search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரலட்சுமி விரதம் பற்றிய புராண கதைகள்
    X

    வரலட்சுமி விரதம் பற்றிய புராண கதைகள்

    கீழே உள்ள கதைகளை வரலட்சுமி விரதம் இருக்கும் தினத்தன்று வயதான சுமங்கலியின் வாயால் சொல்லிக் கேட்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    முன்பு ஒரு காலத்தில் சவுராஷ்டிர தேசத்தில் பத்ரஷ்ரவா என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி கசந்திரிகா அவளும் கணவனுக்கேற்ற மனைவியாக எல்லா வகையிலும் விளங்கினாள். எந்நேரமும் நல்ல சொற்களையே பேசி வேலைக்காரர்களை நல்ல முறையில் நடத்தி வந்தாள். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு சியாமா என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தார்கள்.

    தினமும் லட்சுமி பூஜை செய்யாமல் கசந்திரிகா உணவருந்த மாட்டாள். கணவனுக்கு மிகவும் உதவியாகவும், வயதான மாமனார், மாமியாரை போற்றிப் பாதுகாப்பதில் மிகவும் அக்கறை உள்ளவளாகவும் இருந்தாள் அந்த மாதரசி. இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமிதேவி அவளுக்கு அருள் புரிய எண்ணினாள். ஓர் ஆடி வெள்ளிக்கிழமை நாளில் மிகவும் வயதான சுமங்கலி போல கசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள்.

    அப்போதுதான் பகல் உணவு உண்டு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள் கசந்திரிகா. அந்த சுமங்கலியை வரவேற்று உரிய முறையில் உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள். “தாயே, தாங்கள் யார்? என்னை நாடி வர என்ன காரணம்“ என்று கேட்டாள்.

    அதற்கு லட்சுமி தேவி, “அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல். நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று அதிதிக்கு உணவிடாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா?” என்று கேட்டாள்.

    ஒருபோதும் கோபமே வராத கசந்திரிகாவுக்கு அன்று மிகவும் ஆத்திரம் வந்து விட்டது. “நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு அன்னையைக் கன்னத்தில் அடித்து விட்டாள். லட்சுமி தேவியும் ஒன்றும் சொல்லாமல் கண்கள் சிவக்க அந்த அரண்மனையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். அப்போது சியாமா அங்கு வந்து அந்த சுமங்கலியைப் பார்த்து, “தாங்கள் யாரம்மா? ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? உங்களை யாராவது ஏதாவது சொன்னார்களா? என்று பரிவோடு வினவினாள்.

    இதனால் உள்ளம் குளிர்ந்த திருமகள், “சியாமா, உன் அன்னைக்கு எப்படி லட்சுமிதேவியை முறைப்படி பூஜிப்பது என்பதை சொல்லிக் கொடுக்க வந்தேன். அனால் அவள் என் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்” என்றாள். உடனே “தாயே அந்தப் பூஜையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் முறைப்படி செய்கிறேன்” என்று சியாமா கூற, அவ்வாறே அன்னையும் பூஜை முறைகளை அருளிச் செய்தாள்.

    அன்று முதல் சியாமா ஒவ்வொரு வருடமும் அந்த பூஜையை மிகச் சிறப்பாகச் செய்து வந்தாள். லட்சுமிதேவி அரண்மனையை விட்டு நீங்கியதால் பத்ரஷ்ரவா அரசனின் செல்வங்கள் குறைய ஆரம்பித்தன. எல்லாச் செல்வமும் தன்னை விட்டுப் போகும்முன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளுக்கு அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற மன்னன் வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.

    ஒரு நிலையில் பத்ரஷ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும். தன் பெற்றோரின் நிலை சியாமாவை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியது. அவர்களை தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டுக் காத்து வந்தாள். ஒரு முறை அவள் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு தனது தாயிடம் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். கசந்திரிகா தெட்டதும் அந்தப் பானையில் இருந்த தங்கக் காசுகள் எல்லாம் கரித் துண்டுகளாக மாறி விட்டன.

    இதைக் கண்ட சியாமாவுக்கு அப்போது தான் தன் தாய் அந்த சுமங்கலியை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை. அந்த மகாலட்சுமியே தான் என்று உணர்ந்து அதை தன் தாயிடம் கூறினாள். தன் தவறை உணர்ந்த கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள்.

    அந்த தருணம் முதல் கசந்திரிகாவும் அந்த பூஜையை முறைப்படி செய்து வந்தாள். அதன் பலனாக அவள் கணவன் தைரிய லட்சுமியின் அருள் பெற்று, வீரத்துடன் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்று எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் முடி சூடினான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.

    இந்தக் கதையை வரலட்சுமி விரதம் இருக்கும் தினத்தன்று வயதான சுமங்கலியின் வாயால் சொல்லிக் கேட்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    வரலட்சுமி பூஜைக்கான மற்றொரு கதை

    வரலட்சுமி பூஜையால் பலன் பெற்ற மற்றொரு பெண் சாருமதி. அவள் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண்மணி. ஆனால் அவள் தன் கணவனிடமும், குழந்தைகளிடமும் காட்டிய ஈடுபாடு காரணமாக மனமிரங்கிய மகாலட்சுமி அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தன் கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர்.

    மானிடப் பெண்களுக்கு மட்டுமல்ல, தேவகுலப் பெண்களும் இந்த பூஜை செய்து பயனடைந்துள்ளனர்.சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் இருந்தாள். அவள் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.

    ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தால் அவளுக்கு உள்ள நோய் நீங்கும் என்று சொன்னாள்.

    சித்திரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலட்சுமி பூஜையைச் செய்ய அவளது நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். அவள் “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். லட்சுமியும் அவ்வாறே செய்வதாக கூறினாள். அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.

    வரலட்சுமி விரதம் பற்றிய புராணக்கதை

    சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடத்துக்கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.

    சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதி காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

    இன்று பெண்கள் புண்ணியநதிகளில் தீர்த்தமாடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். 
    Next Story
    ×