search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனந்தம் தரும் நடராஜர் விரதம்
    X

    ஆனந்தம் தரும் நடராஜர் விரதம்

    விரதமிருந்து ஆருத்ரா தரிசனம் காண்போம்; நடராஜரின் அருள் பெறுவோம்; ஆண்டவனின் ஆனந்தத் தாண்டவம் பக்தர்களின் துன்பங்களை விலக்கட்டும்.
    இன்று (ஜனவரி2) ஆருத்ரா தரிசனம்

    மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும்போது சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தப் பெறும் அபிஷேகத்தையும் அதனை கண் குளிரக் காணும் வைபவத்தையும் ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கிறோம். சிவ பெருமானுக்கு ஒரு மகாசிவராத்திரி என்பது போல நடராஜருக்கு ஒரு ஆருத்ரா தரிசனம் என்பது காலம்காலமாக இந்துக்களின் மத்தியில் தொடர்ந்து வரும் வழிபாட்டு முறை.

    மார்கழியிலேயே அதிக குளிரான நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் பவுர்ணமி நன்னாள். அன்று அதிகக் குளிர்ச்சியை விரும்பும் நடராஜப் பெருமானுக்கு ஆறுவிதமான அபிஷேகங்கள் செய்து மேலும் அவரை குளிர்விப்பது நமது அனைத்து துன்பங்களையும் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை. ருத்ரன் என்பது அக்னி வடிவமாகத் திகழும் சிவனது அம்சம் எப்போதும் குளிர்ச்சியை தன்னகத்தே இணைத்துக் கொள்ளும் அமைப்பு கொண்டது. 

    தலையில் முயல்வடிவம் பொறித்த சந்திரன், கங்கா தீர்த்தம், உடலெங்கும் குளிர்ச்சி வடிவமான சர்ப்ப மாலை, பாதத்தில் குளிர்ச்சியான மூலிகை சமித்துகள் கொண்ட குஞ்சிதபாதம், அருகில் சந்திர அம்சத்தில் இமாலயக் குளிர்ச்சியில் தோன்றிய அம்பிகை என்று குளிர்ச்சி தேடும் இறைவனை இராக்கால வேளையில் ஆறுவித அபிஷேகம் செய்து மேலும் குளிர்வித்து, சந்தனக்காப்பிட்டு மேலும் குளிர்ச்சி பெறச்செய்தால், அன்றாடம் துன்பத்தில், துயரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பக்தர்களின் மனவேதனை, உள்ளக் குமுறல் அனைத்தும் தீரும் என்பது அடியார்கள் நம்பிக்கை.

    மார்கழிக் குளிரில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பி, உடுக்கையொலி கொண்டு உயிர்ப்பித்து நடனமாடவிடுவது இறைவனின் திருவிளையாடல். துயில் கொண்டுள்ள ஆன்மாக்களுக்கு உணவளித்துப் போஷிப்பது, உயிர் கொடுக்கும் மூச்சுக் காற்றைத் தருவது எல்லாம் இறையருள் சிவத்தின் வேலை. சிவத்தை நோக்கி ஆன்மா நகர்ந்தால் அது உயிர் பெறும். அல்லது சவமாகும். இதுதான் வாழ்வியல் தத்துவம் என்பதை உணர்த்தும் அபிஷேக முறைதான் திருவாதிரை வழிபாடு;ஆருத்ரா தரிசனம்.

    சிவம் என்பது அசையாதிருப்பது; ஞானசம்பந்தமாய் பரிமளிப்பது; அது ஆற்றல் வடிவமாகி ஆனந்த நடனம் புரிந்து ஆன்மாக்கள் வாழ வைக்கும் போது அது நடராஜ வடிவமாகிறது. சிவத்திற்கும், நடராஜ மூர்த்தத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். எனவே தான் இதனை மெய்ப்பிக்கும் வகையில் ரத்தினசபை என்னும் திருவாலங்காட்டிலும், பொற்சபை என்னும் சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம் என்னும் மதுரையிலும், தாமிரசபை என்னும் நெல்லை செப்பறையிலும், சித்தரசபை என்னும் குற்றாலத்திலும் எம்பெருமான் எழுந்தருளி எல்லா ஜீவராசிகளுக்கும் அருள் பாலிக்கிறான். என்பதை பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

