search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகத்திருநாள்
    X

    தியாகத்திருநாள்

    அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் துல்ஹஜ் மாதத்தில் 10-ம் பிறையில் ஓர் ஆட்டை குர்பானி செய்து அந்த நாளை தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
    இப்ராகிம் நபிகளை தன் நல்லடியார்களில் ஒருவராக தேர்ந்தெடுத்த பின்பும் கூட அவருக்கு அதிகமான சோதனைகளை கொடுத்தான், அல்லாஹ். மற்ற நபிகளை விடவும் இப்ராகிம் நபிகளுக்கு வழங்கப்பட்ட சோதனைகள், எந்த மனிதனும் நிறைவேற்ற தயங்கும் அளவிற்கு மிகவும் கடுமையானது.

    இந்த சோதனைகள் அனைத்தும் உள்ளுணர்வு மற்றும் கனவுகள் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், இறைக்கட்டளையை எந்த சந்தேகமும் இன்றி அப்படியே அவர் ஏற்றுக்கொண்டார். ஏன், எதற்கு என்று எந்தக்கேள்வியும் கேட்கவில்லை.

    அதனால் தான் இப்ராகிம் நபிகளை, ‘தன் உற்ற தோழன்’ என்று அல்லாஹ் அழைத்து அவருக்கு பெருமை சேர்த்தான். அத்தனை சிறப்பு மிக்க இப்ராகிம் நபிகள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

    ‘என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்’ (திருக்குர்ஆன் 37:100)

    இந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஒரு மகனை (இஸ்மாயில்) வாரிசாக வழங்கினான். வயது முதிர்ந்த நிலையில் பெரும் அருட்கொடையாக மகனைப்பெற்ற இப்ராகிம் நபிகள் மகிழ்ந்திருந்தார்கள். அப்போது இறைவனின் சோதனை இறங்கியது.

    ‘பால்குடி மாறா அந்த குழந்தையை பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்து விடு’ என்று இறைக்கட்டளை வந்தது. உடனே அதற்கு அடிபணிந்தார் இப்ராகிம் நபிகள். இதன் மூலம் நமக்கு என்றும் வற்றாத ஜீவ ஊற்று ஜம் ஜம் ஊற்று கிடைத்தது. சபா-மர்வா குன்றுகளிடையே ஓடும் ‘தொங்கோட்டம்’ என்ற சிறப்பு அமல் கிடைத்தது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் கூட ஹாஜிகள் அந்த கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    பல ஆண்டுகள் கடந்து மீண்டும் இப்ராகிம் நபிகள் சிரியாவிலிருந்து புறப்பட்டு தன் குடும்பத்தை மீண்டும் காணச்செல்கிறார்கள். அருமை பாலகன் இஸ்மாயிலோடு கொஞ்சிக் குலவி சிறிது காலம் வாழ்ந்தார்கள். மகனும் நடந்து திரிந்து விளையாடும் பருவத்தை எட்டினான். அப்போது மறுபடியும் அல்லாஹ்வின் கட்டளை பிறக்கிறது. இதுபற்றி தன் மகனிடமே அவர் கேட்டார். ‘என் அருமை மைந்தனே நான் உன்னை என் கை கொண்டு அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் கனவு கண்டேன். இதைப்பற்றி நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்...?’ (திருக்குர்ஆன் 37:102).

    மகன் கேட்கின்றார்: ‘தந்தையே! இது இறைவனின் கட்டளை என்று உறுதியாகத் தெரியுமா?’.

    ‘ஆம் நான் மெய்யாகவே கனவு கண்டேன்’, என்றார் தந்தை.

    ‘அப்படியானால் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன். எல்லா செயலாக்கங்களும் அவன் கட்டளைப்படியே நடக்கின்ற போது, இதுவும் அல்லாஹ்வின் எண்ணப்படியே நன்றாகவே நடக்கும்.

    இதை திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் அதை சகித்துக்கொண்டு உறுதியாய், இருப்பவனாகவே நீங்கள் என்னை காண்பீர்கள்’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 37:102)

    அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற நாடிய இப்ராகிம் நபிகள், அருமை மகனை அழைத்துக் கொண்டு சற்று தூரமான இடத்திற்கு சென்றார். இதைக்கண்டு சைத்தான் பொறாமை கொண்டான். அவர்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹாஜரா அம்மையாரிடம் ஜிம்ரத்துல் உலா என்ற இடத்தில்சென்று, ‘அன்னையே! உன் கணவர் இப்ராகிம் அருமைச் செல்வன் இஸ்மாயிலை அல்லாஹ்விற்காக பலியிடப் போகிறார். உடனே சென்று அவர்களை தடுத்து நிறுத்து’ என்று சொன்னான்.

