search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்
    X

    சீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்

    நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.
    இந்தியக் கூலித் தொழிலாளர்கள் தோற்றுவித்த ஆலயம், சிங்கப்பூர் அரசின் பாரம்பரியச் சின்னமான கோவில், தங்க விமானம், வெள்ளிரதம் கொண்ட கோவில், நவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.

    தலவரலாறு :

    சிங்கப்பூர் நகரை செம்மைப்படுத்த ஏராளமான இந்தியர்கள், கூலித் தொழிலாளர்களாக அந்த நாட்டுக்குக் கப்பலில் சென்றனர். அங்கே தினக்கூலியாக வேலைபார்த்த அவர்களுக்கு, வழிபட நம் நாட்டுதெய்வம் இல்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அதன் பயனால், அன்றைய சுண்ணாம்புக் கம்பம் என்று அழைக்கப்பட்ட, இன்றைய லிட்டில் இந்தியா பகுதியில் கி.பி. 1835-ல் எழுப்பப்பட்ட ஆலயமே, வீரமாகாளியம்மன் ஆலயம்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த, இந்தியத் தொழிலாளர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக, இக்கோவில் விளங்கியது. தமிழர்கள் தங்கள் கூலியின் சிறுபகுதியை ஆலய வளர்ச்சிக்கு செலவு செய்து மகிழ்ந்தனர்.

    தொடக்கத்தில் வீரமாகாளியம்மனுடன் பெரியாச்சி அம்மன் இடம் பெற்றது. அதன்பிறகு, விநாயகர், முருகன் ஆகிய தெய்வ வடிவங்களும் இடம் பெற்றன.

    கி.பி. 1908-ம் ஆண்டு ரிச்சர்ட் ஓவன் நோரீஸ் என்பவரிடம் இருந்து, 150 வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்தில் ஆலய கட்டுமானத்திற்கு பக்தர்களும், நிர்வாகிகளும் பேருதவி செய்தனர். ஆலயத்தில் வீரமாகாளியம்மன் திருவடிவம் நிறுவப்பட்டது.

    இதன்பிறகு, கி.பி. 1883-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான திருப்பணிகள் தொடங்கின. 1987-ல் ஆலயம் ராஜகோபுரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


    வீரமாகாளியம்மன்

    2012-ம் ஆண்டு ஆலய திருப்பணியின் போது அம்பிகையின் கருவறை விமானத்திற்கு தங்கக் கவசம் அமைக்கப்பட்டு, புதிய ஆறு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது. 2014-ம் ஆண்டு, சிங்கப்பூரில் முதன்முறையாக உத்தமபட்ச யாகசாலை எனப்படும், வீரமாகாளியம்மனுக்கு மட்டும் 33 யாககுண்டங்கள் அமைத்து மொத்தம் 74 யாககுண்டங்களுடன் மஹாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    இன்று இவ்வாலய வீரமாகாளியம்மன், சிராங்கூன் பகுதிமக் களைக் கடந்து, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் இஷ்டதெய்வமாய் திகழ்கிறாள்.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலைகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம். அதற்கடுத்து விநாயகர், மூலவர் வீரமாகாளி யம்மன், முருகர், நடராஜர்- சிவகாமி, மாணிக்கவாசகர், காலபைரவர், சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர், மதுரைவீரன், முத்தால்ராயர், 18 கை துர்க்கை, சரஸ்வதி, சமயபுரத்தம்மன், பெரியாச்சியம்மன், ராமர்- சீதா, லஷ்மணர், அனுமன், சிவன், பார்வதி, நால்வர், நவக்கிரகம், சண்டிகேசுவரர், நாகர், பள்ளியறை எனஅனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.

    அன்னை வீரமாகாளி நடுநாயகமாக அமர்ந்த கோலத்தில் வலதுகாலை மடக்கி, இடதுகாலை தொங்கவிட்டு எட்டுகரங்களும்.. சிரித்த முகமுகமாக காட்சியளிக்கிறாள். அன்னையின் திருமுகம் நம் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது.


    மதுரைவீரன், சின்ன கருப்பன், பெரியகருப்பன்

    விழாக்கள் :

    மாசி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. மக நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கிறது. இது தவிர, வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் அபிஷேகம், பவுர்ணமியில் வீரமாகாளி மற்றும் லட்சுமி துர்க்கை சிறப்பு அபிஷேகம் முதலியவை நடைபெறுகின்றன. நவராத்திரி யில் சண்டியாகம் 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்களின் மற்றும் தமிழர்களின் வசதிக்காகத் திருமணம் நடைபெற சமுதாயக்கூடம், அன்னதானக் கூடம் என பல்வேறு ஆறு சமூகநலப் பணிகளுக்கு ஆறு மாடிக் கட்டிடம் ஆலயத்தின் பின்புறம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் காலையும், மாலையும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    சிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா என்ற பகுதியில், சிராங்கூன் சாலையில் வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்ல ெரயில், பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.
    Next Story
    ×