search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்
    X

    நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்

    திருக்கழிப்பாலை கோவிலில் பால் வண்ணநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், லிங்கத்தின் ஆவுடையாரில் இருந்து வழியும் போது, அதனைப் பிடித்து அருந்தினால் நோய்கள் தீரும் என்கிறார்கள்.
    தென்னாடுடைய சிவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களில் முதன்மையானதும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயப் பெருவெளியைக் குறிக்கும் ஆலயமாகவும், இறைவன் ஆனந்தத் தாண்டவமாடும் தலமாகவும் விளங்குகிறது தில்லை என்னும் சிதம்பரம் ஆலயம். இங்கிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது சிவபுரி என்னும் அழகிய சிற்றூர். அங்கே அருகருகே இரட்டைக் கோவில்கள் இருக்கின்றன.

    ஐந்து நிலை ராஜகோபுரமும் எதிரே தெப்பக் குளத்துடன் திகழும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பண்ணிசை பெற்ற திருநெல்வாயில் எனும் சிவ ஸ்தலத்தில் கனகாம்பிகை சமேத உச்சிநாதர் வீற்றிருக்கிறார். அங்கிருந்து சுமார் 2 பர்லாங்கு தொலைவில் உள்ள இன்னொரு சிவாலயத்தில், சற்று வித்தியாசமான தோற்றத்துடன் விளங்கும் சிவலிங்கத்தையும் தரிசிக்கலாம்.

    திருக்கழிப்பாலை என்று குறிப்பிடப்படும் இத்தலத்தில் மூன்று அடுக்கு ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதை கைதொழுது உள்ளே நுழைந்தால், நந்தியம் பெருமான் கால்களை மடித்தபடி அமர்ந்திருக்க, கருவறையில் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டவுடன் அழகிய சிவலிங்கம் காட்சி தந்தது. ஆவுடையார் கருமை நிறத்திலிருக்க, லிங்கத் திரு உருவம் வெண்மையாக மேற்புறம் மூடப்படாமல் ஒரு குவளையைப் போலத் தோற்றம் தந்தது. இது வேறு எங்கும் காண முடியாத தோற்றம் என்பதால் வியப்பளிப்பதாக இருந்தது.

    வெண்ணிற லிங்கம் :

    சிவலிங்கம் வெண்மை நிறமாக இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘பால் வண்ணநாதர்’ என்று பெயர். இந்த சிவலிங்கத்திற்கு முக்கிய அபிஷேகமாக பாலாபிஷேகம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும் பால், லிங்கத்தின் ஆவுடையாரில் இருந்து வழியும் போது, அதனைப் பிடித்து அருந்தினால் நோய்கள் தீரும் என்கிறார்கள். இந்தப் பாலில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    சிவலிங்கத்தின் வடிவ மாற்றத்திற்கான கதையொன்றும் சொல்லப்பட்டது.

    சடகல் ராஜா என்பவர் குதிரை ஏறி இந்த ஊர் வில்வ வனம் வழியாகப் பயணம் செய்தான். அப்போது குதிரையின் குளம்படி பட்டு காட்டில் மரத்தடியில் மண்ணுக்குள் இருந்த சிவலிங்கம் தலையில் தழும்பை ஏற்படுத்தி விட்டது. இதை அறிந்ததும் அந்த மன்னன், சிவலிங்கத் திருமேனியை வெளியே எடுத்து, தனியாக பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்து வழிபட்டான்.

    அதன் பிறகு கபில முனிவர், இந்த ஆலயத்தில் தங்கியிருந்து தினமும் பூஜை செய்து வந்தார். அவருக்கு இறைவனும், இறைவியும் காட்சி கொடுத்தனர். இதை உணர்த்துவதாக கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறத்தில் கலையழகு மின்ன வடிக்கப்பட்டுள்ளன. இறைவன் கிழக்கு நோக்கிய சன்னிதியில் தரிசனம் தர, அதே மகா மண்டபத்தில் தெற்கு பார்த்த சன்னிதியில் வேத நாயகியாக நின்ற திருக்கோலத்தில் அபயஹஸ்தம் காட்டி அன்னையும் அருள் பொழிகிறாள்.

