search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குற்றமும் தண்டனையும்
    X

    குற்றமும் தண்டனையும்

    “திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்)
    ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே சற்று சிரமம் நிறைந்த பணி என்பது எமது தாழ்மையான கருத்து. வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமானதல்ல. அதற்குப் பெரும் பொறுமையும் நிதானமும் தேவை.

    பாடங்களைத் திறம்பட சொல்லிக் கொடுத்தால் மட்டுமே போதாது, மாணவர்களின் தராதரம் அறிந்து, அவர்களின் அறிவுக்கு ஏற்றார்போல் கற்றுக்கொடுக்கும்போதுதான் ஆசிரியர்-மாணவர் பந்தம் உயிரோட்டமாக இருக்கும்.

    இல்லையேல், ‘வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன்’ என்று ஆசிரியரும்; ‘பெற்றோர் விருப்பத்திற்காக படிக்கிறேன்’ என்று மாணவரும் தனித்தனிப் பாதையில் இருப்பார்கள்.

    இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வி என்பது ஓர் அமானிதம். அதைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றால் மறுமை விசாரணையில் இருந்து ஆசிரியர்களும் தப்பிக்க முடியாது.

    இது ஓர் அமானிதம் என்ற சிந்தனை இல்லாததால் தான், கல்வி கடைச்சரக்காக இன்று மாறிவிட்டது. பணம் பண்ணும் மரமாக கல்வி மாறிவிட்டதால், இன்றைய கல்வி ஏழைக்கு எட்டாக்கனியாகவும் மாறிவிட்டது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மை அறிமுகம் செய்யும்போது ஓர் ஆசிரியர் என்றே தன்னை அறிமுகம் செய்கின்றார்கள்:

    “திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்)

    இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன்னை ஓர் ஆசிரியர் என்று அறிவிக்கின்றார்கள் என்றால் ஆசிரியப்பணி எத்தகையப் புனிதப்பணி, எத்தகைய மகத்தான பணி என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

    மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதியில் ஓர் ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும் மாட்டமாட்டார். ‘கற்ற கல்வியை வைத்து என்ன செய்தாய்?’ என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட எவராலும் நகர முடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுக்கம் வரும்.

    முன்மாதிரி ஆசிரியர் ஒருவர் குறித்து சமீபத்தில் படித்த நிகழ்வு நெகிழச் செய்துவிட்டது. இப்படியும் ஆசிரியர்கள் இருந்துள்ளனரே என்பதை எண்ணும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.

    பிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் (மலையாளம்) ‘குற்றமும் தண்டனையும்’ எனும் பகுதியில், மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து இவ்வாறு கூறுகின்றார்:

    அது ஒரு தேர்வுக் காலம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.

    ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார்.

    தண்டனை என்ன தெரியுமா? பள்ளிக்கூட அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டு, அனைவர் முன்னிலையிலும் குச்சியால் ஆறு அடிகள் அடிப்பது. அதுதான் அன்றைய பெரும் தண்டனை.

    ஆனால், இந்த முடிவுக்கு ஆசிரியர் தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘மாணவனுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும்’ என்ற தமது முடிவில் தலைமை ஆசிரியரும் உறுதியுடன் இருந்தார்.

    அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்றனர். நடப்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். வகுப்பாசிரியர் தோமஸ் மாஸ்டரும் வருகை தந்தார். தண்டனை தொடங்குவதற்கு முன் அனைவர் முன்னிலையிலும் தோமஸ் மாஸ்டர் இவ்வாறு கூறினார்:

    “அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும், கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்கமாட்டான் அல்லவா. ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.

    தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தார். ஆயினும் மாணவனுக்குத் தண்டனை கொடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் வகுப்பாசிரியரின் நிர்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

    தவறு செய்த அந்த மாணவனைச் சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: “இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.

    உடனே தோமஸ் மாஸ்டர் கூறினார்: “இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல.. மாறாக, நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாகச் செய்திருந்தால் இவன் காப்பி அடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.

    தலைமை ஆசிரியர் குச்சியை எடுத்தார். ஆசிரியருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது. மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். அடிகொண்டது ஆசிரியர், அழுதது மாணவர்கள்.

    உடனே காப்பி அடித்த அந்த மாணவன் அழுத வண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் மண்டியிட்டு நின்றவாறு, “இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.

    பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: “நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே.. இனி ஒருபோதும் நான் தேர்வில் காப்பி அடிக்கமாட்டேன் மாஸ்டர்..! என்னை மன்னித்துவிடுங்கள்”.

    இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஒரு புதிய பாடத்தை அன்றுதான் அந்தப் பள்ளிக் கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கேபெற்ற ஓர் ஒப்பற்ற நிகழ்வு அது.

    இன்றைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயவு செய்து இத்துடன் ஒப்பிட்டு நோக்க வேண்டாம். ஏனெனில் அது ஒரு கனாக்காலம்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×