search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு மிக்க நபித்தோழர்
    X

    சிறப்பு மிக்க நபித்தோழர்

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.
    திருக்குர்ஆனில் மொத்தம் 25 நபிமார்களின் திருப்பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் நபி இப்ராகிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) போன்ற நபிமார்களின் பெயர்கள் பல முறை இடம் பெற்றுள்ளது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயர் 4 முறை இடம் பெற்றுள்ளது.

    அதுபோல நபிகளாருக்கு ஆயிரமாயிரம் உயிர்த்தோழர்கள் (சஹாபாக்கள்) இருந்த போதிலும், அவர்களில் ‘ஸைத்’ என்ற ஒரு நபித்தோழரின் பெயர் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவாகி உள்ளது.

    அத்தகைய சிறப்பு மிக்க நபித்தோழர் ஸைத் குறித்த வரலாற்று பின்னணியை பார்ப்போம்.

    பாரம்பரியமிக்க கல்ப் குலத்தை சார்ந்த ஹாரிதாவின் மகன் ஸைத். அவரது தாய் புகழ்பெற்ற வள்ளலான ஹாதிம் தாயின் பரம்பரையை சார்ந்தவர்.

    ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாயி என்ற கிராமத்திற்கு தனது தாயாருடன் ஸைத் சென்றிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கும்பல் குதிரையில் வந்து அக்கிராமத்தை சூறையாடியது.

    அப்போது அக்கொள்ளையர்கள் ஆண்கள் பலரையும் சிறைபிடித்து சென்றார்கள். அவர்களில் இளைஞரான ஸைதும் கைதாகி இருந்தார். பின்னர் கைதிகளாக பிடிபட்டவர்களை எல்லாம் உக்காஸ் என்ற அரேபிய சந்தையில் அடிமைகளாக விற்று விட்டார்கள்.

    அந்த சந்தைக்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகனான ஹிஷாம் என்பவர் சென்று சில அடிமைகளை விலைக்கு வாங்கினார். அதில் ஸைதும் ஒருவராய் வாங்கப்பட்டு இருந்தார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்திருந்த காலகட்டம் அது. மணமகளாக இருந்த கதீஜா அவர்கள் தனது மருமகனான ஹிஷாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

    அது சமயம் ஹிஷாம் சில அடிமைகளை கதீஜா (ரலி) அவர்களிடம் காட்டி, அவர்களில் ஒருவரை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டார். கதீஜா (ரலி) அவர்கள், அந்த அடிமைகளில் ஸைதையே தேர்வு செய்தார்கள்.

    அச்சமயம் பராகா என்ற அடிமைப்பெண் நபிகளாருக்கு பணிவிடை செய்துவந்தார். ஆனால் அவரை நபிகளார் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சுதந்திரமாக செல்ல அனுமதித்து இருந்தார்.

    எனவே, கதீஜா (ரலி) அவர்கள் தனது கணவருக்கு உதவியாக இருக்க, ஸைதை அனுப்பினார்கள்.

    நபிகளார், ஸைதிடம் அன்பாகவும், பரிவாகவும் ஒரு தந்தையை போன்றே நடந்து கொண்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல ஸைத் நபிகளாரின் உற்ற நேசராகவே மாறிப்போனார்.

    இந்த நிலையில் ஸைதை அவரது பெற்றோர்கள் தேடிஅலைந்தனர். எவ்வளவோ அலைந்து திரிந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

    கஅபாவின் புனித யாத்திரை காலம் தொடங்கியபோது, கல்ப் குலத்தவர்கள் பலரையும் மக்காவின் வீதிகளில் நடமாடுவதை ஸைது கண்டார்.

    ஸைத் அவர்களை அணுகி தான் மக்காவில் இருப்பதை தனது பெற்றோரிடம் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்:

    ‘எனது குடும்பம் எனக்காக துயரப்படுவதை நான் நன்கறிவேன். இறைவனின் அருள் நிறைந்த தலங்களில் (மக்காவில்), புனிதமானதோர் (நபிகளாரின்) இல்லம் தான் எனது உறைவிடமாகும். உயர் குலங்களில் அனைத்திலும் உயர்ந்த இடத்தில் நான் உறைந்திருக்கின்றேன். என்னை தேடி அலைவதினால் ஒட்டகங்களை களைப்படையச் செய்யாதீர்கள். எனக்கெனச் சுமந்த துயரங்களை எல்லாம் உடனே விட்டு விடுங்கள்’.

