search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீய எண்ணங்களை தவிர்ப்போம், நன்மைகளை பெறுவோம்
    X

    தீய எண்ணங்களை தவிர்ப்போம், நன்மைகளை பெறுவோம்

    “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.
    அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டதால், ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் மண்ணுலகில் தனித்தனி இடத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டதால், அரபு மண்ணில் ஒன்றாய் இணைந்தனர். மனித வாழ்வின் நியதியில் இல்லறத்தை நல்லறமாய் கொண்டு வாழ்ந்தனர். உயிரினம் ஒன்றுமே இல்லாத சூனியமான உலகில் முதன் முதலில் மனித கரு உருப்பெற்றது.

    அல்லாஹ்வின் நியதிப்படி உயிரினங்கள் அனைத்தும், ஆதியில் ஜோடி ஜோடிகளாகவே படைக்கப்பட்டனர். ஆதம் (அலை) அவர்களுக்கு முதல் பிள்ளைகள் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர். அதற்கு அடுத்து பிறந்த பிள்ளைகளும் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர்.

    முதலில் பிறந்த ஆண் ‘காபீல்’ என்றும், இரண்டாவதாக பிறந்த ஆண் ‘ஹாபீல்’ என்றும் பெயர் சூட்டப்பட்டனர். காபீலுடன் பிறந்த பெண் அழகில் சிறந்தவர், ஹாபீலுடன் பிறந்தவர் அழகில் சற்று குறைந்தவர். காபீல் விவசாயம் செய்து வந்தார். ஹாபீல் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழில் செய்தார்.

    இறைவனின் நியதிப்படி, முதல் கருவில் உருவான ஆணிற்கு இரண்டாவது கருவில் உருவான பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும். அதுபோன்று, இரண்டாவது கருவில் உருவானவர் முதல் கருவில் உருவான பெண்ணை மணமுடிக்க வேண்டும்.

    இந்த நியதிக்கு இடைஞ்சல் செய்ய சைத்தான் திட்டமிட்டான்.

    காபீலை அணுகி அவரது மனதை கெடுத்து, தன்னுடன் பிறந்த அழகிய பெண் இக்யுலிமா என்பவரையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்குமாறு மாற்றி விட்டான். ஆனால் அவரது தம்பியோ சைத்தானின் ஊசலாட்டத்திற்கு அடிபணியாமல் இறைவனின் எந்த முடிவிற்கும் தான் தயார் என்பதாகச் சொன்னார்.

    இந்த செய்தி ஆதம் (அலை) அவர்களுக்கு எட்டியது. இருவரையும் அழைத்து விசாரித்தார். காபீல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஆதம் (அலை) இதுகுறித்து தன் மகன்களிடம் கூறியதாவது:-

    ‘யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதி. இதற்கு மாற்றம் செய்ய நீங்கள் நினைத்தால், இதற்கு இறைவனே தீர்ப்பு வழங்கட்டும். நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்தமான காணிக்கையை மலையின் மீது வைத்து விடுங்கள். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதனை பொசுக்கி விடும். யார் காணிக்கையை நெருப்பு பொசுக்குகிறதோ அவரது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதவேண்டும். மேலும், அவரது விருப்பம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்டு காபீல், ஹாபீல் இருவரும் தங்களுக்குரிய காணிக்கையை தயார் செய்தார்கள். காபீல் தன் விளைநிலத்தில் உள்ள வேண்டாத பொருட்களை ஒன்று திரட்டி அவனது காணிக்கையாக கொண்டு வைத்தான். ஹாபீல் தன் மந்தையில் உள்ள அழகுள்ள, நல்ல கொழுத்த ஆட்டை காணிக்கை ஆக்கினான்.

    வானில் இருந்து வந்த நெருப்பு ஹாபீலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நபியே! ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இருமகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. இருவரும் குர்பானி (பலி) கொடுத்த போது, அவ்விருவரில் ஒருத்தருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த காபீல், ஹாபீலை நோக்கி ‘நான் உன்னைக் கொன்று விடுவேன்’ என்றார். அதற்கு பதிலளித்த ஹாபீல், ‘இதில் என்ன தவறிருக்கிறது, அல்லாஹ் குர்பானியை ஏற்றுக்கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர்களிடமிருந்து தான்’ என்றார்”. (திருக்குர்ஆன் 5:27)

    “நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினால், அந்நேரத்திலும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” (திருக்குர்ஆன் 5:28).

    “இதன் பின்னரும் அவர் தன் சகோதரரை வெட்டும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே அவர் அவரை வெட்டி விட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்” (திருக்குர்ஆன் 5:30)

    உலகின் முதல் கொலை நிகழ்ந்து விட்டது. காபீலுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் வரை நம் முன் பேசிக் கொண்டிருந்த தம்பி ஹாபீல் எதுவும் பேசாமல், எந்த அசைவும் இல்லாமல் அப்படியே கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். இது என்ன நிலை, இதன் பின் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். இது தான் இறப்பு என்ற நிலையா? என்று புரியாதவராக அங்கேயே அமர்ந்திருந்தார்.

    எல்லாம் அறிந்தவன் அல்லாஹ். அவன் திட்டப்படியே காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது, இறைவன் கட்டளைப்படி இரண்டு காகங்கள் அந்த இடத்திற்கு வந்தன. இரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டதில் ஒரு காகம் இறந்து விட்டது. காபீல் அதனை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹாபீலுக்கு நேர்ந்த கதி ஒரு காகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    சண்டையில் வென்ற காகம் தன் அலகால் பூமியை கொத்திக் கொத்தி தோண்டியது. அந்த பள்ளத்தில் இறந்த காகத்தை போட்டு மீண்டும் மண்ணால் மூடியது. தன் சகோதரன் ஹாபீலின் பிணத்தை எப்படி புதைக்க வேண்டும் என்பதை காபீலுக்கு தெரியப்படுத்த இறைவன் செய்த ஏற்பாடு இது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “பின்னர் தன் சகோதரர் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காகப் பூமியை தோண்டிற்று” (திருக்குர்ஆன் 5:31).

    பெண்ணாசையின் காரணமாகத்தான் உலகில் முதல் கொலைக்குற்றம் நிகழ்ந்தது. தன்னை விட தன் தம்பிக்கு அழகான மனைவி அமைந்து விடக்கூடாது என்ற பொறாமையும் அதோடு சேர்ந்து கொண்டது. சைத்தானின் தூண்டுதலால் கெட்ட எண்ணம் மேலோங்கியது. இந்த மூன்று குணங்கள் தான் முதல் பாவத்திற்கு காரணமாய் அமைந்தன. இன்றும் பெரும்பாலான பாவங்களுக்கு அவை தான் காரணமாக உள்ளன.

    எனவே நம்முடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பி, பொறாமை என்ற தீய குணத்தை அறவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணாசையில் வீழ்ந்து தன் கண்ணியத்தையும், அந்தஸ்த்தையும் பாழ்படுத்தாமல் வாழ முயன்றால் நிச்சயமாக நம் முயற்சிக்கு இறைவனின் அருள் கிட்டும்.

    “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.

    எனவே, தீய எண்ணங்களை களைந்து நல்ல வாழ்க்கைக்கு முயற்சி செய்தால், இறைவன் அருளால் வெற்றி பெறலாம்.
    Next Story
    ×