search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் நிவர்த்தி தரும் வைத்தீஸ்வரன் கோவில்
    X

    செவ்வாய் தோஷம் நிவர்த்தி தரும் வைத்தீஸ்வரன் கோவில்

    தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
    திருமாலும் பதுமம்வளர் அயன் முதலாம்
    கடவுளரும் திகழும் மேன்மை
    தருமாலின் நிழல் உறையுஞ் சனகாதியரும்
    வேளூர் தன்னிற் போற்றக்
    கருமாலின் தொடர்பகற்றி பதவிபெற
    மருந்தளித்துக் கருணை செய்ய
    வருமாலை இளம்பிறை சேர் வைத்யலிங்கம்
    பொன்னடியை வணக்கஞ் செய்வாம்.

    - புள்ளிருக்கு வேளூர் புராணம்

    செவ்வாய் தோஷம் என்று தெரிந்ததுமே ஜோதிடர்கள், “ஒரு தடவை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போய் பரிகாரம் செய்துவிட்டு வந்து விடுங்கள்” என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

    இந்த கோயில் பழங்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் அழைக்கப்பட்டது. புள் என்னும் ஜடாயு, இருக்கு என்னும் ரிக்வேதம், வேள் என்னும் முருகப்பெருமான், ஊர் என்னும் சூரியன் ஆகியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் “புள்ளிருக்குவேளூர்’ என்று பெயர் வந்தது.

    முருகனுக்குரிய சிறப்புத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள முருகப்பெருமான் “செல்வமுத்துக்குமரன்’ என்ற திருநாமத்தால் வழங்கப்படுகிறார். மாதம் தோறும் இங்கு கார்த்திகை நாளில் நடைபெறும் மகாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் செல்வக்குழந்தையாதலால் அன்றாடம் கெண்டியில் பாலை நிவேதனம் செய்வதும், முருகனுக்கு வழிபாடு நடந்தபின்னரே வைத்தியநாதசுவாமிக்கு வழிபாடு நடப்பதும் இத்தலத்திற்கே உரிய சிறப்பு.

    “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் பிள்ளைத்தமிழினை இம்முருகப்பெருமான் மீது குமரகுருபரர் பாடியுள்ளார். இந்த ஆலய “திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.”

    இந்த ஆலயம் தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றாகும். வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

    பெயர்க் காரணம்:

    புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.

    தீர்த்தம்:

    கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

    சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர்.

    இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.



    மூர்த்திகள்:

    சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது.

    அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

    தலப்பெருமை:

    முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளா கின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

    சடாயு குண்டம்:

    சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது.

    இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

    திருச்சாந்துருண்டை:

    இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர்.
    இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.

    தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

    திருவிழாக்கள் :

    நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார்.

    மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திருமுன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி.

    அங்காரக் க்ஷத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டு தோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன.

    “தையல் நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.

    இறைவனது பிரசாதம் சந்தனம்

    இத்தலத்தில் முருகப்பெருமான் ஸ்ரீசெல்வமுத்துக் குமரனாக வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அவருக்கு அர்த்தயாமப் பூஜையில் சந்தனம் சாத்தப்படும். இதனை அணிபவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கிறது. இக்கோவிலில் திருச்சாந்து உருண்டையாக இதனை விபூதியுடன் சேர்த்துக் தருவார்கள். இதனை உண்பவர்களுக்கு வினையெல்லாம் தீர்ந்து விடுகிறது.

    வேறு பெயர்கள்


    சடாயு பூஜித்தமையால் சடாயுபுரீ என்றும், வேதங்கள் பூஜித்தமையால் வேதபுரி என்றும், கந்தன் பூஜித்தமையால் கந்தபுரி என்றும், சூரியன் பூஜித்தமையால் பரிதிபூரி என்றும், அம்பிகை பூஜித்தமையால் அம்பிகாபுரி என்றும், அங்காரகன் பூஜித்தமையால் அங்காரபுரி என்றும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பெயர் உண்டு.
    இந்த ஆலயத்துக்கு தையல்நாயகி கோவில், வினை தீர்த்தான் கோவில் என்றும் பல பெயர்கள் உண்டு.

    முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போர் புரிந்த போது அவனது படைகள் காயமுற்றன. அது கண்டு வருந்திய -கந்தப் பெருமான் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டி தன் அம்மை அப்பரை அழைத்தாராம்.

    அம்மையப்பனே வைத்தியநாதரும், தையல் நாயகியுமாக வந்திருந்து அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்தனராம். இதனால் இந்த தலத்து இறைவன் வைத்தியநாதர் எனவும், அம்மாள் - தையல்நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.



