search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்புகள் மிக்க ரமலான் மாதம்
    X

    சிறப்புகள் மிக்க ரமலான் மாதம்

    “மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே, குற்றம் புரிவோரில் சிறந்தவர்கள் அதிக அளவில் பாவமன்னிப்புக் கோருபவரே ஆவர்” என்பது நபி மொழி.
    அஸ்லாமு அலைக்கும், இறைவன் இட்ட ஐந்து கடமைகளில் 1. ஈமான் 2. தினம் ஐந்து வேளை தொழுகை 3. ஜகாத் 4. ரமலான் மாதத்தில் நோன்பு 5. புனித ஹஜ் பயணம் ஆகும்.

    முதலாவது கடமையாக இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு மனிதன் முதலில் செய்ய வேண்டியது உள்ளத்தால் இறைவனையும் அவரின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் ஏற்று கலிமா ஓத வேண்டும். இரண்டாவது கடமையாக தினமும் அந்த மனிதன் ஐந்து வேளை தொழுகை தொழ வேண்டும். மூன்றாவது கடமையாக வருடத்தில் ஒருமுறை தான் சம்பாதித்த பணத்தில் ஜகாத்துக்கு கொடுப்பது. அதாவது சம்பாதித்த பணத்தில் 40ல் ஒருபாகம் தன் ஏழை உறவினர்கள், அக்கம் பக்கம் வசிக்கும் தகுதியானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அளித்து அவர்களின் வாழ்வு “ஒளி” பெற வேண்டும்.

    நான்காவது கடமையாக வருடத்தில் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். அதாவது பொழுது விடிவதற்கு முன்பாக (சஹர்) உணவு உண்டு அன்று பகல் முழுவதும் பச்சை தண்ணீரும் அருந்தாமல் தொழுகை நேரங்களில் ஈடுபட்டு பிறருக்கு தொந்தரவு அளிக்காமலும், கண், காது, வாய், கை, கால்களாலும் கெட்ட செயலில் ஈடுபடாமலும், சூரியன் மறைந்த பிறகு (இப்தியார்) உணவு உண்ண வேண்டும். இதற்கு பெயர்தான் நோன்பு ஆகும். இப்படி ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இறுதியாக ஐந்தாவது கடமையாக ஹஜ் ஆகும். அதாவது பணம் வசதி படைத்தவர்கள் தனது ஆயுளில் ஒரு முறையாவது இஸ்லாமிய ஹிஜிரி வருடத்தில் கடைசி மாதமாக துல்ஹஜில் மாதத்தில் “புனித மெக்கா” நகருக்கு சென்று “ஹஜ்” செய்வது ஆகும்.

    புனித ரமலான் மாதத்தில் பிறருக்கு உதவுவதும், பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் நல்ல காரியங்களில் ஈடுபட்டு புனித குர்ஆன் ஓதியும் அதை அறிந்தும் தன் வாழ்வில் அதன்படி நடக்கவே இது ஒரு பயிற்சி ஆகும். நோன்பு இருப்பவர்கள் பெரும்பாலும் அந்த நாட்களில் அவருக்கு ஏற்கனவே உள்ள நோய்களால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

    மேலும் ரமலான் மாதத்தில் 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகள் மிகவும் முக்கியமான இரவுகள் ஆகும். இந்த ஒற்றைப்படை இரவுகளில் யார் இறைவனுக்கு அஞ்சி பாவ மன்னிப்பு கோரி, தன் நற்செய லுக்கு அங்கீகாரம் பெறுகிறார்களோ அவர்கள் இந்த ஒற்றைப்படை இரவு களில் ஏதோ ஒரு இரவில் அன்று அவர்கள் செய்கின்ற பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். மேலும் இந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் இரவுகளுக்கு மேலானதாகும், அன்று செய்கின்ற பிரார்த்தனை அவ்வளவு சிறப்பு வாய்ந்தவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்.

    “உங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோருங்கள் பிறகு அவன் பக்கம் மீளுங்கள், திண்ணமாக, இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின் றான். (திருக்குர்ஆன்11:90) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

    “மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே, குற்றம் புரிவோரில் சிறந்தவர்கள் அதிக அளவில் பாவமன்னிப்புக் கோருபவரே ஆவர்” என்பது நபி மொழி.

    மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார். “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி கள் உண்டு. அதில் ஒன்று நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றொன்று மறுமையில் இறை வனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.

    இறுதியாக ரமலான் மாதம் முடிந்து அன்று இரவு பிறை பார்த்ததும் ஷவ்வால் மாதம் முதல்நாள் “ஈதுல்பிதர்” என்னும் ஈத் பெருநாள் ஆகும். அன்று காலை தொழுகைக்குப் பிறகு ஈத்பெருநாள் விசேஷ தொழுகை நடைபெறும். தொழுகைக்குப் பிறகு அனைவரும் கட்டிப்பிடித்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறுவார்கள். ஈதுல் பிதர் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு “ஈத்முபாரக்” வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆலியார்ஜூபேர் அகமது முன்னாள் நகரமன்றத் தலைவர், பேரணாம்பட்டு.
    Next Story
    ×