search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்
    X

    கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்

    சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    7-11-2018 அன்று கேதார கவுரி விரதம்

    ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான். அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள். சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடி, பார்வதி - பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.

    கோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.

    சிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி! பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.

    இதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே! நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உமக்கு?’ எனக் கோபமாகச் சொன்னாள்.

    அதற்கு முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

    பார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.

    அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.

    ‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.

    பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.

    முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.

    ‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப் படுவதாகும்.

    விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.

    அதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.

    கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.

    கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
    Next Story
    ×