search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்
    X

    பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்

    பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றை கைவிடல்’ குறித்த தகவல்களை காண்போம்.

    பொறாமை என்பது வளமாக வாழும் ஒருவரைப் பார்த்து, மற்றொருவர் உச்சக்கட்ட கவலையால் அடையும் ஓர் உணர்வு. இந்த உணர்வு இறைநம்பிக்கையை பாழாக்கிவிடும். இந்த உணர்வை கைவிடுவதுதான் இறைநம்பிக்கை. பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுபவரே உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆவார்.

    பொறாமைகள் பல விதம், அவை:

    1) ஒருவருக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் அவரை விட்டும் முற்றிலும் நீங்கிவிட வேண்டும். அது தமக்கு மட்டுமே கிடைத்திட வேண்டும் என வஞ்சகமாக நினைப்பது.

    2) நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்தவருக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது. அனைத்து பாக்கியமும் அடுத்தவனை விட்டு மிக தூரமாக இருக்க வேண்டும் என கருதுவது.

    3) தான் நோயாளியாக இருந்தால், அனைவருமே நோயாளிகளாக இருக்க வேண்டும். தான் ஏழையாக இருந்தால், மற்ற அனைவருமே ஏழைகளாக இருக்க வேண்டும். தனக்கு ஒரு சோதனை வந்தால், மற்றவருக்கும் அதுபோல வரவேண்டும் என நினைப்பது.

    இப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ண அலைகள் எவருக்கும் எள் அளவு கூட வந்துவிடக்கூடாது. குறிப்பாக இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த வாடை கூட அடிக்கக்கூடாது.

    ‘இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒரே உள்ளத்தில் குடியிருக்க முடியாது என்பது இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அடிப்படை கோட்பாடு. இது குறித்து நபிகள் பெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்:

    “ஒரு இறையடியாரின் உள்ளத்தில் இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒன்று சேரமுடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ஒரு அறிஞரின் கூற்று இவ்வாறு வருகிறது:

    ‘பொறாமையிலிருந்து மனித உடலை கழற்றிவிட முடியாது. அந்த பொறாமையிலிருந்து உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனிதர்கள் குறைவு’.

    முதல் பாவமே பொறாமையின் விளைவால் தான் ஏற்பட்டது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்ததும் அவருக்கு சிரசை தாழ்த்தி, மரியாதை செலுத்திட வேண்டும் என சைத்தானுக்கு இறைவன் உத்தரவிட்டபோது, சைத்தான் தனது பிடிவாத குணத்தாலும், தற்பெருமையாலும், பொறாமையாலும் அவன் கொட்டிய வார்த்தையால் அவன் கெட்டுப் போனான்.

    ‘நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’ என (இறைவன்) கேட்டான். ‘நான் அவரைவிடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’ என்று கூறினான். (திருக்குர்ஆன் 7:12)

    இந்த பொறாமை, மற்றும் வஞ்சக வாதத்துக்காக இன்றுவரை சைத்தான் விரட்டப்படும் நபராக, சபிக்கப்படும் நபராக ஆகிவிட்டான்.

    பொறாமை என்ற கொடிய எண்ணம் உடன் பிறந்தவரைக் கூட உண்டு, இல்லை என உருப்படாமல் ஆக்கிவிடும். இதற்கு சரியான சான்று நபி யூசுப் (அலை) அவர்களே ஆவார்கள்.

    நபி யாகூப் (அலை) அவர்களுக்கு, நபி யூசுப் (அலை) உட்பட 12 குழந்தைகள் உண்டு. தமது குழந்தைகளில் யூசுப் (அலை) மீது யாகூப் (அலை) அவர் களுக்கு அலாதி பிரியம். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மற்ற குழந்தைகள் தமது தந்தைக்கு பிரியமான குழந்தை யூசுபை (அலை) கடத்தி கொலை செய்ய துணிந்து விடுவர். கடைசியில் அந்த முடிவை கை விட்டு விட்டு பாழடைந்த கிணற்றில் தள்ளிவிடுவர். இது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

