் முன் உள்ளது இந்த வாகனம். நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி அக வாழ்வு பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

    தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு ராசி மற்றும் நட்சத்திர பரிகார ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மகா தீப ஆராதனையும் நடைபெறும். தேனில் உப்பு போடாமல் செய்த உளுத்தம் வடை, பழங்கள், நெய், சித்ரா அன்னங்கள், கொப்பரைத் தேங்காய் நவதானியம், அஷ்ட திரவியம் முதலியவற்றை ஹோமத்தில் இடுவர். அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெறுவர்.

    அத்துடன் அன்று ருத்ரநாம, திரு சதி அர்ச்சனையும், வேதபாராயணமும், மூலமந்திர ஜபமும் நடைபெறும். அன்று பைரவர் வீதி உலா வருவதுண்டு.

    மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர்.

    கார்த்திகை மாதத்தில் வரும் ஜென்மாஷ்டமி, பைரவர் அவதாரம் எடுத்த நாள். அன்று ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும். அன்று சுவாமிக்கு 10,000 வடையினால் ஆராதனையுடன் அன்று திருவீதி உலாவும் நடைபெறும்.

    பங்குனி உத்திரம் ஆலய குடமுழுக்குத் திருநாள். அன்று பைரவருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மாலை தீபாராதனையும் நடைபெறுவதுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.

    இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீண்டு வரவும் இயலும் என்கின்றனர் பக்தர்கள்.

    தங்கள் பிரார்த்தனை பலிக்க பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை பழ மாலை சாற்றி, மிளகு, பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் மன மகிழ்ச்சி, பய நிவர்த்தி, காரிய வெற்றி, பணி இடையூறு நிவர்த்தி, கலை அபிவிருத்தி, கடன் தொல்லை நிவர்த்தி இவைகளை பெறலாம்.

    பிரதோஷ நாட்களில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, நந்திகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கு பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 4 மணி வரை திறந்திருக்கும். பிறகு மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    திருச்சி நகரத்தின் மையப்பகுதியான பெரிய கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
    Next Story
    ×