search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏக்கங்கள் தீர்த்து வைக்கும் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்
    X

    ஏக்கங்கள் தீர்த்து வைக்கும் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்

    கும்பகோணத்திற்கு அருகே மணலூரில் உறையும் ஏழுலோகநாயகி, திருமாந்துறைக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறாள். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    கும்பகோணம் அருகே மணலூரிலுள்ள அந்த தாமரைக்குளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு கட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை நீரில் கேட்டபடி இருந்தது. முதலில் இது வெறும் பிரமை என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டவுடன், குளத்தில் சக்தி வீற்றிருப்பதையும், அவள் வெளிப்பட விரும்பு வதையும் விஷயம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

    உடனே சக்தியைத் தேடி ஊரார் குளத்திற்குள் இறங்கினர்.  நீருக்குள் மெல்லிய வெளிச்சம் பூசியது போன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பி கை சிலை வடிவில் புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். தலையில் மெல்லிய ரத்தக் கசிவை பார்த்த பக்தர்கள் மிரண்டனர். சிலையை கரை சேர்த்தனர்.

    திடீரென ஓர் அசரீரி ஒலித்தது: ‘என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங் கள். உரல் உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களை காப்பேன்’ஊர் மக்களுக்கு அதென்ன உரல், உலக்கை சத்தம் கேட்காத இடம் என்று புரியவில்லை. அந்த குளத்தில் பூத்த நாயகியை ஏந்திக் கொண்டு கூட்டமாக சென்றனர்.

    கிராமத்தை தாண்டினர். அப்போதும் எங்கேயோ ஓரிடத்தில் உரலின், உலக்கையின் சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. கிராமத்தின் எல்லையை தாண்டும்போது காடு போன்ற ஓரிடத்தில் அந்த சப்தம் கேட்கவில்லை. அங்கே சிலையை இறக்கினர். மின்னல் போன்ற ஒளி அம்மையின் முகத்தில் தோன்றி மறைந்தது. மக்கள் மனம் நிறைந்தனர். அங்கேயே சிறு கோயில் கட்டினர். இன்றும் சூரியனார் கோயிலுக்கும், திருமாந்துறை எனும் பாடல் பெற்ற தலத்திற்கும் வடக்கு பகுதியில் காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள்.   



    இந்த அன்னையின் திருவுருவம் மிகவும் ஆச்சரியமானது. பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும்.பார்ப்பதற்கு இந்தக் கோயில் சிறியதுதான். ஆனால், அருள் செய்வதிலும், கீர்த்தியிலும் மிக உயர்ந்தது. இந்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வரவே அஞ்சிய காலங்கள் உண்டு. ஆனால், இப்போது அன்னை சாந்தமூர்த்தியாக எல்லோரையும் அழைத்து அருள்பாலிக்கிறாள். இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறாள்.

    விநாயகர், வீரபத்திரருடன் அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். நல்ல உயரமான சிலையாக கம்பீரக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கிறாள். கேசத்தில் நெருப்பு ஜ்வாலை பறப்பது போன்ற அமைப்பும், சற்று தலையை சாய்த்து பார்க்கும் கருணைக் கோலமும் நம் நெஞ்சை நெகிழவைக்கிறது. தனித்து வனத்தில் அமர்ந்திருப்பதால் இவள் வனதுர்க்கையும் கூட.

    கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.

    Next Story
    ×