    “நாம் கூட்டமாக இருந்தும் யூசுபும், அவரது சகோதரரும் நம்மைவிட நமது தந்தைக்கு மிக விருப்பமாக உள்ளனர். நமது தந்தை பகிரங்க தவறில் இருக்கிறார்” என்று (அவரது சகோதரர்கள்) கூறியதை நினைவூட்டுவீராக. “யூசுபைக் கொன்று விடுங்கள். அல்லது ஏதாவது நிலப்பரப்பில் அவரை வீசி எறிந்து விடுங்கள். உங்கள் தந்தையின் கவனம் உங்களிடமே இருக்கும். அதன் பிறகு நல்ல மக்களாக நீங்கள் ஆகிக் கொள்ளலாம்” (எனவும் கூறினர்). “நீங்கள் (எதுவும்) செய்வதாக இருந்தால் யூசுபைக் கொலை செய்யாதீர்கள். அவரை ஆழ்கிணற்றுக்குள் போட்டு விடுங்கள். பயணிகளில் யாரேனும் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று அவர்களில் ஒருவர் கூறினார். (திருக்குர்ஆன் 12:8-10)

    உலகில் நடந்த முதல் படுகொலை ஒரு பெண்ணை அடைவதற்காக பொறாமையாலும், வஞ்சகத்தாலும் அரங்கேறியது. ஆதம் (அலை) அவர்களுக்கு ஹவ்வா (அலை) மூலமாக முதல் பிரசவத்தில் ‘காபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘இக்லிமா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது பிரசவத்தில் ‘ஹாபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘லுபூதா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இனவிருத்திக்காக முதல் பிரசவத்தில் பிறந்த ஆண், இரண்டாவது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை மணந்து கொள்ள ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறே முதல் பிரசவத்தில் பிறந்த பெண் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆணை மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

    இதற்கு மாற்றமாக, மூத்த மகன் காபீல் தன்னுடன் முதல் பிரசவத்தில் பிறந்த பேரழகியான இக்லிமாவை மணந்து கொள்ள ஆசைப்பட்டு, அதற்கு தடையாக இருந்த தமது இளைய சகோதரரான ஹாபீலை பொறாமையால் படுகொலை செய்து விடுவார். இதுதான் உலகில் நடந்த முதல் படுகொலையாகும்.

    ‘தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே அவன் நட்டமடைந்தவனாக ஆகிவிட்டான்’. (திருக்குர்ஆன் 5:30)

    இத்தகைய பொறாமை எண்ணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள்:

    ‘(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) இறைவனின் அடியார்களே, (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    இஸ்லாத்தை பொருத்த அளவில் பொறாமைக்கு இடமில்லை. ஒருவேளை பொறாமைப்பட அனுமதி இருக்குமானால் பின்வரும் நன்மைதரும் இரண்டு விஷயங்களில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறார்கள்.

    ‘இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு இறைவன் வழங்கிய செல்வத்தை அவர் நல்வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு இறைவன் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது. (அவரைப் போன்று நாமும் செய்ய வேண்டும் என்பதே அந்த இரண்டு விஷயங்கள்) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), புகாரி)

    அனைத்து விதமான பாக்கியமும் வழங்கப்பட்ட பிறரைப் பார்த்து பொறாமைப்படுவது எந்தவகையில் நியாயம்?. தமக்கு வேண்டுமானால் அதை இறைவனிடம் கேட்டுப் பெறலாமே.

    ‘இறைவன் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள் கிறார்களா?’ (திருக்குர்ஆன் 4:54)

    பொறாமைப்படுவதின் வாயிலாக அடுத்த வருக்கு நாம் நோவினை கொடுக்கக்கூடாது. இவ்வாறு இழிவான செயலில் நாம் ஈடுபடும்போது நமது இறை நம்பிக்கை அழிந்துவிடுவதுடன், நமது நல்லறமும் பாழாகி விடுவது நிச்சயம். பொறாமைப்படுவோருக்கு அண்ணலார் விடுக்கும் எச்சரிக்கை இதோ....

    ‘நான் உங்களையும், பொறாமைப்படுவதையும் எச்சரிக்கை செய்கின்றேன். நிச்சயமாக பொறாமை என்பது நெருப்பு விறகுகளை கரித்துவிடுவது போன்று, அது நன்மைகளை விழுங்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)

    பொறாமைக்கு உள்ளாக்கப்படுவோரின் கனிவான கவனத்திற்கு... ‘நீங்கள் பொறாமைக்காரர்களின் வஞ்சகத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சுலபமான வழி, உங்களது காரியங்களையும், உங்களது நிறைவேறும் தேவைகளையும் மறைவாக, ரகசியமாக, பாதுகாப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

    ‘நீங்கள் உங்களின் தேவைகளை வெற்றியாக நிறைவேற்றுவதில் மறைத்து செய்வதைக் கொண்டு உதவி அடைந்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பாக்கியமும் பொறாமைப்படுவதற்கு உட்படுத்தப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்:அல்பானீ)

    மேலும் பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×