search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: எது வணக்கம்?
    X

    இஸ்லாம்: எது வணக்கம்?

    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்...
    வணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர். பள்ளிவாசலில் குனிந்து எழும்புவது மட்டுமே வணக்கம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அத்துடன் நமது கடமை முடிந்துவிட்டது என்று வேறுசிலர் கருதுகின்றனர்.

    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது?

    இறைவன் கூறுகின்றான்:

    “நான் ஜின்களையும், மனிதர்களையும், என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (திருக்குர்ஆன் 51:56)

    இந்த வசனத்தைப் படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பமும் தவறான கற்பிதமும் தோன்றும். யோசித்துப் பார்த்தால்... இவற்றை மட்டும் நிறைவேற்றுவதற்கா இறைவன் நம்மைப் படைத்தான் என்ற ஐயமும் கூடவே எழும்.

    இவைதான் வணக்கம் என்று நாம் கருதும் இந்தத் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுக்கு அன்றாட வாழ்வின் ஒருநாளில் எத்தனை மணி நேரங்களை நாம் ஒதுக்குகின்றோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே, வணக்கம் என்பது இவை மட்டுமல்ல என்பது தெரியவரும்.

    உண்மையில் ஐந்து வேளை தொழுகைக்காக 24 மணி நேரத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்..?

    மாதங்களைக் கணக்கிட்டால் 8.5 சதவீதம் மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்?

    ஜகாத் என்பதோ வருடத்தில் ஒரு முறை மட்டுமே. எனில் மீதி நேரம்..?

    வாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ். எனில் மீதி நேரம்?

    ‘என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி உங்களை நான் படைக்கவில்லை’ என்ற இறைக்கூற்றின் அடிப்படையில் பார்த்தால்; 24 மணி நேரமும் தொழுது கொண்டோ, நோன்பு நோற்றுக்கொண்டோ அல்லது ஜகாத் கொடுத்துக்கொண்டோ அல்லவா இருந்திருக்க வேண்டும்?

    இதுநடைமுறை சாத்தியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல. மாறாக அறிந்துகொள்ளுங்கள்...

    ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மத, இன, மொழி வேறுபாடு பார்க்காமல் கவலை சூழ்ந்த மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    அமானிதம் பேணி, அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    நாவால் பிறர் மனதை நோகடிக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    தேவையற்றை கோபத்தையும் அவசியமற்ற ஆத்திரத்தையும் கட்டுப்படுத்தும்போதும் நீங்கள் வணக்கத்தில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்மையை உரக்கச் சொல்லும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    வியாபாரத்தின்போதும், கொடுக்கல் வாங்கலின்போதும் நீதியுடனும் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்ளும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உங்கள் வேலையையும் உங்களது பணியையும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செய்யும்போதும், வாங்கும் ஊதியத்திற்கு உகந்த முறையில் உழைக்கும்போதும் நீங்கள் வணக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்ணும் உணவும் அருந்தும் பானமும் அனுமதிக்கப்பட்ட வழிமுறையினூடாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    அணியும் ஆடையும், அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதித்தவையாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் உழைப்பதும் சிலபோது வணக்கத்தில் கட்டுப்படும்.

    வயலில் உழைப்பவரும், தொழிற்சாலையில் இயங்குபவரும், கடைவிரிக்கும் வியாபாரியும், அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியரும், துறைசார் நிபுணர்களும் தங்களுடைய பணிகளை வணக்கமாகவும், மறுமை வெற்றிக்கான ஆதாரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

    ஆயினும் அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன.

    ஒன்று: இஸ்லாம் அனுமதித்த தொழிலாக அது இருக்க வேண்டும்.

    இரண்டு: நோக்கம் (நிய்யத்) நல்லதாக இருக்க வேண்டும்.

    மூன்று: செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதைச் செவ்வனே செய்வதை இறைவன் விரும்புகின்றான்”. (பைஹகி).

    நான்கு: அந்தப் பணியில் இறை வரம்புகளை மீறக்கூடாது. (மோசடி, திருட்டு, துரோகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது).

    ஐந்து: இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பணி தடையாக இருக்கக் கூடாது.

    இந்த வரம்புகளை பேணும்போது யார் எப்பணி செய்தாலும் அப்பணியை வணக்கமாகவே இஸ்லாம் கருதுகிறது.

    பலசாலியான ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் கடந்து சென்றார். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?” என்று கூறினர்.

    அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்! தமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் இவரும் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். தமது வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். அடுத்தவரிடம் கையேந்தாமல் தமது சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைக்கச் செல்கின்றார் என்றால், அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். ஒருவர் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதுதான் இவர் சைத்தானின் பாதையில் இருக்கின்றார்”. (தபரானி)

    இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, வெறும் தொழுகையையும் நோன்பையும் மட்டும் வைத்தல்ல.

    இந்த வணக்கங்கள் தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்குமே தவிர, வெறும் பரப்புரைகளும், பேருரைகளும் அல்ல.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×