search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துயர் துடைக்கும் பேரூர் பட்டீசுவரர் கோவில்
    X

    துயர் துடைக்கும் பேரூர் பட்டீசுவரர் கோவில்

    பேரூரில் உள்ள பட்டீசுவரர் ஒரு சுயம்பு மூர்த்தி. இது‘முக்தி தலம்’என்பதால் இறந்தவர்களுக்கு கர்ம காரியங்கள் மேற்கொள்ள இங்கு வந்து செல்கின்றனர்.
    பரம்பொருளாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் பெருமை வாய்ந்தது பேரூர். இது கோவை காந்திபுரத்தில் இருந்து மேற்கே சிறுவாணி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு‘பட்டீசுவரர்’ என்ற திருநாமத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். 

    கோவை என்றாலே மருதமலையும், பேரூர் பட்டீசுவரர் கோவிலும் தான் நம் நினைவுக்கு வரும். பேரூரில் உள்ள பட்டீசுவரர் ஒரு சுயம்பு மூர்த்தி. இது‘முக்தி தலம்’என்பதால் இறந்தவர்களுக்கு கர்ம காரியங்கள் மேற்கொள்ள இங்கு வந்து செல்கின்றனர். இன்றைய காலகட்டத்திலும் பழமை சிதையாமல் கோவில் காட்சியளிப்பது, இத்தலத்தின் சிறப்பு.

    கோவைக்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள நடராஜர் சன்னிதிக்கு முன்புறம் மண்டபத்தில் உள்ள சிலைகளின் சிற்பங்களை பார்த்து வியந்து செல்கின்றனர்.‘பிறவா புளி’. ‘இறவா பனை’ இந்த தலத்தின் சிறப்பு.

    இறைவனிடம் நம்முடைய காரியத்தை ஒப்படைத்து விட்டு நாம் நினைத்தது நடக்குமா..? என சந்தேகப்பட கூடாது. எந்த காரியம் என் றாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்று இருங்கள். அந்த காரியம் நீங்கள் நினைத்தப்படியே நிச்சயம் நடைபெறும். அது போல் தான் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரை துடைத்து, அவர்களின் இம்மை பிறவி துன்பத்தை நீக்கி முக்தி அளிக் கிறார் கோவை அருகே உள்ள பேரூர் பட்டீசு வரர்.

    பேரூரின் பெருமைகளை கச்சியப்ப முனிவர் தனது பேரூர் புராணத்தில் விளக்கமாக கூறி இருக்கிறார். இதில் மொத்தம் 32 படலங்கள் உள்ளன. அதில் வரும் நைமிச படலத்தை பற்றி பார்ப்போம்:-

    நைமிச சாரண்யம் அது. அடர்ந்த வனப்பகுதி. பூமாதேவியை எப்படியாவது எட்டி பார்த்து விட வேண்டும் என்று விரும்பிய ஆதவனின் ஆசையை வான் நோக்கி வளர்ந்திருந்த மரங்கள் தடுத்து நிறுத்தின. அழகிய மலையில் இருந்து தவழ்ந்த நதிமகள் இருகரைகளிலும் தொட்டு விளையாடியபடி கடல்நோக்கி சென்று கொண்டு இருந்தாள். வானில் ஓடும் மேகக் கூட்டங்கள், ஓடும் நதிநீரில் கண்ணாடி போன்று தெளிவாக தெரிந்தது. 

    நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து சவுனகர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் யாக வழிபாடுகளை செய்தனர். யாக குண்டத்தில் அக்னியை எழுந்தருள செய்து இருந்தார்கள். அகிலத்தை ஆட்டிப்படைக்கும் அந்த அகிலனின் மந்திரமான ‘நமசிவநாய’ என்பதை உச்சரிப்பதில் முனிவர்கள் தங்களை மறந்திருந்தனர். சவுனகரும் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். 