    நித்ய பூஜைகளும் திருவிழாக்களும்

    நாள்தோறும் காமிக ஆகம விதிப்படி ஆறுகாலப் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரமோற்சவம் பங்குனி மாதம் நடைபெறுகிறது. ஸ்ரீசெல்வமுத்து குமாரசுவாமிக்குத் தை மாதம் திருவிழா நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து சித்தாமிர்தத் தீர்த்தத்தில் மூழ்கி சுவாமி தரிசனம் செய்வார்கள். உற்சவக் காலத்தில் சுவாமி எழுந்தருளும் போது கைலாசத்தில் சோமஸ்கந்தர் எழுந்தருளி இருப்பது போல் நடுவில் ஸ்ரீசெல்வமுத்துக் குமாரர் எழுந்தருளி வர சுவாமி ஒருபுறம் அம்மையார் மறுபுறமும் எழுந்தருளுவர்.

    மாதந்தோறும் வரும் கார்த்திகை நாட்களில் மற்றும் கந்த சஷ்டி நாட்களில் ஸ்ரீசெல்வமுத்துக் குமாரனுக்கு அபிஷேகம் நடைபெறும். அர்த்தஜாமப் பூஜையில் ஸ்ரீசெல்வமுத்து குமரனுக்கு வழிபாடு நடந்த பின்னரே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

    கோவிலின் அமைப்பு

    நகரின் நடுவே நால்புறமும் உயர்ந்த சுற்று மதில்களால் சூழப்பட்டு மிக அழகாக விளங்குகிறது. முன்புறம் ராஜகோபுரமும், பின்பக்கம் கட்டைக் கோபுரமும், தென்புறம் சாதாரண வாயில் ஒன்று இருக்கிறது.

    ஆலயத்திற்குள் இரண்டு பெரிய பிரகாரங்களும் திருமதிலின் வெளிப்புறம் மாடவிளாகமும் அமைந்திருக்கிறது. அம்மையும், அம்பிகையும் வலம் வர தனித்தனிப் பிரகாரங்கள் உள்ளன.

    ஆலயத்தின் கீழ் திசையில் வைரவக்கடவுளும், மேற்திசையில் வீரபத்திரக் கடவுளும், தென் திசையில் கற்பக விநாயகரும், வட திசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.

    மேலைக் கோபுர வாசல் வழியாகச் சென்றால் வெள்ளியாலும், தங்கத்தாலும் இரு கொடி மரங்கள் இருப்பதை காணலாம். கீழ்புறம் ஆறுமுகக்குமாரர் கர்ப்பக்கிருகம் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் ஆவுடையம்மன் என்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த பிரகாரத்தில் செல்வமுத்துக்குமார் சன்னதி உள்ளது. சன்னதிக்கு ஒரு கட்டை கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தின் தென்புறம் ஜூரகரேசுவரர், நவக்கிரக மண்டபம் உள்ளது.

    கிழக்கு முகமாகத் தண்டாயுதபாணி, தெற்கு முகமாக அங்காரகன் ஆகிய மூலவர்களின் சன்னதி அமைந்துள்ளது. கீழை பிரகாரத்தின் கீழ்பால் வேம்பு தலவிருட்சம் உள்ளது. இதுதான் ஆதி வைத்தியநாதபுரி என வழங்கப்படுகிறது. அங்குள்ள கட்டை கோபுர வாயிலையட்டி ஆதிபுராணேசுவரர், வீரபத்திரர் திருஉருவங்கள் உள்ளது.

    மடைப்பள்ளியின் மேற்கு முகமாக அன்னபூரணி அம்மன் திருஉருவம் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்திற்கு தெற்கில் அம்மன் சன்னதியில் சீத்தாமிர்த தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் நால்புறமும் திருமாளிகை பத்தி மண்டபங்கள் அமைந்துள்ளன.

    சுவாமி சன்னதியின் வடக்கே முதலில் பள்ளியறையும் அதற்கடுத்து சுக்ரவார அம்மன் உற்சவரும் தையல்நாயகி சன்னதியும் அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் முதல் வாயிற்படியின் இருபுறம் உள்ள குடைவறைகளில் வடக்கில் அதிகார நந்தி உற்சவரும், தெற்கில் சடாயு உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.

    சுவாமி சன்னதிக்கு மேற்குபுறம் செல்வமுத்து குமாரசாமி உற்சவர் வள்ளி தெய்வானையோடும் எழுந்தருளி உள்ளனர். அதற்கடுத்து கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் உள்ளனர். வடக்கு பகுதியில் ஸ்ரீநடராஜர் சிவகாமி அம்மையோடு எழுந்தருளியுள்ளார்.

    சுவாமி கர்ப்பக கிரகத்தில் வடக்கே எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மன் மகிமை மிக்கவள். கீழை திருமாளிகைப் பகுதியில் சூரியன் அங்காரகன் நீங்கலாக நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. தெற்கு பிரகாரத்தில் அறுபத்துமூவர் மூலவர்களும் சப்த கன்னிகளும் அமைந்துள்ளனர்.

    வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள்.
    Next Story
    ×