search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம்
    X

    கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம்

    கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

    நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

    அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

    குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    Next Story
    ×