search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில்
    X

    பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில்

    புதுவை மாநிலம் பாகூர் முள்ளோடை அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    புதுவை மாநிலம் பாகூர் முள்ளோடை அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் புதுவை மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. சீதாதேவி சமேதமாக வீற்றிருக்கும் ஸ்ரீ பட்டாபிராமர் பக்தர்கள் வேண்டியதை வழங்கி அருள்பாலித்து வருகிறார். 

    இந்த கோவில் கட்டப்பட்டதன் பின்னணியில் முக்கிய வரலாற்று சம்பவங்கள் உள்ளன. பழங்காலத்தில் கடலூர் தேவனாம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் அங்கு கோட்டை கட்டினான்.

    இதற்காக திருவக்கரை மலையில் இருந்து கற்கள் வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்டது. மதிகிருஷ்ணாபுரம் வழியாக இந்த கற்களை கொண்டு சென்றனர். அப்போது மதிகிருஷ்ணாபுரம் நீர்நிலைகளும், இயற்கை வளமும் நிறைந்து செழிமையாக இருந்தது. 

    எனவே, கற்களை கொண்டு சென்றவர்கள் இங்கு அமர்ந்து இளைப்பாறி விட்டு செல்வது வழக்கமாக இருந்தது.தேவனாம்பட்டினம் மன்னரிடம் கிருஷ்ணன் என்ற மந்திரி ஒருவர் இருந்தார். 

    அவரும் கல் எடுக்கும் பணியை மேற்பார்வையிட செல்வது உண்டு. அவர் ஒரு தடவை மதிகிருஷ்ணாபுரத்தில் இளைப்பாறி கொண்டிருந்த போது, கண் அயர்ந்து தூங்கினார். அப்போது ஸ்ரீ ராமர் சீதாதேவியுடன் பட்டாபிராமராக காட்சியளித்து மந்திரி கிருஷ்ணனுக்கு அருள்புரிந்தார்.

    இதனால் கனவில் தோன்றிய ஸ்ரீராமருக்கு அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தார்.எனவே, கோட்டை கட்ட ஒவ்வொரு தடவை கற்களை கொண்டு செல்லும் போதும் அதில் ஒரு கல்லை இங்கே போட்டு விட்டு செல்லும்படி ஊழியர்களுக்கு கட்டளையிட்டார். 

    அதன்படி அவர்கள் கற்களை போட்டு விட்டு செல்ல ஏராளமான கற்கள் குவிந்தது. அதை வைத்து மந்திரி கோவிலை கட்டினார். கோவில் கட்டி இருந்த விஷயத்தை மன்னரிடம் சொல்லி கும்பாபிஷேகத்துக்கு அழைத்தார். 

    கும்பாபிஷேக விழாவில் மன்னர் கலந்து கொண்டு அந்த இடத்துக்கு மந்திரியாரின் பெயரையே மதிகிருஷ்ணாபுரம் என சூட்டினார். 

    அதில் இருந்தே புகழ் பெற்ற ஆன்மிக பூமியாக மதிகிருஷ்ணாபுரம் திகழ்ந்து வருகிறது.இந்த கோவிலில் பட்டாபிராமர், சீதாதேவியுடன் லட்சுமணர், அனுமரும் அருள்பாலிக்கிறார்கள். 

    சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூதேவி உபநாச்சிமார்கள் உற்சவர்களாக உள்ளனர். 

    தும்பிக்கை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், விஷ்ணு துர்க்கை, கருடாழ்வார், சேனை தலைவர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆளவந்தார் பிரகார தெய்வங்களாக உள்ளனர். கோவில் கோபுரம் 37 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தை பாக்கியம், கடன் பிரச்சினை, எதிரிகளால் தொல்லை போன்றவற்றுக்கு தீர்வு ஏற்படுவதுடன் செல்வ விருத்தியும் ஏற்படுவதாக நம்பிக்கை உள்ளது.

    கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. தெப்ப திருவிழா, பாரிவேட்டை, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, உரியடி உற்சவம், மாசி மகம், ஆற்று திருவிழா என பல விசேஷ நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. 

    இதே ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலும் புகழ்பெற்ற திருத்தலமாக திகழ்கிறது.
    Next Story
    ×