search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தி அளிக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில்
    X

    முக்தி அளிக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில்

    தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.
    விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.

    கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.

    தல வரலாறு :

    ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

    இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.

    பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜபெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

    ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.

    திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.



    மற்றொரு வரலாறு :

    இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது.. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப அமைதி குலைந்து, போர் சூழலும், அதர்மமும் தலை தூக்கியிருந்தது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் இருந்து அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதிக்கு வந்தவர், அதை ஒட்டிய நீர் வற்றியிருந்த கருட நதி (தென்பெண்ணையாறு) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதை, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனான திருமாலை வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் இத் தவத்தை அவர் மேற்கொண்டார்.

    பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் காட்சி அளித்தார். பின்னர் வேண்டும் வரம் கேட்கும்படி மகரிஷிக்கு அருளினார்.

    மகரிஷியோ, ‘இறைவா! தாங்கள் உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களை காண ஆசைப்படுகிறேன்’ என்றார்.

    அதற்கு இசைந்த திருமாலும், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என ஒவ்வொரு அவதார கோலத்தையும் வரிசையாக சடமர்ஷனுருக்கு காட்டினார்.

    ராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி, ‘ஐயனே! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் ராமனாகப்பிறந்து, எத்தனை துன்பங்களை அடைந்தீர். எத்தனை எத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தாங்கள் இவ்விடத்தில் இளைப்பாறுவதுடன், பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்’ என்றார்.

    அதன்படியே லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி ஸ்ரீதேவி வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை காட்டி அருளினார்.

    பின்னர் அடுத்தடுத்த அவதார காட்சியை மகரிஷிக்கு அருளினார். கிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சி யளித்தார்.

    அப்போது மகரிஷி, ‘பெருமாளே! இந்த மலை எதற்கு?’ என்றார்.

    ‘இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக’ என்றார் பெருமாள்.

    அதற்கு மகரிஷி, ‘இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் குழலோசையிலே பிரபஞ்சத்தை எல்லாம் மயக்கி பக்திபரவசத்தை ஊட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சி தர வேண்டும் ’ என்று வேண்டினார். பெருமாளும் அவ்விதமே ருக்மணி- சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனாக காட்சியளித்தார்.

    இப்படியாக பத்து அவதார திருக்கோலங்களையும் கண்டு மகிழ்ந்த மகரிஷியைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்திதானே?’ என பெருமாள் கேட்க, ‘கிடந்த (சயன) திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் அருள்பாலித்த தாங்கள், இத்தலத்திலேயே அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளித்து கலியுக காலத்தில் மக்கள் தங்களது திருக்காட்சியைக் கண்டு பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டும்’ என்றார், மகரிஷி.

    தனக்கென எதுவும் கேட்காமல், உலக மக்களுக்காக வேண்டியதால், அமர்ந்த கோலத்திலும் அவருக்கு காட்சி தந்தார் பெருமாள் என்கிறது மற்றொரு வரலாறு.

    இத்திருத்தலத்தில் மகா விஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள்.



    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு, சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கீழ்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு, கி.பி. 1884-ம் ஆண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது. ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது.

    பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி உள்ளது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து காத்து நிற்கிறார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப பெருமாள் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி இருக்கிறது.

    சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது.

    பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் துயில் கொண்ட (கிடந்த) கோலத்தில் சயனராமர் காட்சி தந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார். அவரது திருமார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.

    இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    சூரிய- சந்திரர் வழிபாடு :

    கிருஷ்ணராகவும், ராமனாகவும், பெருமாளாகவும் இத் தலத்தில் திருக்காட்சித் தரும் திருமாலை, பக்தர்கள் மட்டுமின்றி சூரியனும் சந்திரனும் வழிபடுவது மிகச்சிறப்பான நிகழ்வாகக் கூறலாம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்கள், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார்.

    அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும். இப்படி சூரியனும் சந்திரனும் ஒருசேர வழிபடும் திருத்தலங்கள் மிகச்சிலவே. அதிலும் வைணவ ஆலயங்களை காண்பது அரிது. அந்த குறையைப் போக்குகிறது இவ்வாலயம்.

    அமைவிடம் :

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் செல்ல குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
    Next Story
    ×