search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில்
    X

    திருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில்

    ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.
    5-7-2018 ஆலய கும்பாபிஷேகம்

    ‘வீ ட்டைக கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார்' என்பது சொல்வழக்கு. ஏனென்றால் இரண்டுமே பலருக்கும் சிரமமான விஷயம். ஆனால், ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.

    திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பகுதியில் தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்து, அவனது பாவங்களைப் போக்கி அருளினார். பின்னர் பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அது முதல் அத்தலம் ‘வராகபுரி’ என்றானது.

    காலவமுனிவர் என்பவர் தமது இல்லறத்தின் பயனாய், தனக்கு பிறந்த 360 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பும் கொண்டு திகழ்ந்தனர்.

    தனது பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராகமூர்த்தியிடம் வேண்டினார் காலவ முனிவர். அதற்காக கடுமையான தவமும் இருந்தார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி' எனும் ஒரே பெண்ணாக்கினார். பின்னர் அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் சென்று ஆதிவராக மூர்த்தியாய், அதுவும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளினார்.

    வராகபுரியில் ஆலயக் கருவறையில் ஆதிவராகப்பெருமாள், அகிலவல்லி தாயாரை தாங்கிய வண்ணமும், அதில் வராகப்பெருமாளின் ஒரு திருவடி பூமியில் பதித்தும், மற்றொரு திருவடியின் கீழ் ஆதிசேஷனும், அவரது மனைவியும் உள்ளனர். இங்கு கருவறையில் வராகப்பெருமாள் தமது இடது காலை மடித்து, இடது மடியில் அகிலவல்லி நாச்சியாரை தாங்கி அருள்கிறார். இறைவனின் வலது மேற்கரம் சக்கரமும், இடது மேற்கரம் சங்கும் தாங்கியிருக்கிறது. கீழ் இடது திருக்கரம் அகிலவல்லி தாயாரின் திருவடியை தூக்கிய வண்ணமும், கீழ் வலது திருக்கரம் அகிலவல்லி தாயாரை அணைத்தபடியும் உள்ளது.

    ஆலய உள்சுற்றின் கோஷ்டத்தில் விநாயகரும், வைஷ்ணவியும் எழுந்தருளி உள்ளனர். பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு தனிக்கோவிலில் நாச்சியாராக எழுந்தருளி இருப்பவர், கோமளவல்லி தாயார் ஆவார். இவர்தான் காலவமுனிவரின் 360 பெண்களில் முதல் பெண் ஆவார். இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திருஇடவெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய திருஷ்டிப்பொட்டு உள்ளதாம். இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு மூலவர் ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், அவரது மனைவியும் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது.



    இது தவிர காரியத் தடை,திருமணத் தடைகளையும் உடனே உடைத்தெறியும் திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலி சக்கரவர்த்திக்கு வராகர், ஆதிவராகராக சேவை சாதித்தருளினார். எனவே இங்கு வழிபட்டால் வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோகம் உண்டாகும் என்கிறார்கள்.

    ஆம்! வராகமூர்த்தியின் அவதார நோக்கம், இரண்யாட்சனிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்டு வந்ததுதான். இங்கு வெளிப் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கநாதர், ரெங்கநாயகி சன்னிதிகளும் உள்ளன. சுக்ர தோஷம் அகல இத்தல ரெங்கநாதர் வழிபாடு துணைபுரியும் என்கிறார்கள்.

    இங்கு ஆதிவராகமூர்த்தியின் கருவறையில் பசுநெய் சேர்த்து வழிபடுவது, பற்பல கிரக தோஷங்களை அகற்றும் என்கிறார்கள். திருவிடந்தை வராக மூர்த்திதான் திருமலை திருப்பதியிலும் அருள்கிறார் என்கிறார் திருமங்கையாழ்வார்.

    திருமண பரிகாரம்

    பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மேன்மையை அறிந்து, தினமும் ஒரு பெண்ணுக்கு இங்கு திருமணம் செய்துவைத்தான். ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் அமையவில்லை. காத்திருந்து காத்திருந்து மனம் நொந்துபோனான். வராகரை வேண்டி அழுதான். அப்போது பேரழகு பொருந்திய மணமகன் வந்து அப்பெண்ணை மணம் செய்து கொண்டு, ‘மன்னா! எம்மைப்பார்’ என்று கூறி வராகராக திருக்காட்சிதந்து கருவறைக்குள் சென்று மறைந்தார். பின்னர் அம்மன்னன் ஆலய திருப்பணிகள் பல செய்தானாம்.

    திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.

    சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது. 
    Next Story
    ×