search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது?
    X

    எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது?

    “நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).
    அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக சிறந்த ஞானவான்கள் பலர் இருப்பினும், அவர்களில் இரு வரைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒருவர் ‘கித்ர்’ என்ற மகான். மூஸா நபி காலத்தில் இவர் வாழ்ந்தவர். மற்றொருவர் ‘லுக்மான்’. இவர் தாவூது நபி காலத்தில் வாழ்ந்தவர்.

    லுக்மான் அபீசீனியா நாட்டைச் சார்ந்தவர். கருப்பர் இனத்தில் பிறந்தவர். அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையினால் ஞானம் பெற்றவர். அவரைப் பற்றிய செய்தியைச் சொல்வதற்காக ஒரு சூராவையே திருக்குர்ஆனில் இறக்கி அருளினான் அல்லாஹ். கித்ர் மகானைப் பற்றி சூரா கவ்ப்பில் ஒரு பகுதியாக இறைவன் சொல்லி இருக்கிறான். லுக்மான் அறிஞராக மாறியது குறித்த வரலாறு இதோ...

    அல்லாஹ், லுக்மானிடம் தன் மலக்குகளை அனுப்பி இவ்வாறு கூறச்செய்தான்...

    “உங்கள் முன் இரண்டு நன்மைகளை அமைத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். முதலாவதாக உங்களை இந்த நாட்டின் மன்னனாக நியமித்து நீதி தவறாமல் ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்குகின்றான். அதனை நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்களை அறிவில் சிறந்த ஞானியாக, கல்வியைப் போதிக்கும் மிக சிறந்த மகானாக நியமிக்க இறைவன் விரும்புகிறான். நீங்கள் எதனை விரும்புகின்றீர்கள்?”

    இவ்வாறு இறைவனின் கட்டளையை லுக்மானிடம் மலக்குகள் தெரிவித்தனர்.

    அதற்கு லுக்மான் ஹக்கீம் இவ்வாறு பதில் கூறினார்:

    “அல்லாஹ் எனக்கு அரச பதவியை வழங்குவதாய் இருந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இல்லை, இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கு எனக்கு அனுமதி வழங்கினால், நான் அறிவில் சிறந்த ஞானியாகவே விரும்புகிறேன்”.

    மலக்குகள் அவரை நோக்கி “சிறந்த அரச பதவியை புறம் தள்ளிவிட்டு சாதாரண ஞானியாகவே நீங்கள் விரும்புகிறீர்களா?” என்றார்கள். இதற்கு லுக்மான் கீழ்க்கண்டவாறு நீண்ட விளக்கம் அளித்தார்:

    “அரச பதவி என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டால், அதன் மூலம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். நீதியான அரசாட்சியை நிலைபெறச் செய்து விடலாம். ஆனால் எந்த பதவியையும் நாமே தேடிப்போனால் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது. நாமே நம் திறமையைக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவும். ஒன்றை அரவணைக்கும் போது இன்னுமொன்றை நிராகரிக்க வேண்டி வரும். அதனால் பகைமை வளரும். அதுமட்டுமல்ல அல்லாஹ் தந்த இந்த வாழ்க்கையை அவன் சொன்ன வழியில் நின்று நன்மைகள் செய்து வாழ்ந்தால் மட்டுமே மறுமையில் சொர்க்கம் செல்லலாம். வாழ்நாள் எல்லாம் இந்த உலகத்திற்காகவே செலவிட்டு விட்டால் நாளை மறுமை கடுமையாகி விடும். மேலும், எளிய வாழ்க்கை தான் இம்மையையும், மறுமையையும் ஒரு சேர பெற்றுக்கொள்ள வழி வகை செய்யும். எனவே, நான் ஞான வாழ்க்கையை தேர்வு செய்தேன்”.

    அதன்பிறகு, அல்லாஹ் தான் கூறிய வாக்குறுதியின்படி அவருக்கு ‘ஹிக்மத்’ எனும் ஞானத்தை அளித்தான். இதைத்தொடர்ந்து அறிவிற் சிறந்த அறிஞராய் லுக்மான் மாறினார். பலருக்கு கல்வி ஞானத்தை போதித்து வந்தார்.

