search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 5-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 5-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 6-ந் தேதி காலை வரை நடக்கிறது.

    விழாவையொட்டி 5-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடக்கிறது.

    8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஊர்வலமாக தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு தர்காவில் கொடியேற்றப்பட்டு, 10 மணி அளவில் பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

    மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணிவரை ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல், 7 மணி முதல் 12 மணிவரை இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நன்றி நவிலல், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதல், 6 மணிக்கு நேர்ச்சை வினியோகம் செய்தல் நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×