search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள் - பயிற்சிகள் தொடரவேண்டும்
    X

    நோன்பின் மாண்புகள் - பயிற்சிகள் தொடரவேண்டும்

    மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.
    ரமலான் நம்மைவிட்டு பிரியவிருக்கின்றது. அடுத்த ரமலானுக்காக இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டிலும், இறை தியானத்திலும், இறைமறையை ஓதுவதிலும், இறையடியார்களுக்கு வழங்குவதிலும் கழிந்தது. பகலில் பசித்திருந்து, இரவில் விழித்திருந்து இறைவனை வணங்கினோம். இத்தனை சிரமப்பட்டு நோற்ற நோன்பு வீணாகிப் போய்விடக் கூடாது அல்லவா?

    நோன்பு என்பது ஒரு ஆன்மிக, ஒழுக்க, மனித நேயத்திற்கான பயிற்சியாகும். இம்மாதத்தில் பெற்ற பயிற்சியை இம்மாதத்தோடு முடித்துவிட்டு பிற மாதங்களில் எப்போதும்போல வாழ்ந்தால் இந்த நோன்பு நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஆகிவிடும்.

    ஒரு ராணுவ வீரன் படையில் சேருமுன் பயிற்சி பெறுகிறான். பின்னர் படையில் சேர்ந்து, அந்த பயிற்சியை செயல்படுத்துகின்றான். இதுபோலவே ஒவ்வொரு தொழில் செய்வோரும் முதலில் பயிற்சி பெற்று பின்னர் அந்தப் பயிற்சியின் அடிப்படையில் தமது தொழிலை அமைத்துக் கொள்கின்றனர்.

    அதுபோலவே இறைவனும் தனது அடியார்களுக்கு தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளின் மூலம் பயிற்சி அளிக்கின்றான். பின்னர் அந்தப் பயிற்சியில் கற்றதை, பெற்றதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் பயிற்சிக் காலத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன். பின்னர் எப்படியும் நடந்துகொள்வேன் என்றால் அந்தப் பயிற்சி அவசியமில்லையே. இத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

    எனவே நோன்பு உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து சுயசோதனை செய்யுங்கள். ஒரு செயல் வெற்றிபெற திட்டமிடுதல், செயல்படுத்துதல், சுயமதிப்பீடு செய்தல் ஆகிய இம்மூன்றும் முக்கியமாகும். எனவே உங்கள் வழிபாடுகளையும் சுயசோதனைக்கு உள்ளாக்குங்கள். வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகள் பற்றியும், வழிபாடுகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் சுய சோதனை செய்யுங்கள்.

    பயிற்சியின்போது பெற்றதை பழக்கமாக, இயல்பாக மாற்றுங்கள். ரமலானில் தொழுதது போலவே பிற மாதங்களில் தவறாது தொழுது வாருங்கள். ரமலானில் தீமைகளை பார்க்க, கேட்க, செய்ய அஞ்சியது போலவே பிற மாதங்களிலும் தீமைகளை கண்டால் விலகி ஓடுங்கள். ரமலானில் இல்லாதவருக்கு வழங்கியதுபோலவே என்றும் வழங்கி வாருங்கள்.

    ரமலானில் குர்ஆனை ஓதியது போல தொடர்ந்து குர்ஆனை ஓதி வாருங்கள். பள்ளிவாசல்களிலும் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்புகளை தொடங்க முயற்சி செய்யுங்கள்.

    உங்கள் பள்ளிவாசலில் ