search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களின் வரலாறும் சிறப்புகளும்
    X

    குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களின் வரலாறும் சிறப்புகளும்

    குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவராத்திரி ஓட்டம் என அழைக்கப்படுகிறது.
    மகா சிவராத்திரி அன்று சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அந்த நாளில் குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவராத்திரி ஓட்டம் என அழைக்கப்படுகிறது.

    1. முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:

    சிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தான் தொடங்குகிறது. கோவில் மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டினம் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவில் உருவானது பற்றிய கதைகள் உள்ளன. மதுரை நாயக்க அரசர்களில் தலைசிறந்தவரான திருமலை நாயக்கரின் தாயான உதிச்சி, குழந்தைப்பேறு வேண்டி முன்சிறை சிவன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் தங்குவதற்காக கட்டப்பட்ட அரண்மனையே உதிச்சிக் கோட்டை எனப்பட்டது. உதிச்சிக்கு முன்சிறை மகாதேவர் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. அவள் வேண்டியபடியே அந்த குழந்தைக்கு கோவிலின் பெயரிலான திருமலை என்னும் பெயரை சூட்டினாளாம். கோவிலில் உள்ள தங்க அங்கியும், கீரிடமும் திருமலை நாயக்கரால் வழங்கப்பட்டது என கூறுகிறார்கள்.

    ராவணன் சீதையை சிறைவைத்த முதல் இடம் என்பது மற்றொரு கதை. ராமனும், லட்சுமணரும் சீதையை காணாமல் தேடி வந்தபோது திருமலை சிவனை கண்டு வழிபட்டனர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மூலவர் சூலபாணி என அழைக்கப்படு வதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக்கடவுளான பிரம்மனை முருகன் சிறைபிடித்து வைத்தான். இந்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவமே சூலபாணி என்ற கதையும் உண்டு.

    2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்

    இரண்டாவது ஆலயம் திக்குறிச்சி மகாதேவர் கோவில். முன்சிறை திருமலை கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வழி 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கோவில் கிழக்கு பார்த்தது. ஆனால் மக்கள் வடக்கு வாசலையே பயன்படுத்துகிறார்கள். நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் எடுக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் ஒரு கதை வழங்குகிறது. இக்கோவிலில் நந்தி இல்லை. இக்கோவிலில் மார்கழி, சதய நட்சத்திரத்தில் கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் விழா நடக்கிறது. கோவிலில் நிலையான கொடிமரம் இல்லை. திருவிழா காலங்களில் கமுகுமரத்தை வெட்டி கொடிமரமாக நடுகின்றனர்.

    3. திற்பரப்பு மகாதேவர் கோவில்

    திக்குறிச்சி ஊரில் இருந்து கிழக்கே அருமனை வழி 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் மூலவரான சிவன், வீரபத்திரர் என அழைக்கப் படுகிறார். வீரபத்திரரும், காளியும் தட்சனை வதம் செய்த பிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். இறைவன் ஆற்றை பார்க்கவே மேற்கே அமர்ந்திக்கிறான். மூலவரின் எதிரே நந்தி சற்று ஒதுங்கி இருக்கிறது. சிவன் கோபத்தின் உச்சியில் இருந்ததால் நந்தி இப்படி ஒதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தலத்தில் வழிபடுவது வழக்கம். இக்கோவிலின் சிறப்பு கோவிலை ஒட்டியிருக்கும் அருவி. தமிழகத்தில் உள்ள அருவிகளில் அதிக நாட்கள் தண்ணீர் விழும் இந்த அருவி திற்பரப்பு அருவி.

    4. திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்.

    மூன்றாவது கோவிலான திற்பரப்பு கோவிலில் இருந்து கிழக்கு தெற்காக குலசேகரம் சந்திப்பு வழி 8 கிலோ மீட்டர் சென்று திருநந்திக் கரை அடையலாம். இக்கோவில் நந்தி என்ற சமண துறவியின் பெயரால் அறியப்படுகிறது. இந்த ஊர்த்தலைவர் உளுத்துப்பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரை கோவில் சிவலிங்கம் மிதப்பது போல் கனவு கண்டார். அடுத்த நாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும் ஊர் மக்கள் கண்டனர். பின்னர் அரசரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இதுதொடர்பாகவும் ஒரு கதை உள்ளது. இக்கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இவ்வூருக்கு வந்தது. அது ஊர் மக்களை பயமுறுத்தி யது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே அமர்த்திக் கொண்டார். அது எழுந்து விடாமல் இருக்க குழியில் அமர்த்திக் கொண்டார். கோவில் கருவறை வட்டவடிவிலானது. கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களை குறிப்பன.



    5. பொன்மனை தீம்பிலான் குடி மகாதேவர் கோவில்.

    திருநந்திக் கரையில் இருந்து கிழக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இக்கோவில் தொடர்பாக வாய்மொழி கதை உள்ளது. இது காடாக இருந்த சமயம் காணிக்காரர் என்னும் சமூகத்தை சார்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தை கண்டான். இது ஊர் மக்களுக்கு தெரிந்து அங்கே ஒரு கோவிலை கட்டினர். அது தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. கருவறை லிங்கத்தின் மேல் வெட்டுப்பட்ட அடையாளம் உள்ளது. இது தலப்புராண கதையுடன் தொடர்புடையது.

    லிங்கத்துக்கு ஆவுடையில்லை. அஷ்டபந்தனம் செய்யப்படாத சுயம்புலிங்கம். சிவாலய ஓட்டக்காரர் களுக்கு தினைக்கஞ்சி, நல்லமிளகு சாறுத்தண்ணீர், சக்கா எரிசேரி தானமாய் கொடுப்பது காலங்காலமாய் நடக்கிறது. இதன் சுவைக் காகவும், உடல் வலி போக்கும் மருந்து தன்மைக் காகவும் பக்தர்கள் இவற்றை அருந்த அந்த இடத்துக்கு விரும்பி வருகின்றனர். ஆயில்ய பூஜைக்கு பெண்கள் அதிகம் கூடுகிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள் 41 நாட்கள் வில்வ இலையால் இந்த இறைவனை பூஜித்தால் நினைப்பது நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

    6. திருப்பன்னிபாகம் கிராத மூர்த்தி கோவில்

    பொன்மனையில் இருந்து சித்திரங்கோடு குமாரபுரம் முட்டைக்காடு வழி 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோவில் தொடர்பான தலபுராணம் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்த அர்ஜூனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையது. பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கப்பட்ட கோவில். மகா சிவராத்திரி விழா ஒன்று தான் இங்கே நடக்கும் சிறப்பு விழா. பிற விழாக்கள் இல்லை.

    7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்

    பன்னிரு சிவாலயங்களில் 7-வது கோவிலான கல்குளம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் திருப்பன்னி பாகத் தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் தனிக்கோவில்கள் உள்ளன. இரு கோவில்களையும் இணைக்கும் மண்டபம் உண்டு. பன்னிரு சிவாலயங்களில் அம்மனுக்கு தனிக்கோவில் இருப்பது இங்கு மட்டும் தான்.

    இக்கோவிலின் மேற்கே தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்க உயரம் 160 சென்டி மீட்டர். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டான். அந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டினான் என்பது ஒரு கதை.

    8. மேலாங்கோடு காலகாலர் கோவில்.

    ஏழாவது ஆலயமான பத்மநாபபுரம் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலாங்கோடு ஊரில் அக்கா, தங்கை என இரண்டு இசக்கிகளின் கோவில்கள் உள்ளன. அக்கா கோவிலின் அருகே சிவன் கோவில் உள்ளது. இந்த சிவனை தரிசிக்க என்று தனியாக பக்தர்கள் வருவதில்லை. இசக்கியை தரிசிக்க வருபவர்களே சிவனையும் தரிசிக்க வருகின்றனர். இதனால் சிவனுக்கு செவ்வாயும், வெள்ளியும் தான் உகந்த நாளாக இருக்கிறது.

    இக்கோவில் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறார். மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனிடம் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டும் வாழும் அறிவுள்ள பக்தியுள்ள ஒரு ஆண் வேண்டுமா, அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டான். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கிய போது சிவன் கோவிலினுள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனை குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் எனப்பட்டான். கருவறை மூலவர் காலகாலர் என அழைக்கப்படுகிறார். பன்னிரு சிவாலயங்களில் நேர்ச்சையாக வெடிவழிபாடு உள்ள ஒரே கோவில் இதுதான்.


     
    9. திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில்:

    நாகர்கோவில் -திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வழி தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வில்லுக்குறி பாலத்தின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் காடாக இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சியை இந்த கோவிலின் உருவாக்கத் திற்கு காரணமாக கூறுகின்றனர். ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தை கண்டனர். இந்த அதிசயத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தை பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் எனப்பட்டார். இக்கோவிலில் உள்ள நந்தி தொடர்பாகவும் ஒரு கதை உண்டு. இக்கோவில் நந்தி சிற்பம் செதுக்கியபோது அது உக்கிரம் அடைந்தது. அதன் கொம்பை சிற்பி உடைத்தார். அதன் அடையாளம் இப்போதும் தெரிகிறது.

    10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்:

    வில்லுக்குறி சந்திப்பை கடந்து தக்கலை கேரளபுரம் ஊர்களின் வழி தென்மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் திருவிதாங் கோடு உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் தெற்கே சிவன் கோவிலும், வடக்கே விஷ்ணு கோவிலும் உள்ளன. 2 கோவில்களின் முன் பகுதியில் செப்புக் கொடிமரங்கள் உள்ளன. மூலவர் லிங்க வடிவினர். கருவறை வாசலை விட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும்படி உள்ளது. இக்கோவிலில் மார்கழி திருவிழாவும், சிவராத்திரி திருவிழாவும் முக்கியமானவை. சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    11. திருப்பன்றிக் கோடு மகாதேவர் கோவில்:

    நாகர் கோவில்- திருவனந் தபுரம் சாலையில் உள்ள தக்கலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளியாடி அருகே உள்ளது. இக்கோவில் தொடர்பான கதை மகாபாரதம், அர்ச்சுனன் தபசுடன் தொடர்புடையது. அர்ச்சுன னுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ச்சுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ச்சுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றாக வராக அவதாரக்கதையுடன் இக்கோவில் புராணத்தை இணைத்துள்ளனர். கருவறை வட்ட வடிவில் உள்ளது. உள்பகுதி சதுர வடிவிலானது. மேற்கூரை கூம்பு வடிவினது. கார்த்திகை அஷ்டமி விழா, மாசி சிவராத்திரி விழா முக்கியமானது.

    12. நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:

    பன்னிரு சிவாலய ங்களில் நிறைவான சிவாலயம். மார்த்தாண் டத்தில் இருந்து கருங்கல் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சிவனும், திருமாலும் ஒருவரே என்ற தத்துவத்தை எடுத் துரைக்க, இறைவன் சங்கர நாராயணாக காட்சி தருகிறார். இங்கு சிவாலயமும், சங்கர நாராயணன் ஆலயமும் தனித்தனியாக அமைந்துள்ளன. இந்த 2 ஆலயத்தின் இடையே ஓர் அழகிய தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் சிவாலயம் ஓடும் பக்தர்கள் நீராடி சங்கர நாராயணனை வழிபட்டு சிவனும், திருமாலும் ஒருவரே என்ற உண்மையை உணர்ந்து மன நிம்மதி அடைந்து ஏகாதசி அன்று தொடங்கிய விரதத்தை சிவராத்திரி அன்று நிறைவு செய்வார்கள்.

    Next Story
    ×