    பஞ்ச சபைகள் என்று இருந்தாலும், ஆருத்ரா தரிசனம் நிகழ்வதில் தனித்துவம் பெற்ற தலங்கள் தில்லைச் சிதம்பரமும், திருஉத்திர கோச மங்கையென்று போற்றப்படும் ஆதிச் சிவன் கோவிலும் என்று பக்தர்கள் பரவசம் கொள்கிறார்கள். பொதுவாக இறைவனுக்கென்று ஆறுகால பூஜைகள் நடந்தாலும் இரவு பத்து மணிக்குள்ளாக அனைத்தும் நிறைவு பெற்று விடும். ஆனால் திருவாதிரை அன்றுதான் இறைவனுக்கு இரவில் அபிஷேகம் நிகழ்கிறது. அதற்கும் உரிய காரணமாக அக்னி வடிவிலான ருத்திரன் குளிர்ச்சியான வேளையில், சந்தனம் கலந்த நன்னீரால் அபிஷேகம் பெறுவதை நமது முன்னோர் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதியுள்ளனர்.

    சிதம்பரம் நடராஜருக்கு ஏன் திருவாதிரை வழிபாடு என்பதற்கும் வரலாறு ஒன்றுண்டு. சேந்தனார் என்ற புலவர் அன்றாடம் சிவவழிபாடு செய்த பின்னரே உணவருந்தும் வழக்கமுடையவர். பரம ஏழையான அவருக்கு ஒரு நாள் எந்த வகையிலும் உணவு தயாரிப்பதற்கான பொருள் கிடைக்கவில்லை. எனவே அவரும் அவரது மனைவியும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்திருந்த வேளையில் மனைவி சொன்னாள். 

    கொஞ்சம் மாவும், வெல்லமும் உள்ளது, அதைக் கொண்டு களி செய்து அடியார்க்கு உணவு படைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அதனை தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு சிவனடியார் பசியோடு அங்குவர, அவருக்கு அதனை வழங்கி மகிழ்ந்தார்கள். அடுத்த நாள் நடராஜர் சன்னதியில், தீட்சிதர்கள் பார்க்கும் போது சன்னதி முழுவதும் களி சிந்தியிருப்பதும் நடராஜர் திருவாயில் களியின் துகள்கள் இருப்பதைக் கண்டு திகைத்துப் போய் இத்தகைய கொடுமை செய்தது யாரென்று திணறிய போது சிவபெருமான் கனவில் தோன்றி சேந்தனார் பக்தி பற்றி கூறினார். 

    அந்நாள் திருவாதிரை நட்சத்திர நன்னாள் ஆனது. அன்று தொடங்கி மார்கழி திருவாதிரை அன்று நடராஜருக்கு களி படைத்து வழிபாடு செய்வதும், ஆருத்ரா தரிசனம் என்று நடராஜரின் ஆடல் காண்பதும், வழக்கமாக வர ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்ற பழமொழியும் பிறந்தது. ஆனால் திருவாதிரை அன்று களி செய்து நாம் மட்டும் உண்பதுஎன்றில்லாமல்... அன்றைய தினம், அன்னமின்றி தவிக்கும் ஓர் ஏழைக்கு உணவு போஷிப்பது நமது அனைத்து துன்பங்களும் விலக இறைவன் காட்டிய வழிமுறை என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும்.

    நட்சத்திரங்களிலேயே ‘திரு’ என்ற அடைமொழி பெற்ற நட்சத்திரங்கள் இரண்டு தான். ஒன்று திருவோணம், மற்றொன்று திருவாதிரை. திருவோணம் பெருமாளுக்கு உரியது, திருவாதிரை சிவனுக்கு உரியது. இந்துக்களின் இரு பெருந்தெய்வங்கள் சிவனும், பெருமாளும் இரு தெய்வங்களின் நட்சத்திரங்கள் மட்டுமே ‘திரு’ என்ற அடைமொழியோடு அனுபவத்தில் உள்ளன. தில்லைச் சிதம்பரத்திலும், திருஉத்திரகோச மங்கையிலும் ஆருத்ரா தரிசனம் காண்பது பிறவியின் பெரும் பயன் என்றே கருத வேண்டும்.

    விரதமிருந்து ஆருத்ரா தரிசனம் காண்போம்; நடராஜரின் அருள் பெறுவோம்; ஆண்டவனின் ஆனந்தத் தாண்டவம் பக்தர்களின் துன்பங்களை விலக்கட்டும், ருத்ரதாண்டவம் தீமையை அழித்து நன்மைகள் தரட்டும். உலகெங்கும் அமைதியும் ஆனந்தமும் பெருகட்டும்.

    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

    தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

    அல்லல் பிறவி அறுப்பானே“ அனைவர்க்கும் அருள் செய்வாய்.
    Next Story
    ×