search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுந்தநாதர்
    X
    ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுந்தநாதர்

    ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைகுந்தப் பெருமாள் கோவில் - நொளம்பூர்

    சென்னை, மேற்கு முகப்பேர் அடுத்து பெரிய நொளம்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைகுந்தப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்து வந்தவர்கள் சம்புவராய வம்சத்தினர். குறுநில மன்னர்களான இவ்வம்சத்தினர் காஞ்சீபுரம் மட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர் உள்பட தாம் ஆட்சி செய்துவந்த பகுதிகள் அனைத்திலும் ஈஸ்வரம், விண்ணகரம் நிர்மாணிப்பதிலும், சமயப்பணி புரிவதிலும் தலைசிறந்து விளங்கினர்.

    இவர்களின் வம்சத்தில் வந்த சம்புவராயன் என்ற மன்னன், ஷீர நதிக்கரையில் மார்க்கண்டேய முனிவர் தவம்புரிந்த தலத்தில், மகப்பேறு அருளுவதும் எம பயம் போக்குவதுமான முகப்பேர் மார்க்கண்டேஸ்வரர் கோவில், சத் சந்தான பாக்கியம் அருளுவதும், குருவருள் தருவதுமான சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் போன்ற ஆலயங்கள் அமைத்து பெரும்பேறு பெற்றான். இவ்வரசனின் மகன் மல்லிநாத சம்புவராயன் தம் தந்தையைப் பின்பற்றி, ரிஷிகள் தவம்புரிந்த தலங்களில் ஆலயம் அமைத்தான். அவற்றுள் ஒன்று சென்னை, மேற்கு முகப்பேர் அடுத்து பெரிய நொளம்பூர் பகுதியிலுள்ள ஸ்ரீதேவி- பூதேவி சமேத வைகுந்தப் பெருமாள் ஆலயம்.

    ஒருசமயம் அத்ரி மகரிஷியும், மார்க்கண்டேய முனிவரும், வைகுண்டவாசன் திருக்கோலத்தை தேவியருடன் பூலோகத்தில் தரிசிக்க விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கு இசைந்த பெருமாள், மின்மினிப் பூச்சிகள் வாழும் இடத்தில் தம்மைக் குறித்து தவம்புரியும்படி கூறினார். வைகுண்டபதியின் அனுக்கிரகத்தைத் தொடர்ந்து, மின்மினிப் பூச்சிகள் சுற்றித்திரியும் இடத்தைத் தேடிவந்தனர் இரண்டு ரிஷிகளும்.

    உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளின் பிறப்புக்குப் பின்னும் தெய்வீகக் காரணம் உண்டு. விளக்கு என்றிருந்தால் அதில் ஒளியும் வெப்பமும் சேர்ந்தே இருக்கும். ஆனால் ஒரு சிறிது வெப்பமும் இன்றி, ஒளியை மின்மினிப் பூச்சிகள் அளிக்கின்றன என்றால், அதன் தெய்வீகத் தன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்தது.

    மின்மினிப் பூச்சிகள் பூமிக்கு உரிய சிவப்பு (மண்) வண்ணத்தையும், புவர் லோகத்துக்கு உரிய பச்சை வண்ணத்தையும், சுவர் லோகத்துக்கு உரிய மஞ்சள் வண்ணத்தையும் தங்கள் ஒளிப்பிரகாசத்தால் அளிக்கின்றன. எனவே மின்மினிப் பூச்சிகளை ‘திரிலோக சஞ்சாரிகள்’ என முனிவர்கள் அழைக்கின்றனர். சித்தர்கள் ‘சுடர்மணிகள்’ என அழைக்கின்றனர்.

    மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் மகான்களின் சஞ்சாரமும் அதிகம் இருக்கும். பொதுவாக, ஒருவர் எந்த அளவு இறைவனை நோக்கித் தவம் இயற்றுகிறாரோ, அந்த அளவு அவருடைய உடல் உறுப்புகள் மென்மையாக இருக்கும். மகான்களின் தூல உடம்பைத் தொட்டுப் பார்த்தால் இதனை உணரலாம். உடல் எந்தளவு மென்மையாக உள்ளதோ, அந்த அளவு அது வலிமையானதாக இருக்கும். பெண்கள், ஆண்களைவிட ஏழு மடங்கு சக்தியுடையவர்கள். எனவே மென்மையான உடல்வாகு அவர்களுக்கு அமைந்துள்ளது.

