search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்
    X

    ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்

    சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.
    ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.

    1. அமுதம் நிறைக் கலசங்கள்
    கரங்களில் உடையவளாம்;
    குடமெனக் குவிந்தபடி
    அருள் பொழியும் நெஞ்சினளாம்;
    பாலனம் புரிந்து நமைக்
    காத்திடும் அம்பிகையாம்;
    புனிதர்க்கெல்லாம்
    பொற்பாதம் தருபவளாம்;
    திங்கள் முகப்பொலிவு
    எழிலார்ந்த இதழ்க்கனிவு,
    பீடுடைய வடிவினளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    2. விழிக் கடையில் அளப்பரிய
    கருணை மிகுந்து பொங்கும்
    நோக்குடையவளாம்;
    பொற்கரந்தனில் ஞான
    முத்திரை உடையவளாம்;
    கலைகளின் நித்ய வாசினியாம்;
    புனிதம் நிறையப் பொன் அணி
    மங்கலம் உடையவளாம்;
    தெய்வமாய் என்றென்றும்
    விழியாலே அருள்தருபவளாம்;
    துங்காநதி வாழ்த் தூயவளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழிமெய் சேர
    துதிக்கின்றேன்.

    3. பிறை நுதலில் வகிடென
    பொன்நகை தரித்தவளாம்;
    இன்னிசைப் பண்ணின்
    உன்னதம் நயப்பவளாம்;
    தொழுதவரைக் காத்தருளும்
    தனிப்பெரும் தேவியாய்த்
    திகழ்ந்து ஒளிர்பவளாம்:
    கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்
    திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;
    கண்கவரும் தொல் அணிமணியில்
    அகலாத விருப்பு உடையவளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்
    குஞ்சலங்கள் கொண்டவளாம்;
    மான்விழிப் பார்வையினும்
    வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;
    கிள்ளையோடிருக்கும் வாணியாம்;
    வானவன் இந்திர தேவன்
    வணங்கிடும் தேவதேவியாம்;
    அமுதபானம் விளைத்திடும்
    மந்தஹாச வதனமுடையவளாம்;
    கருங்கூந்தல் கவினழகொடு
    நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.
    5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;
    சுந்தரத் திரு வடிவினளாம்;
    விழியோவோடிப் பரந்தடர்ந்த
    கருங்கேசம் உடையவளாம்;
    ஒளிவிடும் கொடிபோலும்
    மென் உடம்பினளாம்:
    என்றுமுள நித்ய நாயகியாம்;
    உள்ளத்து எழும் எண்ணங்கடந்து
    நின்று நிலைத்திருப்பவளாம்;
    தவமுனிவர் தொழுதேற்றும்
    உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    6. மான்மீதும், மடஅன்னத்திலும்
    மாட்சியுற சிம்ம மதன் மீதும்
    கரி, பரி, இரண்டின் மீதும்
    ஆரோகணித்து இருப்பவளாம்;
    கழுகின் மீதும் காளையின் மீதும்
    வீற்றிருப்பவளாம்;
    நவராத்திரி நற்பொழுதில்
    நல்வாகனங்களாகிவிடும்
    இவைமீது அமர்ந்திருப்பவளாம்;
    இனிமையின் தனி உருவாகி
    என்றும் காட்சி தருபவளாம்.
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    7. கனல் போலும் செம்பிழம்பாகி
    ஒளிவீசும் செல்வழகுச்
    செந்திருவென ஜொலிப்பவளாம்;
    சகல சிருஷ்டிகளின் காந்தமிகு
    உருக்கொண்டவளாம்;
    பணிகின்ற நல்லடியாரின்
    நெஞ்சக் கமலந்தன்னில்
    தேனீயென ரீங்கரிப்பவளாம்;
    நாதத்தின், நர்த்தனத்தின்.
    உள்ளளி நிகர்த்த மேனியளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    8. படைக்கின்ற நான்முகனும்
    பள்ளி கொண்ட மாலவனும்
    மலை வாழும் மகேஸ்வரனும்
    பூசனை புரிந்து துதிக்கின்ற
    பெரும்சீர் படைத்தவளாம்
    தேசுமிகு புன்னகையின்
    திருவதனம் உடையவளாம்;
    காதணிக் குண்டலங்கள்
    ஊஞ்சலென அசைந்தாடி
    அழகுக்குத் தனியழகூட்டும்
    திருச்செவிகள் உடையவளாம்;
    என் தாயாகும் சாரதாம்பாளை
    சந்ததமும், மனம் மொழி மெய் சேர
    துதிக்கின்றேன்.

    Next Story
    ×