search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோவில்
    X

    ஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோவில்

    உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
    ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து ‘தஞ்சை பெரிய கோவில்’. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில், வலது புறம் கல்லணைக் கால்வாய், இடதுபுறம் சிவகங்கை பூங்கா, முன்புறம் ராஜா மிராசுதார் மருத்துவமனை இவைதான் பெரிய கோவிலின் தற்போதைய எல்லைகள். “பிரகதீஸ்வரர் கோவில்“ என வடமொழியிலும், “பெருவுடையார் ஆலயம்“ என தமிழிலும் அழைக்கப்படும்.

    இக்கோவில் கட்டப்படும் முன்பு இந்த இடத்தில் நைமி சாரண்ய முனிவர்கள் வாழ்ந்து வந்ததாக புராண வரலாறு கூறுகிறது. சுற்றுப்புறத்தில் மலைகளே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க கருங்கல்லால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. ராஜராஜன் இந்த கோவிலை கி.பி.1004-ல் தொடங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளான். 1010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மகாமேரு மலை

    உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். 216 அடி உயரமுள்ள விமானம் மகாமேரு மலையாக வடிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ் திசை சிகரத்தில் சிவபெருமான், உமாதேவி, குமாரர்கள், பிறதெய்வங் களின் சிற்பங்கள் உள்ளன.

    தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய தலைமை தச்சன் ‘குஞ்சரமல்லன்‘. ராஜராஜன், இந்த சிற்பிக்கு “ராஜாராஜப் பெருந்தச்சன்“ என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளான். பெரிய கோவிலின் வரலாற்றில் தொடர்புடைய வேறு பலரும் உள்ளனர். ராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டி முடித்துவிட்டு அதன் திருச்சுற்று மாளிகையின் பெரும்பாகத்தை எழுப்பும் பொறுப்பை தனது தளபதியான கிருஷ்ணன் ராமன் என்பவரிடம் ஒப்படைத்தான்.

    கேரளாந்தகன் கோபுரம்

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரமாகும். இதன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள 2 நிலைக் கால்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. 4 அடி நீளம், 3 அடி அகலம், 40 அடி உயரத்தில் ஒரே கல்லிலான இந்த 2 நிலைக்கால்களும் தஞ்சையில் இருந்து குறைந்த பட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக இந்த வாயிலுக்கு ‘கேரளாந்தகன் வாயில்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் இரண்டாவது கோபுரம் ‘ராஜராஜன் கோபுர வாயில்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திலும் 40 அடி உயரமுள்ள 2 நிலை கால்கள் உள்ளன.

    மகாநந்தி

    ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது.

    கோவில் கருவறையில் பிரகதீஸ்வரர் என்ற பெரிய லிங்கம் இடம்பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி 6 அடி அகலத்தில் சாந்தாரம் என்ற சுற்று அறை உள்ளது. இந்த அறைக்கு தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் மிகப்பெரிய வாயில்கள் உள்ளன. இங்கு படிக்கட்டுகள் கிடையாது. காற்று இவ்வறைக்குள் புகுவதற்கு இவை அமைக்கப்பட்டுள்ளன. கடுங்கோடையிலும் இச்சுற்று அறையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். இந்த அறையின் கட்டுமான அமைப்பு ஐம்பூதங்களுள் ஒன்றான காற்று இறைவனை ஆராதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கருவறையினுள் 13 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் கீழ் 55 அடி சுற்றளவு உடைய வட்ட பீடமும், 6 அடி நீள கோமுகமான நீர்த்தூம்பும் அமைந்துள்ளன.

    சிற்பங்கள்

    கருவறையில் உள்ள லிங்க வடிவத்துக்கு மேலாக விமானத்தின் உச்சியில் திகழும் கலசத்தின் பீடம் வரை இக்கட்டிடம் உட்புறம் முழுக்கூடாக அமைந்துள்ளது. பிரபஞ்சம் பெருவெளியாகவும், ஆடவல்லான் என்னும் வடிவமாகவும் அந்த இடத்தை கருதியதால் சிவபெருமான் ஆடிக்காட்டும் 108 கரண சிற்பங்கள் செதுக்கப்பட வேலை தொடங்கப்பட்டது. இவற்றுள் 80 கரண சிற்பங்கள் மட்டுமே முழுமை அடைந்துள்ளன. ( இந்த சிற்பங்களை செதுக்கும் போது ஏற்பட்ட சில சம்பவங்களால் இப்பணி தடைப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றன)

    பொற்கோவில்


    தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜன் கட்டியபோது விமானத்தின் மேல் செப்புத் தகடுகளைப் போர்த்தி, அவற்றின்மேல் பொன் பதித்ததாக அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் தங்கியுள்ள மேருமலை எவ்வாறு பொன்மலையாக விளங்குகிறதோ அதைப்போல தஞ்சை பெரியகோவிலும் பொன்மலையாக விளங்குகிறது’ என்று ஒட்டக்கூத்தர் தன் நூலில் எழுதி உள்ளார். விமானத்தின் மேல் பதிக்கப்பட்ட பொன் பிற்காலத்தில் படையெடுப்புகளில் சூறையாடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்தான் என்பது வரலாற்று உண்மை.

    Next Story
    ×