search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்
    X

    திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்

    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படிப் பாடிய அடியாளர்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்.

    பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற்காக பறிக்க விரும் பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களைப் பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களைப் பெற்றார். இதனால் இவர் ‘புலிக்கால் முனிவர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே ‘பெரும்பற்ற புலியூர்’ என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் ‘திருப்பாதிரிபுலியூர்’ என்றானது. இந்த ஊர் தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ளது.

    இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் பாடலேஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசர், உத்தாரேண்யேஸ்வரர், பாடலநாதர், கரையேற்றும்பிரான் என்ற பெயர்களாலும், இறைவி பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படு கிறார். தலவிருட்சம் பன்னிரண்டு வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரமாகும். இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

    தல வரலாறு :

    உலகத்து உயிர்கள் நலம் பெறுவதற்காக, பரமன் அவ்வப்போது பல திருவிளையாடல்களை நிகழ்த்துவதுண்டு. அதில் ஒன்றுதான் பார்வதியுடன் சேர்ந்து இறைவன் சொக்கட்டான் என்னும் பகடைக் காய் விளையாடியது. விளையாடுவதற்காக அன்னையின் தோழிகள் மாணிக்கக் கல், மரகதப் பலகை, வைரத்தாலான பகடை கருவிகள் தந்து பகடையாடச் செய்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அம்பிகையே வெற்றி பெற்றார். ஆனால் ஈசனோ, தான் வெற்றி பெற்றதாகக் கூறினார்.

    அருகில் இருந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த திருமால், உண்மையை கூறினால் மற்றொருவரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக்கருதி ஆட்டத்தைக் கவனிக்கவில்லை எனக் கூறிவிட்டார்.

    இறைவிக்கு கோபம் எழுந்தது. ‘இறைவன் திருக்கண்களை மறைப்பேன். அதைத்தாண்டி ஒளி தந்தால் இறைவன் வெற்றி பெற்றதாகவும், ஒளி தராவிட்டால் நான் வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இறைவனின் கண்களை மூடினார். அடுத்த நொடி அண்டசராசரங்களும் இருளில் மூழ்கின. அனைத்து இயக்கங்களும் செயல்களும் நின்று போயின. உயிர்கள் ஓலமிட்டன. ஒரு கணமே நீடித்த இந்த நிகழ்வு, தேவர்களுக்கும் முனிவர்களுக்கு பல யுகங்களாக நீடித்தது.

    பதறிப்போன இறைவி, சிவனின் கண்களில் இருந்து கரத்தை எடுத்துவிட்டு தன் செயலால் ஏற்பட்டுவிட்ட விபரீதத்திற்கு மனம் வருந்தினாள். தன்னை மன்னித்து அருளும்படி ஈசனிடம் வேண்டினாள்.

    இறைவனோ, ‘நீ பூலோகம் சென்று அங்குள்ள 1008 சிவ தலங்களை தரிசித்து வா. அப்படி நீ தரிசிக்கும் போது, எந்த தலத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் உன்னை நான் ஆட்கொள்வேன்’ என்று அருளினார்.

    அதன்படி பார்வதிதேவி ஒவ்வொரு சிவாலயமாக தரிசித்தபடி வந்தாள். ஒரு கட்டமாக பாதிரி வனமாக திகழ்ந்த இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்தபோது, அன்னையின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. அந்த தலத்தில் அன்னை தவம் இயற்றினாள். அரூபமாக இருந்து இறைவனை பூஜித்து வந்தாள். இறைவியின் பூஜைக்கு சப்தமாதர்கள் உதவி புரிந்தனர்.

    பாடலேஸ்வரர் ஆலயத்தில் மூலவரின் கருவறையைச் சுற்றி வரும்போது கஜலட்சுமி சன்னிதி காணப்படும். அதை யடுத்து துர்க்கை கோஷ்டமூர்த்தம் உள்ள இடத்தில் அம்பிகை அரூப வடிவில் தவம் செய்த இடம் தனிச்சன்னிதியாக இருக்கிறது. இது அருந்தவநாயகி சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் அரூப நிலையை உணர்த்தும் பொருட்டு இந்த சன்னிதியில் உருவம் ஏதும் இல்லை. பீடம் மட்டுமே உள்ளது.

    இறைவி தவம் செய்து தன் மணாளனை கரம் பற்றிய தலம் என்பதால், பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமை சிவகர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்குவோர் நினைத்தது கைவரப்பெறுவர். செவ்வாய்க்கிழமைகளில் 108 தாமரை மலர் கொண்டு, 108 திருவிளக்கிட்டு அம்பிகையை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் அமைப்பு :

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து ஏழு நிலை ராஜகோபுரமும் இருக்கிறது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலைக் கடந்து உள்ளேச் சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம், மற்றும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் சன்னிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, இரண்டாவது வாசலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னிதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இவ்வாலயத்தில் மட்டுமே காண முடியும்.

    உட்பிரகாரம் சுற்றி வரும்போது அறுபத்துமூவர் சன்னிதியை தரிசிக்கலாம். அடுத்து தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சன்னிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதிகள் இருக்கின்றன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சன்னிதிக்கு அருகில் இருக்கும். இறைவன் இறைவியின் சன்னிதிக்குச் செல்வது நடைமுறை. பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. ஆனால் பள்ளியறை இறைவனின் திருச்சன்னிதியில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

    இறையருள் பெற்ற மாணிக்கவாசகர் :


    உலக உயிர்கள் நலம் பெறுவதற்காக, இத்தல இறைவன் பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் இங்கு வந்தார். இத்தல ஆலயத்தில் உள்ள சிவகரை தீர்த்தம், சித்தராக உருக்கொண்டு வந்த ஈசன் கை வைத்ததால் உருவானது என்று கூறப்படுகிறது. இதில் கங்கையின் ஒரு பகுதி கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால், இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் ஆகமங்களுமே பாதுகைகளாக விளங்கின. இவரைப்பார்த்த குருடர்கள் கண் பெற்றனர். செவிடர்கள் கேட்கும் திறன் பெற்றனர். ஊமைகள் பேசும் திறன் பெற்றனர். தீரா நோயுடையோர் நலம் அடைந்தனர்.

    மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட, சித்தராகத் தோன்றிய சிவன், மாணிக்கவாசகரை நீர்மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன், மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு, பிரம்பு ஒன்றை ஏவி பாடலவனத்தில் வராமல் அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர், இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கடலூர் ரெயில் நிலையத்தின் அருகில் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அனைத்து ஊர்களில் இருந்தும் கடலூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

    Next Story
    ×