search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எதிரி பயம் நீக்கும் வேணுகோபால கண்ணன் கோவில்
    X

    எதிரி பயம் நீக்கும் வேணுகோபால கண்ணன் கோவில்

    சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேணுகோபால கண்ணன் ஆலயம்.
    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பவளக்காரத் தெரு. இங்கு வேணுகோபால கண்ணன் ஆலயம் அமைந்துள்ளது.

    பவள வியாபாரி ஒருவர் கனவில் கண்ணன் தோன்றி கடற்கரை ஓரம் தனக்கொரு ஆலயம் அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி அந்த வியாபாரி வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்டு வட மதுரைக் கண்ணனைக் கண்ணாறக் கண்டு, மனதைப் பறிகொடுத்தார். பின் அதே போன்று ஒரு சிலை வடித்து, யமுனை நீருடன் சென்னை வந்து, பவளக்காரத் தெருவில் வேணுகோபால கண்ணனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பின்னாளில் நிறைய சன்னிதிகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.

    ஐந்து நிலை ராஜகோபுரம் சீகிருஷ்ணா என்ற வண்ணப் பலகையுடன் நம்மை இந்த தலத்திற்கு வரவேற்கிறது. ஆலய ராஜகோபுரம், விமானம் மற்றும் கட்டிட அமைப்பை பார்க்கையில் இத் திருத் தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை நாம் அறியலாம். ராஜகோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் தீபஸ்தம்பம், பலிபீடம் மற்றும் கொடி மரத்தைக் காணலாம். இவ்வாலய கொடிமரம் 1894-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

    கர்ப்பக்கிரகத்தில் மூலவர் வேணுகோபால கண்ணன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வலது, இடது கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி இசைக்கும் கோலத்தில், வலது மற்றும் இடது பக்கங்களில் ருக்மணி மற்றும் சத்யபாமாவும், பின்புறம் பசுவுடனும் அருள்பாலிக்கின்றார்.

    உற்சவர் கண்ணன் சதுர்புஜங்களுடன், ருக்மணி- சத்யபாமா சமேதராய் காட்சி அளிக்கின்றார். மூலவர் சன்னிதிக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானின் சன்னிதி அமைந்துள்ளது. கருவறை விமானத்தில் திருமால் சயனம், லட்சுமி நரசிம்மர், ராமர் உருவங்கள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியே வருகையில் வெளிப் பிரகாரத்தில் இரண்டு யானை சிலைகள் கம்பீரமாக அமைந்து தாயார் சன்னிதிக்கு வழி காட்டுகின்றன. மூலவர் ருக்மணித் தாயார், தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் காட்சி தருகிறார். மூலவருக்கு சற்று முன்பாக உற்சவர் தாயார் எழுந்தருளியுள்ளார். புன்னகையுடனும், சேவிப்போரின் குறைகளை தீர்ப்பவராகவும் தாயார் திகழ்கிறார். தாயார் சன்னிதிக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் தாயார் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயார் கருவறை விமானத்தில் லட்சுமி திருவுருவங்கள் சுதைச் சிற்பமாக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

    மூலவர் சன்னிதிக்கு இடது புறத்தில் தனிச்சன்னிதியில் சீனிவாசர் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்னால் சீதேவி, பூதேவி சமேதராய் சீனிவாசர் உற்சவராக அழகிய வனப்புடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சி தருகிறார்.



    சீனிவாசர் சன்னிதிக்கு அடுத்த சன்னிதியில் மூலவர் மற்றும் உற்சவராக ஆண்டாள் கைகளில் சவுகந்தி மலர் ஏந்தி சவுந்தர்யமாய் அருள்பாலிக்கின்றார். ஆண்டாள் சன்னிதியை அடுத்துள்ள சன்னிதியில் மூலவர் மற்றும் உற்சவராக சீராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் சேவை அருளுகின்றனர். பெருமாள் சன்னிதிக்கும், தாயார் சன்னிதிக்கும் நடுவே அமைந்துள்ள மண்டபத்தில் தனிச்சன்னிதியில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம் யோக நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.

    பெருமாள் சன்னிதிக்கு வலது புறமுள்ள சன்னிதியில் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் எழுந்தருளியுள்ளார்கள். பெருமாள் இடதுபுறமுள்ள சன்னிதியில் சீராமானுஜர், மணவாளமாமுனிகள் எழுந்தருளியுள்ளனர். தாயார் சன்னிதியை ஒட்டியுள்ள மண்டபத்தில் விஷ்வக்சேநர், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், கூரத்தாழ்வார் சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன.

    திருமணம் கைகூட வெற்றிலை, பாக்கு, மாலை, பழங்களுடன் ஜாதகத்தையும் வைத்து பெருமாள் சன்னிதியில் அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வழிபடுகின்றனர். இந்த பிரார்த்தனை மூலம் விரைவில் திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க, காரிய சித்தி ஏற்பட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை வழிபடுகின்றனர்.

    வைகானஸ ஆகம முறைப்படி ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ஆலய தீர்த்தம் கிருஷ்ண புஷ்கரணி. ஆலய விருட்சம் பின்ன மரம்.

    வருடம் முழுவதும் உற்சவம் :

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் ஆடிப்பூரம், ஆண்டாள் உற்சவம், வெள்ளி தோறும் தாயாருக்கு உற்சவம், ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதம் சனிக்கிழமை சீனிவாசர் கருட சேவை, நவராத்திரி, விஜய தசமியன்று பரிவேட்டை, பவித்ர உற்சவம், ஐப்பசி மாதம் தீபாவளி, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், கார்த்திகை மாதம் தீப உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத உற்சவம், தை மாதம் ரத சப்தமி, தை அமாவாசை, மாசி மாதம் மகம் உற்சவம், பங்குனி மாதம் உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் என ஆண்டு முழுவதும் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    இவை தவிர அனுமன் ஜெயந்தி உற்சவம், மாத பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பெருமாள் புறப்பாடும், வெள்ளிக்கிழமைகளில் தாயார் புறப்பாடும், ஆழ்வார் ஆச்சாரியர்கள் வருட திருநட்சத்திர சாற்றுமுறைகளும் விமரிசையாக நடைபெறுகிறது. பகல் பத்து, இராப்பத்து உற்சவ நாட்களில் உற்சவருக்கு கிருஷ்ண லீலை காட்சிகளை அலங்காரமாக செய்கின்றனர். 
    Next Story
    ×