search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பாளிகளுக்கான கூலி..
    X

    நோன்பாளிகளுக்கான கூலி..

    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.
    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.

    ‘நோன்பு’ என்றால் ‘தடுத்துக்கொள்ளுதல்’ என்பது பொருளாகும். உண்ணாமல், பருகாமல், நோன்பை முறித்துவிடக்கூடிய எந்த செயலையும் செய்யாமல், இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கடைப்பிடிக்கப்படுவது தான் நோன்பு.

    தொழுகையை வேண்டும் என்றே விடுவது எப்படி குற்றமோ, அது போல நோன்பை வேண்டும் என்றே விடுவதும் குற்றமாகும். இஸ்லாத்தில் அனைத்து வணக்க வழபாடுகளும் தூய்மையான எண்ணத்தில் அனைத்தும் அல்லாஹ் ஒருவனின் அருளைப்பெறுவதற்கே என்று செய்ய வேண்டும். நமது  நற்செயலுக்கு ஏற்ப நன்மைகள் கிடைக்கும். ஆனால் நோன்பாளிக்கு மட்டும் இறைவன் நேரடியாக அதற்குரிய கூலியை தருகிறான்.

    இதுகுறித்து நபி மொழி வருமாறு...

    நோன்பு நோற்றவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

    இதற்கு காரணம் என்னவென்றால், மனிதனின் தொழுகை தான தர்மங்கள் குறுகிய நேரத்தில் செய்யக்கூடியது. அதோடு இந்த செயல்களை பிறர் அறியவும் வாய்ப்பு உள்ளது.

    ஆனால் நோன்பு என்பது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை நீடிக்க கூடியது. ஒருவன் நோன்பாளி என்பதையும் அவர் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும். நோன்பு என்பது இறைவனுக்கு அவனது அடியானுக்கும் இடையே உள்ள தொடர்பை பலப்படுத்தும் செயலாகும்.

    மேலும் இந்த நோன்பு காலத்தில் இறைவனுக்காக பசி, தாகம் மற்றும் இச்சைகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது இறைவனுக்கு மனிதனுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தான் ‘நோன்பாளிக்கு உரிய கூலியை நானே வழங்குவேன்’ என்று  இறைவன் கூறுகின்றார்.

    சிறப்பு மிக்க இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்காக நாம் நோன்பு காலத்தில் அனைத்து தொழுகைகளையும் உரிய நேரத்தில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர உபரியான தொழுகைகளையும் கூடுதலாக தொழ வேண்டும் தான தர்மங்களை அதிகப்படுத்த வேண்டும். உற்றார், உறவினர்களை பேணிக்காக்க வேண்டும். இதன் மூலம் இறைவன் தரும் கூலியை ஒவ்வொரு நோன்பாளியும் பெற முடியும்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
    Next Story
    ×