search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நலம் தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்
    X

    நலம் தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்

    இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அவரை விரதமிருந்து நாம் வழிபட்டால் பிரகலாதனுக்கு வழங்கியது போன்று நமக்கும் ராஜ வாழ்க்கையைத் தருவார்.
    இன்று (சனிக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி தினமாகும். நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.

    நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

    தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார்.

    இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளுருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.

    பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.
    பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

    அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றசாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான்.

    அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான்.

    யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான்.

    அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.
    இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.
    இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தது. இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

    இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை.
    அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது.

    அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார். இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அவரை நாம் வழிபட்டால் பிரகலாதனுக்கு வழங்கியது போன்று நமக்கும் ராஜ வாழ்க்கையைத் தருவார்.
    Next Story
    ×