    மென்மையான உடல் அமைப்பைக் கொண்ட அத்ரி, மார்க்கண்டேய மகரிஷிகள், மின்மினிப் பூச்சிகள் சுற்றித்திரிந்த நுளம்பி ஆற்றங்கரையில் தவம் இயற்றத் தொடங்கினர். ‘நுளம்பி’ என்பதற்கு மின் மினிப் பூச்சி என்று பொருள். மின்மினிப்பூச்சிகள் நிறைய காணப்பட்ட காரணத்தால் தான், அந்த ஆற்றிற்கு ‘நுளம்பி ஆறு’ என்ற பெயர் வந்தது. நுளம்பி ஆறு என்பது இன்றைய கூவம் நதியே என்பது குறிப்பிடத்தக்கது. நுளம்பி ஆற்றின் கரையில் அமைந்த பகுதியே ‘நொளம்பூர்’ என்றானது.

    நுளம்பி நதிக்கரையில் அத்ரி மகரிஷியும் மார்க்கண்டேய முனிவரும், எவ்வித இடையூறுமின்றி தவத்தில் ஆழ்ந்தனர். விரைவிலேயே அவர்களின் நோக்கம் நிறைவேறத் தொடங்கியது. தவத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்த நாராயணனிடம், ‘வையகத்தைக் காத்தருளும் வைகுண்டவாசா! இந்த இடத்திலேயே பக்தர்களைக் காத்தருளும் பரந்தாமனாய் நின்றருள வேண்டும்’ என்று வேண்டினர்.

    அதனை ஏற்றுக்கொண்ட வைகுண்டபதி, ஸ்ரீதேவி- பூதேவியருடன் வைகுண்டவாசனாக எழுந்தருளினார்.

    ரிஷிகளின் தவபூமியாக விளங்கிய இந்த இடத்தில்தான் பெருமாளுக்கு ஆலயம் அமைத்தான் மல்லிநாத சம்புவ ராயன். அவன், தம் நாட்டு மீது படையெடுத்து வந்த மன்னர்களை வெல்வதற்காக, இத்தலம் வந்து வைகுந்தப் பெருமாளிடம் வேண்டினான். பெருமாள் அருளால் எதிரிகளை சுலபமாக வென்று மக்களைக் காத்தான். அதன்பிறகே இங்கு ஆலயம் அமைத்ததாக வரலாறு சொல்கிறது.

    தல புராண ரீதியாக பல யுகங்களைக் கடந்தது இந்த திருத்தலம். பூலோக வைகுண்டமாக விளங்கும் இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுந்தப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்மழை பொழிகின்றார். ஆறு அடி உயர மரகதக்கல் திருமேனியில் வரதஹஸ்த நாயகனாகப் பெருமாளும், ஐந்தடி உயரத்தில் தாயார் இருவரும் கருணையே வடிவமாகவும் தரிசனம் தருகின்றனர்.

    கருவறையின் இருபுறமும் அத்ரி மகரிஷியும், மார்க்கண்டேய முனிவரும் பெருமாளை கை கூப்பி வணங்கிய நிலையில் இருப்பது சிறப்புக்குரியது.

    இந்த ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், ஹயக்ரீவர் கிருஷ்ணர் சன்னிதிகளும் உள்ளன. பிறப்பால் ஊமையான ஒரு குழந்தை, இங்குள்ள ஹயக்ரீவரை வழிபட்டுப் பேசும் திறன் பெற்றதாக செவிவழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளிலும், திருவோண நட்சத்திரத்திலும், பவுர்ணமி திதியன்றும் இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. நோய் தீரவும், எதிரி தொல்லை நீங்கவும், மன அமைதி பெறவும் இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வழிபாட்டு பலன்

    இத்தலத்தில் திருவோண நட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. அப்போது அஷ்டகர உத்தரணியில் தரப்படும் தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் தீரும். நீண்டகால நோய்கள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம். தொடர்ந்து ஐந்து திருவோணத்தன்று பூஜையில் கலந்துகொண்டு, தீர்த்தம் அருந்துவது சிறப்பான பலன்களைத் தரும். ஒன்பது திருவோண நட்சத்திர தினங்களில் பரிகாரத்தீபம் ஏற்றி வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமணம் கைகூடும்.

    இங்குள்ள ஆஞ்சநேயருக்குப் பரிகாரத் தேங்காய் கட்டி வழிபட்டால், வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றனவாம்.

    அமைவிடம்

    சென்னை மேற்கு முகப்பேர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெரிய நொளம்பூர் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து முகப்பேருக்கு அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி, வாவின் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தும் மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் வரலாம். இங்கிருந்து கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. 
    Next Story
    ×