search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணகியின் அவதாரமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
    X

    கண்ணகியின் அவதாரமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

    கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலை போல பெண்கள் மட்டுமே பொங்கலிடும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் இங்கு உள்ளது.

    இக்கோவில் உலகம் முழுவதும் அறிந்த கோவில் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு காரணம் இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழா ஆகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது.

    இப்படி சாதனை படைத்த இக்கோவிலின் வரலாறும் புராதன சிறப்பு கொண்டது. குறிப்பாக இக்கோவிலுக்கும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளது.

    தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும் புராணம் கூறுகிறது.

    மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது.

    இது போல உலகையாழும் பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார். அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார்.

    மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார். அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார்.அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது.

    அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோவிலேஇன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.

    இது போன்ற கதைகள் பல கூறப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தது ஆதிசங்கரர் ஆவார். இக்கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் மகிஷாசுர மர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதி சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

    இது போல கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்று சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலின் கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, அரக்கியை அடக்கி அவள்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறையில் 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.

    மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறையை ஸ்ரீகோவில் என்று அழைக்கிறார்கள். கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

    இக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் பகவதி அம்மனை வழிபடும் பெண்களுக்கு அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது, எதிரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வாய்ப்பு, வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட வழி பிறப்பது, திருமண தடை நீங்கவும் வழி பிறக்கும்.

    இதற்காக இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள். தினமும் வந்தாலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்காலை விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

    கோவிலின் முன்பு பொங்கல் வைக்கும் போது, கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மனான கண்ணகியும், ஒரு பெண்ணாக கோவி லின் முன்பு வந்து, பெண்களோடு பெண்களாக பொங்கலிடுவார் என்பது இக்கோவிலுக்கு வரும் பெண் களின் நம்பிக்கை.

    கண்ணகியோடு சேர்ந்து பொங்கலிடும் போது, கண்ணகியான பகவதி அம்மன் பெண் பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்பதும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    இதற்காக ஒவ்வொரு பொங் காலை விழாவிலும் பெண்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இவ்வாறு கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

    1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இது போல 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இது இக்கோவிலின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.

    ஆற்றுக்கால் கோவிலில் குடிகொண்ட பகவதியின் மேல் பக்தர்கள் கொண்ட நம்பிக்கையே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். இந்த ஆண்டும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாய் அந்தஸ்து: ஆற்றுக்கால் பகவதி அம்மனை இந்த ஊரின் தாயாக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விஷேசமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் வழங்கப்படுகிறது.

    நடை திறப்பு: இந்த கோவிலின் நடை அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

    போன் நம்பர்: 0471- 2456456, 2463130, 2455600
    Next Story
    ×