    இவ்வாறு தன்பெற்றோரிடம் கூறுமாறு ஸைத் தகவல் அனுப்பினார்.

    இச்செய்தி கிடைத்தவுடன் ஸைதின் தந்தையான ஹாரிதா தனது தம்பியை உடன் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு விரைந்து சென்றார்.

    மக்காவை வந்தடைந்ததும் அவர் நபிகளாரை நேரில் சந்தித்தார். தனது மகன் ஸைதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென வேண்டியதோடு, அதற்கு ஈட்டுத்தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக நபிகளார் முன் பணிவுடன் கூறி நின்றார்.

    ஸைத் யாருடன் இருக்க வேண்டும் என்பதை ஸைதே முடிவு செய்யட்டும் என்றார்கள் நபிகளார்.

    ‘ஸைத், உங்களோடு வர சம்மதித்தால், எனக்கு எந்த ஈட்டு தொகையும் தராமல் தாராளமாக உங்களது மகனை நீங்கள் அழைத்துச்செல்லலாம். ஆனால் அவர் என்னுடன் இருக்க விரும்பினால், என்னை தேர்வு செய்யும் எவரையும் நான் நிராகரித்து நிற்பவன் அல்ல’ என்று நபிகளார் உறுதியுடன் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஸைத் அங்கு வந்தார்.

    அவரை அழைத்த நபிகளார், ‘ஸைதே இவர்களை உமக்கு தெரியுமா?’ எனக்கேட்டார்கள்.

    ‘ஆம்’ என்ற ஸைத், ‘ஒருவர் தனது தந்தை, மற்றவர் தனது சிறிய தந்தை’ என்று கூறினார்.

    ‘இவர்கள் உம்மை மீட்டு உமது ஊருக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள். உமது விருப்பப்படி நீர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நபிகளார், முடிவெடுக்கும் பொறுப்பை ஸைதின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள்.

    ஸைத் அதற்கு மிக நிதானமாகவே பதில் கூறினார்.

    ‘அண்ணலே, உலகில் உங்களுக்கு பகரமாக வேறு எவரையும் நான் தேர்வு செய்ய மாட்டேன்’ என்றார்

    இதைக் கேட்ட அவரது தந்தை ஹாரிதா இடி விழுந்ததை போல திகைத்து நின்றார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய நபிகளார் ஹாரிதாவையும் அவரது தம்பியையும், புனித தலமான கஅபாவிற்கு அழைத்துச்சென்றார்கள்.

    மக்களை எல்லாம் சப்தமாக அழைத்து ஒன்றுகூட்டி, ஸைதின் கையை பிடித்துக்கொண்டு, ‘இன்று முதல் ஸைத் எனது மகனாவார், நான் அவரது தந்தை’ என பிரகடனம் செய்தார்கள்.

    இது ஸைதின் தந்தைக்கும், அவரது தம்பிக்கும் மிகுந்த ஆறுதலை தந்தது.

    தனது மகன், அருள் நிறைந்த அன்பாளரான நபிகளாரிடம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் கருதப்படுவதை கண்டு மன நிறைவோடு தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    நபிகளாரை, ஸைத் தனது பெற்றோர்களை விடவும், தன்னைவிடவும் பெரிதும் நேசித்தமையும், நபிகளாரை ஸைத் அளவு கடந்த பிரியத்தோடு தேர்வு செய்து கொண்டமையும் அவருக்கு மிக அரியதோர் வாய்பை ஏற்படுத்தி தந்தது எனலாம்.

    திருக்குர்ஆனில் அவரது பெயர் 33-வது அத்தியாயம் 37-வது திருவசனத்தில் இடம் பெற்றுள்ளது.

    நபிகளாரும் ஸைதும் தந்தை மகன் என்ற பலமான நேசமும் பாசமும் கொண்டவர்களாக இருந்த போதிலும், உலகில் வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற சொந்த மகனைப் போன்று ஆக முடியாது என்பதை வலியுறுத்தி இறைவன் தன் வசனத்தை குர்ஆனில் இவ்வாறு இறக்கி வைத்தான்:

    ‘(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 33:40).

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.
    Next Story
    ×