    யாகங்கள் எல்லாம் முடிந்த பிறகு, முனிவர்கள் அனைவரும், சவுனகரை வணங்கி, ‘சுவாமி..! தாங்கள் அருளிய பேரூர் புராணத்தை நாங்கள் மீண்டும் கேட்க விரும்புகிறோம். தாங்கள் அதை எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்’ என்று பணிந்து நின்றனர். சவுனகரும், அவர்களை பார்த்து, ‘தங்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் பேரூர் புராணத்தை எடுத்து சொல்லும் பாக்கியம் பெற்றேன்’ என்று கூறி அதை சொல்லத்தொடங்கினார்.

    பனிமலை சூழ்ந்த திருக்கயிலை மலை அது. சிவகணங்கள் அனைத்தும் சிவமந்திரத்தை உச்சரித்து மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தனர். திருச்சடையில் கங்கையை ஏந்தியும், சிரசுவில் பிறை சந்திரனை சூடியும், கழுத்தில் வாசுகி மாலையாக அணிவித்தும், புலிதோல் போர்த்தி மெஞ்ஞானத்தை உமாதேவியருடன் அருள்பாலித்து கொண்டு இருந்தார் சிவபெருமான். 

    உமாதேவியருடன் காட்சி தரும் சிவனின் அழகை தரிசித்தவாறே சிவ கணங்கள் தாங்கள் பெற்ற பாக்கியத்தை எண்ணி மனம் மகிழ்ந்தனர். நந்திதேவரும், அந்த உமையதொரு பாகனை சுமக்கும் பாக்கியம் பெற்றதற்கு மனம் மகிழ்ந்தார். இருப்பினும் அகிலமும் அரசாளும் அந்த பரமனின் திருத்தலங்களில் கயிலைக்கு ஒப்பான திருத்தலம் யாது..? என்பதை கேட்டு அறிய ஆவல் கொண்டார். ஆதலால், சிவபெருமானின் திருவடி கமலங்களை வணங்கி, ‘தேவரீர்! தாங்கள் எழுந்தருளிய திருத்தலங்களில் திருக்கயிலைக்கு ஒப்பான திருத்தலம் எது?’ என்று கேட்டார்.

    ‘‘நந்தியே! உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம் ஆகியவற்றுக்கு இணையான சிறப்புகள் கொண்டது, தட்சிண கயிலாயம். இதில் உப்பு நீரே அல்லாத சுத்தமான கடலில் எழுந்தருளி உள்ள கயிலாயம் உத்தர கயிலாயம். யாம் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மத்திய கயிலாயத்தை தேவர்களும், முனிவர்களும், மற்றவர்களும் எளிதில் தரிசிக்க இயலாதது. (மத்திய கயிலாயம் என்பது இமயமலையில் இருக்கிறது. 

    இந்த கயிலாயத்துக்கு சிவனின் அருள் இருந்தால் தான் சென்று தரிசிக்க முடியும்) ஆனால் பேரூர் என்னும் ‘தட்சிண கயிலாயம்’ அனைவரும் தரிசிக்கவல்லது. எளிதில் மோட்சங்களை கொடுக்கவல்லது. தென் கயிலாயத்தில் வெள்ளியங்கிரி மலையாய் யாம் வீற்றிருக்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்தார்.

    நந்திதேவர் மூலமாக முருகப்பெருமானும், நாரதரும், வியாச முனிவரும், சிவன் அருளிய பேரூர் வரலாற்றின் மகிமைகளை தெரிந்து கொண்டனர். வெள்ளியங்கிரி மலையே சிவனாக எழுந்தருளி இருப்பதாகவும், அதன் திருமுடி வெள்ளியங்கிரி கிரிமலை ஆண்டவர் கோவில் என்றும், திருப்பாதம் பேரூர் பட்டீசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.‘திருவடி’ என்பதால் தான் என்னவோ இத்தலம் முக்தி தலமாக போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தை, நாரதர் தரிசித்த வரலாற்றை அடுத்த வாரம் காண்போம்.
    Next Story
    ×