search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரமலானுக்குப்பிறகும் நற்செயல்கள் தொடரட்டும்
    X

    ரமலானுக்குப்பிறகும் நற்செயல்கள் தொடரட்டும்

    ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    புனிதமான ரமலான் காலத்தில், பாவங்களைப் போக்குவதற்கும், நல்ல அமல்களைச் செய்து நன்மைகளை அள்ளிக்கொள்வதற்கும் வாய்ப்பளித்த அந்த வல்லோன் இறைவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்.

    நம்மில் பலர் நோன்பின் பொருட்டு கூடுமானவரை உள்ளச்சத்தோடு நம்முடைய செயல்பாடுகளைத் திருத்துவதற்கு முயற்சி செய்தோம். பசி, தாகம் மட்டுமின்றி, கோபம், பொறாமை, புறம், கோள், அவதூறு பரப்புதல் போன்ற மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்தோம்.

    கடமையான தொழுகைகளைத் தவிர, உபரியான தொழுகைகள், தர்மம், ஜகாத் என்று எல்லா விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தோம். திருக்குர்ஆனை ஒரு முறையாவது முழுவதுமாக ஓதி முடித்தோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும், பாவங்களில் இருந்து மீட்சி பெறவும் இவை அனைத்தும் செய்தோம்.

    ஒரு மாத நோன்பு முடிவடையும் வேளையில், ‘நாம் நல்லபடியாக நம் கடமையை நிறைவேற்றினோம்’ என்று திருப்தி கொள்ளும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நோன்புக் காலங்களில் இன்னும் சிறப்பாக அமல்கள் செய்வதற்கும், இறையச்சம் இன்னும் அதிகரிக்கவும் இறைவனிடம் உதவி தேட வேண்டும்.

    நோன்பு காலத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே மற்ற மாதங்களிலும் நாம் இருக்க வேண்டும். தூக்கம், சாப்பாடு, பேச்சு ஆகியவை அளவாகவே இருக்க வேண்டும். அலைபேசி, தொலைகாட்சி போன்றவற்றுக்கு செலவழிக்கும் நேரத்தை தொழுகை, குர் ஆன் ஓதுதல், நல்ல புத்தகங்கள் வாசித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் நம்முடைய மனம் பக்குவப்படும்.

    இதனால் ரமலான் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் இறைவனுக்கு உவப்பு தரும் விஷயங்களைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகி விடும். ரமலான் முடிந்த பிறகும் நம் மனதோடு இறையச்சம் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.

    இறையச்சம் என்பது ரமலானுக்கு மட்டும் உரித்தானது அன்று. அது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் அடிப்படைக் குணமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் நற்குணம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். ‘உங்களில் சிறந்தவர்கள் நற்குணம் நிரம்பியவர்களே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அத்தகைய நற்குணம் நிரம்பியவர்களாக நாம் மாறுவதற்கான ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு ரமலான் மூலமாக அருளியுள்ளான் என்பதை நாம் உணர்வதோடு நற் குணம் உள்ளவர்களாக நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

    ரமலான் முழுவதும் இறைச்சிந்தனையின் மூலமாக நம்மை அண்ட முடியாமல் இருந்த சைத்தான், ரமலானுக்கு அடுத்த நாளே நம்முடைய முதல் தொழுகையான பஜர் தொழுகையில் சோம்பலைத் தந்து நம்மை தொழுகையை விட்டும் தடுக்கப் பார்க்கலாம். ஆனாலும் நாம் சைத்தானை வென்று ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுவனம் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும், சுவனம் செல்வது எளிதான காரியமல்ல, அதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்காத சோதனைகளா? இன்னும் நபிமார்களும், நபித்தோழர்களும், எண்ணற்ற இறைநேசர்கள், நல்லடியார்கள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை திருமறையின் இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    “(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும் வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)’ என்று கேட்டதற்கு ‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது’ என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்”. (திருக்குர்ஆன் 2:214)

    புனித ரமலான் நமக்குத் தந்த பக்குவமும், பயிற்சியும் வருடம் முழுவதும் வாடாமல் இருக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும், அதற்கான வழிகாட்டுதலையும், உதவியையும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-7
    Next Story
    ×