search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம்
    X

    பித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம்

    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். கண்ணன் கைததலம் பற்றிய தெய்வப் பெண்ணே துளசிச் செடி வடிவில் நமக்குக் காட்சியளிக்கிறாள். பக்தி வெள்ளம் பெருகிப்பாய்வதற்கு வழிசெய்யும் திவ்ய நிகழ்ச்சிதான் கண்ணனை துளசி மணந்து கொள்ளும் சுபதினம். தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய பன்னிரண்டு நாட்கள் துளசி திருமணத்தை விமரிசையாக நடத்தும் வழக்கம் முக்கியமாக ஆந்திரா கர்நாடகப்பகுதியில் இருந்து வருகிறது.  

    துளசி திருமண விரத வைபவத்தைப் பார்க்க பித்ருக்களும் கூட வந்து கூடி விடுகிறார்களாம். எனவே துளசி திருமணம் நடைபெறும்போது, ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் விளக்கேற்றி வைத்து, "இதோ இந்த வீடுதான் உங்கள் சந்ததியார் வாழும் வீடு' என்று அந்தந்த வீட்டாரும் தங்கள் முன்னோருக்கு அடையாளம் காட்டுகிறார்கள். துளசி திருமணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வீட்டு பிள்ளைகளுடன் வந்து ஒரே கூரையின் கீழ் கூடி விடுகிறார்கள்.

    நடுக்கூடத்தில் திருமணப்பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமர்த்துகிறார்கள். மாலைப்பொழுதில் பூஜை அறையிலிருந்து சாளிக்கிராம வடிவில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பீடத்தோடு தூக்கி வந்து திருமணப்பந்தலின் கீழ் துளசி மாடத்தின் அருகே வைக்கிறார்கள். பூஜை அறையில் சாளிக்கிராமத்தை எடுப்பதற்கு முன் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தனியாக ஒரு பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு திருமணப்பந்தலின் கீழ் சாளிக்கிராமத்துக்கும் துளசிக்கும் அர்க்கியம் விட்டு பூஜை செய்து, திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பூஜைக்கு இடையிடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. வயது வித்தியாசமின்றி ஆண்கள் அனைவரும் கையில் கிண்ணுரமும், சேகண்டியும் வைத்துக் கொண்டு ஒலியெழுப்பியவாறு நாமசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

    திருமணம் நடந்தேறியதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சங்கீர்த்தனம் புரிந்தவாறு திருமணப் பந்தலை வலம் வரத் தொடங்குகிறார்கள். நாம சங்கீர்த்தனம் தொடரத் தொடர பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடுகிறது. வயது, அந்தஸ்து முதலான பிரமைகள் யாவும் நீங்கி விடுகின்றன. கண்ணனும் துளசியும் மணமக்களாய் கொலு வீற்றிருக்கும் திவ்ய தரிசனமே பிரக்ஞையில் நிரந்தரமாய்த் தங்குகிறது.

    அந்தப் பேரானந்தக் களிப்பில் கால்கள் தாமாகவே நர்த்தனமாடத் தொடங்கிவிடுகின்றன. கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருக உருகப் பாடிக் கொண்டே அனைவரும் நடனமாடுகிறார்கள். நீண்ட நேரம் நீடிக்கும் இந்தப் பரவசநிலை சிறுகச் சிறுகத்தான் தணிகிறது. அதன்பிறகு சாளக்கிராமத்தைத் திரும்பவும் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று அமர்த்துவதோடு துளசி திருமண வைபவம் நிறைவடைகிறது.
    Next Story
    ×