    இருவருக்கும் இடையில் சிவகாமி சமேத அம்பலக்கூத்தர், தென்திசை நோக்கி திருநடனம் புரியும் நடராஜ சபை விளங்குகிறது. திருச்சுற்றை வலம் வரும்போது தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்திப் பெருமாள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற மூர்த்திகளும் திருவருள் புரிகின்றன.

    கன்னிமூலை கணபதியும் வடமேற்கில் வள்ளி-தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமியும் தனிக் கோவில்களிலும் அருகே புவனேஸ்வரி அம்மனும் காட்சி தருகிறார்கள்.

    மேற்கு திசையில் பஞ்ச லிங்கங்களும், மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். எல்லாச் சிவாலயங்களைப் போலவே கோமுகம் அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது.

    ஈசானியப் பகுதியில் நவக்கிரகங்களும், அருகே காலபைரவரும் காட்சி தருகின்றனர். இந்த காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், காசியில் இருக்கும் காலபைரவருக்கு நிகராக கருணை செய்பவர் என்றும் அங்குள்ள மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். அதனால் தான் இவ்வூரின் சுற்றுப்புற பகுதி மக்கள், தேய்பிறை அஷ்டமி திதியில் பெரும் திரளாக வந்து கால பைரவருக்கு அபிஷேகம் செய்து, வடைமாலையும், செம்மலர் மாலையும் சாத்தி வழிபட்டு எல்லா கஷ்டங்களும் விலக பிராத்திக்கிறார்கள்.

    ‘எங்கேனுமிருந்து அடியேன் உனை நினைந்தால்

    அங்கே வந்தென் னொடும் உடனாகி நின்றருள்

    இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும்

    கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே’

    இப்படி பத்து பதிகங்களில் உருகிப் பாடிய வன்தொண்டர் சுந்தரர், ‘தான் நினைத்தபோது வந்து நின்று வினை தீர்ப்பவன் கழிப்பாலை கடவுள்’ என்பதில் இருந்து இத்தல இறைவனின் பேரருள் விளங்கும்.

    ‘ஐயனே அழகே அனலேந்திய

    கையனே கறைசேர் தருகண்டனே

    மையுலாம் பொழில்சூழ் கழிப்பாலை எம்

    ஐயனே விதியே அருள் எனுமே’

    என்று திருநாவுக்கரசர் 4-ம் திருமுறை, திருக்குறுந்தொகை, திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம் என பத்துப் பத்தாக ஐந்து தொகுப்புகளில் ஐயனைப் புகழ்ந்துள்ளார் எனும் போது எம்பெருமானின் மாட்சி நம் கண்முன்னே காட்சியளிக்கிறது.

    ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரே பாடியுள்ள போது, அதே காலகட்டத்தில் உலாவந்த சம்பந்தர் மட்டும் சும்மாயிருப்பாரா? அவரும் இரண்டு பதிகங்களில் இருபத்தி இரண்டு பாக்களால் கழிப்பாலை கண்ணுதல் பெருமாளை அர்ச்சித்துள்ளார்.

    கொள்ளிட நதியைத் தீர்த்தமாகக் கொண்டு, காவிரி வட கரைத் தலமாகத் திகழும் இவ்வாலயத்தை தேவார மூவரும் 8 பதிகங்களால் பரவியுள்ளனர் எனும்போது கழிப்பாலை நாயகனின் கருணை வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சிதம்பரத்திலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ் வசதிகளும், ஆட்டோ வசதிகளும் உள்ளன. சிதம்பரத்தை தரிசித்து விட்டு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள திருவேட்களம் எனும் பாடல் பெற்ற தலத்தையும், அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் சிவபுரியில் உள்ள திருநெல்வாயில், திருக்கழிப்பாலை ஆகிய தலங்களையும் தரிசித்து சிவபுண்ணியத்தை சேர்க்கலாமே.
    Next Story
    ×