search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டிற்கு 28 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கொட்டியூர் திருத்தலம்
    X

    ஆண்டிற்கு 28 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கொட்டியூர் திருத்தலம்

    கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் கொட்டியூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள மகாதேவர் கோவில் ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது.
    கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் கொட்டியூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள மகாதேவர் கோவில் ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சிவபெருமான் இல்லாமல், இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து, மூன்றாவதாக ‘பிரகஸ்பதீஸ்தவ’ எனும் வேள்வியையும் நடத்த முடிவு செய்தான். அந்த வேள்வியில் கலந்து கொள்ளும்படி சிவபெருமானைத் தவிர அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.

    தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில், கணவருடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டுமென்று பார்வதி தேவியும் விருப்பம் கொண்டாள். தன் விருப்பத்தை ஈசனிடம் தெரிவித்தாள்.

    ‘அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே வந்து சேரும். நாம் அங்கு செல்ல வேண்டாம்’ என்றார் ஈசன்.

    பார்வதி தேவி அதைக் கேட்கவில்லை. தட்சன் நடத்தும் வேள்விக்குத் தனியாகச் சென்றாள். அங்கு தட்சன், பார்வதியையும் சிவபெரு மானையும் அவமதித்துப் பேசினான். அதனால் கோபமடைந்த பார்வதி தேவி தனது உயிர் அங்கேயே போகும்படிச் செய்தார். இதனையறிந்த சிவபெருமான் வேள்வி நடக்குமிடத்திற்குச் சென்று தட்சனின் தலையைத் துண்டித்து எறிந்தார்.

    தட்சனின் தலையைத் துண்டித்த பின்பும் கோபம் குறையாத சிவ பெருமான், அங்கேயே ஓரிடத்தில் சுயம்புவாகத் தோன்றினார் என்றும், அந்த இடம் கேரளாவிலிருக்கும் கொட்டியூர் என்றும் தல புராணம் சொல்கிறது. இத்தலம் பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த தலம் என்பதால் ‘கூடியூர்’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கொட்டியூர்’ என்று மாறிப்போனது.

    இரண்டு கோவில்கள் :

    கொட்டியூரில் ஓடும் மாவேலிப்புழை எனப்படும், பாவலி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்திருக்கின்றன. இக்கரையில் அமைந்த கோவிலை இக்கரைக் கொட்டியூர் என்றும், அடுத்த கரையில் அமைந்த கோவிலை அக்கரைக் கொட்டியூர் என்றும் அழைக்கின்றனர்.

    இக்கரைக் கோவில், சற்று உயரத்தில் இருக்கிறது. மிகப் பழமையான இக்கோவிலுக்குச் செல்லப் பல படிகள் ஏற வேண்டும். இங்கு இரண்டு சிலைகள் இருக்கின்றன. இடப்பக்கம் உள்ள சிலையைப் பார்வதி தேவியாகவும், வலப்பக்கம் உள்ள சிலையைச் சிவனாகவும் வழிபடுகின்றனர்.

    அக்கரைக் கோவிலானது, அரை அடி தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு குளமும், அதனுள் கருங்கல்லால் ஆன நான்கைந்து மேடைகளும் இருக்கின்றன. அந்தக் குளத்திற்கு ‘திருவஞ்சிற’ என்று பெயர். இந்த இடம், தட்சன் நடத்திய வேள்வியில் வேள்விக் குண்டமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.



    குளத்தின் தென்கரையில் உள்ள பகுதியில், விழாவின் போது மூன்று பந்தல்கள் போட்டு, ஒன்றை ஆபரண அறையாகவும், மற்றொன்றை வாள் வைக்கும் அறையாகவும், மூன்றாவதை மடப்பள்ளியாகவும் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள முக்கியமான மேடைக்கு ‘மணித்துறை’ என்று பெயர். அதில் ‘கொட்டியூர் பெருமாள்’ என்று அழைக்கப்படும் மகாதேவர் சுயம்பு லிங்கமாய் ஒரு பள்ளத்தில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி தாட்சாயணி அக்னிப்பிரவேசம் செய்து மறைந்த இடம் என்று சொல்லப்படும் மேடை ஒன்றிருக்கிறது. அதனை ‘அம்மாறக்கல்’ என்று சொல்கின்றனர்.

    வைகாசிப் பெருவிழா :

    கேரள நாட்காட்டியின்படி இடபம் (வைகாசி) மாதம், சுவாதி நட்சத்திர நாளன்று தொடங்கி மிதுனம் (ஆனி) மாதம் சுவாதி நட்சத்திரம் வரை மொத்தம் 28 நாட்கள் அக்கரைக் கொட்டியூரில் வைகாசிப் பெருவிழா (வைகாச மகோற்ஸவம்) நடைபெறும். இந்த நாட்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழிபாடு நடைபெறுவதில்லை. அக்கரைக் கொட்டியூரில் விழா நடைபெறும் நாட்களில் இக்கரைக் கொட்டியூரில் வழிபாடுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. மற்ற நாட்களில் அங்கு தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அக்கரைக் கொட்டியூரில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. திருவிழா நடைபெறும் நாட்களில் மட்டுமே ‘கையாலா’ எனப்படும் சிறு குடிசைகள் அமைக்கப்பட்டுப் பக்தர்கள் தங்குகின்றனர். வைகாசிப் பெரு விழாவின் போது ‘மணித்துறை’ எனுமிடத்தில் பந்தல் போட்டு தற்காலிகக் கருவறையை அமைக்கிறார்கள்.

    சிவபெருமான், தட்சனைக் கொன்ற வாளை அங்கிருந்து வீசியெறிய அது 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘முதிரேரிகாவு’ எனுமிடத்தில் விழுந்ததாக சொல்கிறார்கள். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் முதிரேரிகாவில் இருந்து வாளை இக்கோவிலுக்கு எடுத்து வரும் ‘வாள்எழுநலத்து’ எனும் விழா முதன்மையானதாக இருக்கிறது.

    கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், தலச்சேரி எனும் ஊரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொட்டியூருக்கு வைகாசிப் பெருவிழாக் காலத்தில் அதிக அளவில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

    சுற்றுப் பகுதிகள் :

    கொட்டியூரைச் சுற்றியுள்ள பல ஊர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, அவை தட்சன் நடத்திய வேள்வியுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. தட்சன் நடத்திய யாகத்துக்கு வந்த பார்வதிதேவி, யாகம் நடந்த இடத்தைத் தொலைவில் இருந்தே பார்த்த ஊர் `நீண்டு நோக்கி’ என்றும், பயணக் களைப்பால் சோர்வடைந்த பார்வதிதேவியின் நடை வேகம் குறைந்த இடம் `மந்தன்சேரி’ என்றும், வழியில் அவள் பால் காய்ச்சிய மலை `பாலுகாச்சி மலை’ என்றும், தட்சனின் தலையை வெட்டிய பிறகு சிவபெருமான் வாளை வீசிய இடம் `முதிரேரிக் காவு’ என்றும் அழைக்கப்படுகின்றன.

    தட்சனின் தாடி :

    சிவபெருமான், தட்சனின் தலையைத் துண்டித்ததன் நினைவாக ‘ஓடப்பூ’ என்று ஒரு பூ வைகாசிப் பெருவிழாக் காலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பூவை ‘தட்சனின் தாடி’ என்று அழைக் கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வாங்கி வைத்திருந்தால் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    Next Story
    ×