search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனித குலம் மறக்க முடியாத மாமனிதர்
    X

    மனித குலம் மறக்க முடியாத மாமனிதர்

    எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது.
    இறைவன், மனிதர்களின் நலனுக்காக பல மகத்தான மனிதர்களை உலகில் தோன்றச் செய்துள்ளான். அவர்களில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் அடைந்த இடம் மிகவும் உயர்வானது, எவராலும் எட்டிப் பிடிக்க முடியாதது.

    சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வருகையானது உலகை நன்மையின் பக்கம் புரட்டிப் போடப்பட்டது. தீய செயல்கள் அழிந்து நன்மைகள் பெருகியது. மக்களும் நேர்வழி பெற்றனர்.

    நபிகள் நாயகம் அவர்கள் குழந்தையாக, தாயின் வயிற்றில் இருந்த போது தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள். பிறந்த பின்னர், தனது 6-வது வயதில் தாய் ஆமீனாவையும் இழந்து நின்றார்கள். பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த நபிகளாரின் இதயம், இறைவனின் நினைவின் மீது என்றும் நிலைத்து நின்றது.

    அன்றைய மக்கள், வணக்க வழிபாடு செய்வதில் இன ரீதியாக பல்வேறு பிரிவினர்களாக பிரிந்து கிடந்தார்கள். பொய், களவு, புறம்பேசுவது, ஜோசியம் பார்ப்பது. அவ்வப்போது கலகம் விளைவிப்பது, விபச்சாரம், மதுப்பழக்கம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது போன்ற எண்ணற்ற மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

    ஓர் இறைக்கொள்கை மூலம் அந்த மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை நேர்வழியின்பால் நபிகள் நாயகம் (ஸல்) மீட்டெடுத்தார்கள். எதிர்ப்பாளர்களின் சொல்லடிகளுக்கும், கல்லடிகளுக்கும் மத்தியில் இறைவனின் துணை கொண்டு வெற்றி பெற்றார்கள்.

    ஆண்டான் அடிமை, மேலோன், கீழோன், வலியவன், எளியவன் கருப்பானவன், வெளுப்பானவன் என எவராய் இருப்பினும் அனைவரும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவத்தை உலகில் நபிகளார் செயல்படுத்தி காட்டினார்கள்.

    இறையச்சம் ஒன்றே மனித உயர்வுக்கான உரைகல் என்று கூறிய அண்ணலார், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவது கூடாது என்றார்கள்.

    அற்ப உலக ஆசாபாசம் என்ற மன அழுக்கை மனித இதயங்களில் இருந்து துடைத்து எறிந்து, மனிதர்களை ஒழுக்கமுடையவராக மாற்றிக் காட்டினார்கள்.

    இத்தகைய தூய கொள்கையுடைய இஸ்லாம் மார்க்கத்தை அழித்திட நினைத்து, போர் புரிய துணிந்தவர்களை, இறையருளால், எதிர்த்து போராடி வெற்றி கண்டார்கள்.

    இவர்களுக்கு இறைவன் ஏற்படுத்தித் தந்த வரலாற்று பதிவை போன்று வேறு எவருக்கும் வரலாற்று பதிவுகளை உலகில் காணமுடியாது.

    ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களது வாழ்வு முறைகள் யாவும் திறந்த புத்தகமாகவும், தெளிவான சான்றுகளுடன் பிரகாசம் நிறைந்ததாகவே விளங்குகின்றது.

    இவர்களது எதிரிகள் கூட இவரது நற்குணத்தினால் பின் நாட்களில் நபிகளாரின் உயிர் நண்பர்களாக மாறினார்கள்.

    உலகை செதுக்கி செப்பனிடுவதற்காக, இவர்கள் ஏற்றுக் கொண்ட சுமைகளும், தியாகங்களும் ஏராளம். இவர்களது வாழ்வு என்பது உலகில் கடைசியாக பிறக்கப்போகும் மனிதனுக்கும் நேர்வழி காட்டத்தக்க பொதுத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றது.

    அனாதைகளை ஆதரிப்பது, நிர்கதியானவர்களுக்கு உதவி புரிவது, தன்னிடம் கொடுத்து வைக்கப்படும் பிறரது பொருட்களை பாதுகாத்து அதனை உரியவரிடம் ஒப்படைப்பது, இன்முகத்துடனும், நட்புடனும் அனைவரிடமும் பழகுவது, பிறர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்வது, பொது அமைதிக்காகவும், நன்மைக்காகவும் அயராது பாடுபடுவது போன்ற மகத்தான நற்குணங்கள் தான் நபிகளாரை மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடிக்கச் செய்தது.

    எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. ‘இறைவனே இவர்களுக்கு அனைத்தையும் கற்பித்துக்கொடுத்தான்’ என்பதற்கு இந்த உயர் பண்புகளே சான்றாக இருக்கிறது.

    ‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே, (நபியே) நீர் எழுந்து நின்று (மனிதர்களை தீமையில் விழுந்துவிடாமல்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ (74:1,2) என்ற இறைவசனம் எப்போது இறங்கியதோ அந்நாளிலிருந்து 23 ஆண்டுகள், மனித குல மேன்மைக்காக நபிகளார் ஆற்றிய இறைசேவையை மனித உள்ளம் படைத்த யாரும் மறக்கவே முடியாது. இறுதி நாள் வரை அவர்கள் மக்கள் மனங்களில் நிலைத்து நின்று நேர்வழி காட்டுவார்கள்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×