search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்
    X

    திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்

    வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். இத்திருநாளில் திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
    28-5-2018 வைகாசி விசாகம்

    வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது. இந்த மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

    இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ‘வி' என்றால் ‘பட்சி' (மயில்), ‘சாகன்' என்றால் ‘சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்' என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி.



    திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைப்பதுடன், எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

    வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெ றும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

    விரதம் இருக்கும் முறை

    வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

    திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
    Next Story
    ×