search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் - திண்டுக்கல்
    X

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் - திண்டுக்கல்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.
    தல வரலாறு

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதிகளை சேர்ந்த நாடார் சமுதாயத்தினர் வேலை தேடி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு வந்தனர். அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதியில் அம்மை, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்த நாடார் சமுதாய பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனின் கோபத்தை குறைக்கும் வகையில் அப்பகுதியில் கோவில் கட்ட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மிக சிறிய அளவிலான கோவிலை அவர்கள் கட்டினர். கோவில் அருகே ஒரு தெப்பக்்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை மக்களுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கின. இது அம்மனின் அருளால் தான் சாத்தியமானது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் அடுத்து வந்த காலகட்டத்தில் அம்மனுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டு வருகின்றனர்.

    பக்தர்களின் குறைகளை தீர்க்கும் அம்மன்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகளில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறும்.

    மேலும் இந்த கோவில் வளாகத்தில் முதல் கடவுளாக விநாயகரும், துர்க்கையம்மன், சுப்பிரமணியசுவாமி, தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவான் காதில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி்க்கடனை சொல்லி வழிபட்டு வருவது கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

    கோவிலில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.



    தீச்சட்டி ஊர்வலம்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.

    மாவிளக்கு எடுத்தல்

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி ஊர்வலம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    நோய்களுக்கு மருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதே போல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கரும்பு தொட்டில் கட்டும் தம்பதிகள்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

    பூப்பல்லக்கில் வலம் வரும் அம்மன்


    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை பொறுத்தவரை எவ்வித சாதி, மத வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொள்வார்கள். குறிப்பாக பூப்பல்லக்்கு அன்று அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருந்து அம்மன் பூப்பல்லக்கில் வரும் ஆனந்த அருள்காட்சியை பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழ்வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் கடந்த சில நாட்களாக திருவிழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகிறார்கள். இதனால் மற்ற கோவில்களில் நடக்கும் திருவிழாக்களை விட நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் சாதிமத பேதமின்றி அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    நேர்த்திக்கடனாக வாழைப்பழம் சூறையிடுதல்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரத்தில் பக்்தர்கள் வாழைப்பழங்களுடன் கூட்டம், கூட்டமாக வருவார்கள். பின்னர் அந்த வாழைப்பழங்களை மாரியம்மனுக்்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அவற்றை சூறையிடுவார்கள். வாழைப்பழங்களை சூறையிடுவதால் அம்மனின் அருள் கிடைப்பதுடன், மக்களை வாட்டி வதைக்கும் நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மற்ற கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் வாழைப்பழங்கள் அபிஷேகம் செய்வதற்கும், இதர பூஜைகளுக்கும் பயன்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் தான் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்படும் வாழைப்பழங்களை சூறையிடும் வழக்கம் உள்ளது. இவற்றை கோவில் முன்பு கூடியிருக்கும் சிறுவர்கள், பக்தர்கள் அம்மனின் பிரசாதமாக நினைத்து அந்த பழங்களை சாப்பிடுகிறார்கள்.
    Next Story
    ×