search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அபயம் அளிக்கும் அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோவில்
    X

    அபயம் அளிக்கும் அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோவில்

    தேடிவரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரிவழங்கி வரும் ‘அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள்’ கோவிலின் வரலாற்றையும், சிறப்பையும் பார்ப்போம்.
    தன்னை வணங்குபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் தந்து வாழ்வின் துன்பங்களை போக்கி நிலையான இன்பம் தருவதில் பெருமாளுக்கு நிகர் பெருமாளே. செல்வத்தில் சிறந்த ஸ்ரீதேவியை தன்னுள்ளே நிறுத்தி, தேடிவரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரிவழங்கி வரும் ‘அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள்’ கோவிலின் சிறப்புகளைப் பார்ப்போம்.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளச்சிப்பாளையம் செல்லும் வழியில் கொன்னையாறு பஸ் நிறுத்தத்தில் அமைந்துள் ளது, அகரம் ஸ்ரீ சென்றாயப்பெருமாள் திருக்கோவில்.

    இது 4300 ஆண்டுகள் பழமையானது. அதை நிரூபிக்கும் சான்றுகளும் இத்திருத்தலத்தில் உள்ளன. இக்கோவில் வளாகம் திருமணிமுத்தாறு எனும் நதிக்கரையில் கிழக்குப்பார்த்து அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் மொத்தப் பரப்பளவான 22 ஆயிரம் சதுர அடியில், 12 ஆயிரம் சதுர அடி கொண்ட நந்தவனத்துடன், கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், பந்தல்மண்டபம், திட்டிவாசல், உள்-வெளி திண்ணைகளுடன் 22 அடி உயரம் கொண்ட அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் பெருமாளின் பக்தனான ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்ட கொடிகம்பம் ஆகியவை திருக்கோடி ஏற்றப்படும் மாடத்துடன் கோவிலில் அழகுற அமைந்துள்ளது.

    இக்கோவிலின் கருவறைத் தெய்வமாக புற்று வடிவ சென்றாயப்பெருமாள் வீற்றிருக்கிறார். மாடு மேய்க்கும் கண்ணனின் அம்சமாக ‘ஸ்ரீ சென்ற ஆயன்’ (ஸ்ரீ சென்றாயன்) இங்கு புற்று வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இது கருவறையில் உருவவழிபாடு இல்லாத பெருமாள் தலம்.

    கோவில் நந்தவனத்தில் இருந்து நாக தெய்வங்கள் தினசரி பலமுறை மூலஸ்தானத்தில் உள்ள புற்றுக்கு சென்று வழிபட்டு வருவதை ஆண்டாண்டு காலமாக இங்கு கண்டு வியந்து வந்துள்ளார்கள். கால மாற்றங்களால் சமீபத்தில் ‘டைல்ஸ்’ கற்களால் புதுப்பிக்கப்பட்ட கோவிலில் நாகங்களை காண்பது குறைந்துவிட்டாலும், இன்றும் நந்தவனத்தின் வடமேற்கு மூலையில் நாகங்கள் வசித்துவருவது இத்தலத்தின் சிறப்புகளுள் ஒன்று.

    இக்கோவிலின் சிறப்புகளாக பல விஷயங்கள் இருந்தாலும், நந்தவனத்தில் நாகரை மையமாகக்கொண்ட ‘ஸ்வஸ்திக்’ எனப்படும் தெய்வீக அமைப்பும், அதன் மையத்தில் வட்டவடிவ பீடத்தில் அமைத்துள்ள ராஜகிரகமான சூரியபீடமும் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. அதன்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஷட்கோண (ஆறுகோணம்) சுதர்சன சக்கரமும், ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் அருளாசியுடன் நிர்மாணிக்கப்பட்டு பக்தர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சூட்சும தெய்வீக சக்திகள் கொண்ட ஸ்ரீ சுதர்சனசக்கர மேடை தமிழ்நாட்டிலேயே வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக அமைகிறது.

    மேலும் ஸ்வஸ்திக்கின் எட்டுக் கட்டங்களிலும் அந்தந்த திசைகளுக்குரிய அதிபதிகளையும் ,கோள்களையும் பிற்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் கருங்கல் பீடங்களை அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவை கிழக்குத்திசை அதிபதி இந்திரன், (கோள்-சுக்கிரன்), தென்கிழக்கு திசை அதிபதி சந்திரன், (கோள்-அக்னி), தெற்குதிசை அதிபதி யமன், (கோள்-அங்காரகன்), தென்மேற்கு அதிபதி நைருதி (கோள் ராகு), மேற்குத்திசை அதிபதி வருணன் (கோள்-சனீஸ்வரன்), வடமேற்கு அதிபதி வாயு, (கோள்-கேது), வடக்கு அதிபதி குபேரன் (கோள்-குருபகவான்), வடகிழக்கு அதிபதி ஈசானன் (கோள்-புதன்)