    அன்னை ஹாஜராவோ, ‘என் கணவர் தவறு செய்யக்கூடியவர் அல்ல. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் செயல் படுவதை நானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்’ என்று பதில் உரைத்தார்கள். மீண்டும், மீண்டும் சைத்தான் அவர்களைத் தூண்டவே அருகில் கிடந்த கற்களை எடுத்து அவன் மீது வீசி துரத்தினார்கள்.

    தந்தையும் தனயனும்ஜிம்ரத்துல் உஸ்தா என்ற இடத்தை அடைந்த போது, சைத்தான் இஸ்மாயில் நபிகளை அணுகி, ‘நீயோ பச்சிளம் பாலகன், உன் தந்தை இப்ராகிம் ஈவு இரக்கமின்றி உன்னை அறுத்து பலியிடுவதற்காக அழைத்துச் செல்கிறார். அவரது கட்டளைக்கு கீழ்படியாதே. இங்கிருந்து ஓடி தப்பித்துக் கொள்’ என்றான்.

    ‘என்னுடைய தந்தை, அல்லாஹ்வின் கட்டளையை தெளிவாக எடுத்துச் சொல்லி, என்னுடைய அனுமதியைப் பெற்றே என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனவே என்னை விட்டு அகன்றுவிடு’ என்றபடி சைத்தான் மீது கல்லால் எறிந்து விரட்டினார்கள்.

    அவர்கள் இருவரும் சற்று தள்ளி நடந்து ஜிம்ரத்துல் அகபா என்ற இடத்தை அடைந்த போது, சைத்தான் இப்ராகிம் நபிகளிடம் வந்து, ‘இப்ராகிமே! ஏதோ நீங்கள் கனவு கண்டதாக சொல்கிறீர்கள். அல்லாஹ் எங்காவது தன் அடியார்களை உயிரோடு அறுத்து பலியிடச் சொல்வானா? உங்கள் சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட மனக் குழப்பமே இதற்கு காரணம். அருமைப் பிள்ளையை அறுத்து பலியிடாதீர்கள்’ என்று அவர்கள் மனதில் ஊசலாட்டத்தை விதைத்தான்.

    அல்லாஹ் எனக்கு அளித்த கட்டளையில் நான் தெளிவாக இருக்கின்றேன். எனவே என்னை நீ வழிகெடுக்க முடியாது. என்னை விட்டு ஓடிவிடு என்று சொல்லியவர்களாக அவனை கல்லால் எறிந்தார்கள்.

    அன்னையும், தந்தையும், பிள்ளையும் எந்த அளவிற்கு அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. அந்த செயலை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், ஹஜ் கடமைகளில் ஒன்றாக சைத்தான் மீது மூன்று இடங்களில் கல் எறிவதையும் அங்கீகரித்தான்.

    குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், இப்ராகிம் நபிகள், தன் மகனை மண்ணில் கிடத்தினார்கள். அப்போது இஸ்மாயில் நபிகள், ‘அருமை தந்தையே என்னை முகங்குப்புற படுக்க வையுங்கள். ஏனெனில், நீங்கள் அறுப்பதற்காக கத்தியை கையில் எடுக்கும் போது என் முகத்தை பார்க்க நேரிட்டால் உங்கள் மனம் இளகி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் விட்டு விடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்றார்.

    எப்பேற்பட்ட இறையச்சம். அவர்கள் சொல்லியபடியே முகங்குப்புற படுக்க வைத்து கூரிய கத்தியால் கழுத்தில் ஒட்டினார்கள். கத்தி அறுக்க மறுக்கிறது. கோபத்தோடு அருகில் இருந்த பாறையில் அடிக்கிறார்கள். பாறை இரண்டாக பிளவு படுகிறது. மீண்டும் அறுக்க முயற்சித்தும் முடியவில்லை. காரணம் அல்லாஹ்வின் உத்தரவு இருந்தால் மட்டுமே கத்தியால் அறுக்க முடியும். கத்தி அறுப்பதற்காகவே படைக்கப்பட்டது. இருந்தாலும் அறுப்பதற்கும், அல்லாஹ்வின் கட்டளை வேண்டும்.

    அப்போது இறைகட்டளை இறங்கியது. ‘இப்ராகிமே நாம் உம்மின் இறைபக்தியை ஏற்றுக்கொண்டோம். இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆடு அனுப்பியுள்ளோம். அதனை அறுத்து உங்கள் கனவை பூர்த்தி செய்யுங்கள்’ என்றான் அல்லாஹ்.

    அதுமட்டுமல்லாமல் அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் துல்ஹஜ் மாதத்தில் 10-ம் பிறையில் ஓர் ஆட்டை குர்பானி செய்து அந்த நாளை தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். 
    Next Story
    ×