    ஒரு முறை லுக்மான் ஹக்கீம் அவர்களைச் சுற்றி பலர் அமர்ந் திருந்தனர். அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை கடந்து சென்ற ஒருவர் லுக்மான் சொன்ன போதனைகளில் ஈர்க்கப்பட்டு நெருங்கி வந்து பார்த்தார். இவர் ஏற்கனவே நமக்கு தெரிந்தவர் போல் இருக்கிறது. ஆனால் அவருக்கு இத்தனை ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணியவராக, லுக்மானிடமே தனது சந்தேகத்தை கேட்டார். இதோ அந்த உரையாடல்...

    ‘நீங்கள் கொஞ்ச காலங்களுக்கு முன்பாக ஒருவரிடம் அடிமையாக இருந்தீர்கள் அல்லவா?’.

    ‘ஆம், நான் அடிமையாகத் தான் இருந்தேன்’.

    ‘அப்போது மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானே?’.

    ‘ஆம்! நான் அதே மனிதன் தான்’.

    ‘அப்படியானால் இத்தனை ஞானத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்?’

    ‘அல்லாஹ்தான் எனக்கு இந்த ஞானத்தை அருளினான்’.

    ‘அல்லாஹ் அப்படி அருள்வதற்கு உங்களிடம் இருந்த பண்புகள் தான் என்ன?’

    ‘அதனை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான். எந்த நற்குணத்தைக் கொண்டு என்னை ஏற்றுக்கொண்டானோ நான் அறியேன். ஆனால் என்னிடம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறந்த நான்கு பண்புகள் உண்டு. 1) அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, நடப்பது எல்லாம் அவனால் தான் என்று ஏற்றுக்கொள்வது, தவறு செய்தால் இறைவன் மிகவும் கடுமையாக தண்டிப்பான் என்ற அச்ச உணர்வுகொண்டிருத்தல், 2) வாக்கில் சத்தியம், வாழ்வில் உண்மைத்தன்மை, பொய் கலக்காத உயர்ந்த வாழ்வு, 3) அமானிதத்தைப் பாதுகாத்தல். அது பொருளாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும், ரகசியமோ, பிறரின் வாழ்க்கைப் பிரச்சினையோ, எதுவாக இருந்தாலும் அமானிதத்தைப் பேணி பாதுகாத்தல், 4) அல்லாஹ்வின் நினைவை மறக்கச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் வீணான செயல்களில் இருந்து தவிர்த்திருந்தல்... இந்த நான்கு பண்புகளையும் நான் கடைப் பிடித்து வருகிறேன்’.

    இவ்வாறு லுக்மான் கூறினார்.

    இதுகுறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடு கிறான்:

    “லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும், புகழுடையவனாகவும் இருக் கிறான்”. (திருக்குர்ஆன் 31:12)

    “லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘என் அருமை மைந்தனே, நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே. ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்” (திருக்குர்ஆன் 31:13).

    “தன் தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படி நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 31:14).

    “நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).

    “தொழுகையை கடைப்பிடித்தொழுகு. நன்மையான காரியங்களை கொண்டு ஏவி, பாவமான காரியங்களிலிருந்து மனிதர்களை விலக்கிவா. அதனால் உனக்கேற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் நீ சகித்து கொள். இது எல்லாக் காரியங்களிலும் வீரமிக்க செயலாகும்”(திருக்குர்ஆன் 31:17).

    “பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே” (திருக்குர்ஆன் 31:18).

    “உன் நடையில் பெருமையும் கர்வமும் இன்றி மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக் கொள்” (திருக்குர்ஆன் 31:19).

    இவ்வாறு பல நல்ல செய்திகளை திருமறைச் சொல்லித் தருகிறது. இதுதவிர லுக்மான் போதனைகள் ஹதீஸ் கிரந்தங்களிலும் நிரம்பவே நிறைந்துள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் நாம் ஈடேற்றம் பெற்றுக்கொள்வோம், ஆமின்.

    முகம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×