    சுதர்சன சக்கர மேடையின் கிழக்கில் திருமாலின் ஸ்ரீபாதம் கருங்கல்லில் வடிக்கப்பட்டு பக்தர்களுக்கு திருவடி தரிசனம் தருகிறது. அத்துடன் சுதர்சன மேடையை பக்தர்கள் சிரமமின்றி சுற்றிவர டைல்ஸ் பாதையும், வெயில், மழையில் ஒதுங்க நான்கு முனைகளிலும் பிரமிட் வடிவ நிழற்குடைகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.



    எம்பெருமான் பெருமாளிடம் பக்தர்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்தி அவைகளை நிறைவேற்றித் தருவதில் ஸ்ரீசுதர்சன அடியாருக்குப் பெரும்பங்குண்டு. ஆகவேதான் திருமாலின் வலது திருக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரம் இடம்பெற்று பக்தர் களுக்கு அருள்புரிகின்றது. இங்கு அட்சரவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசுதர்சன சக்கரம் சூட்சும சக்தியுடன் அருளும் வண்ணம் ஸ்ரீசுதர்சன சஹஸ்ரநாம பூசை, அஷ்டாஷரம், அஷ்டகரம், ஷோடஷாயுதம் உள்ளிட்ட மங்கள மந்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.

    மேலும் இந்த நந்தவனத்தில் நாகர்சிலையின் பின்புறம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் (பரிமுகப்பெருமாள்) சிலா ரூபம் அழகுற பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுதர்சனசக்கர சுற்றுப்புற மேற் கூரையைச் சுற்றி 12 ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டு 108 திவ்யதேசத்தில் வீற்றிருக்கும் பெருமாளின் திருவுருவப்படங் கள் அழகுற அமைந்து பக்தர்களை பரவசம் கொள்ளவைக்கிறது.

    இவ்வாலயத்தில் பெருமாள் வழிபாட்டுக்கு சிறந்த புரட்டாசி மாத சனிக்கிழமை, விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஏற்றப்படும் திருக்கோடி தீபம் காண ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். தீபம் ஏற்றியவுடன் வருணபகவான் மனம் மகிழ்ந்து மழை பொழிவது இங்கு நிகழும் அதிசயம். திருப்பந்த சேவையான தீப்பந்தங்களை கையில் தாங்கி ஆணிப்பாதுகைகளில் கோவிலை வலம்வந்து, வாணவேடிக்கைகள் முழங்க “கோவிந்தா” கோஷம் முழங்க ஏற்றப்படும் திருக்கோடி வைபவம் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அதுமட்டுமின்றி 52 வாரங்கள் சனிக்கிழமைகளில் பக்தர்களின் சார்பில் இங்கு தொடர்ந்து திருக்கோடி ஏற்றப்படுவது தனிச்சிறப்பு.

    இக்கோவிலின் சிறப்புகளை பெருமாளே மனமுவந்து ஏற்றுக்கொண்டதற்கு சான்றாக நந்தவனத்தின் வாயு மூலையில் சுயம்பு வடிவில் ஒரு அடி உயர வேப்பமரம் அமைந்துள்ளது. அதன் தண்டிலிருந்து 10 அடி உயரமுள்ள, 5 நீண்ட தனித்தனிக்கிளைகள் 5 சர்ப்பங்கள் ஆக ஐந்து தலை நாகங்கள் போன்று காட்சியளிக்கின்றன. இந்த அதிசய வேப்ப மரத்தை சுயம்பு பஞ்சமுக சென்றாயனாக பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

    இத்திருத்தலத்தில் தினசரி வழிபாடு, அமாவாசை, பவுர்ணமி போன்ற சிறப்புதினங்கள், தமிழ்ப்புத்தாண்டு சித்திரை விஷுக்கனி உற்சவம், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, கார்த்திகை மாத பரணி தீபத்திருநாள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் திருக்கோடி, போன்ற விசேஷங்களுடன் அன்னதானமும் நடைபெறுகிறது.

    அஷ்டஅஷர நாயகனான நாராயணன் அம்சமான அறுகோண ஸ்ரீ சுதர்சனசக்கர பீடத்தை 9 முறை 9 வாரங்கள் வலம்வந்து பிரார்த்தனை செய்தால் ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகதோஷங்களில் இருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி, சந்தானபாக்கியம், தனலாபங்கள் பெற்று சுபிட்சம் பெறுவது உறுதி என்கின்றனர் இங்கு வந்து வழிபட்டு வாழ்வை சீராக்கிக் கொண்டவர்கள்.
    Next Story
    ×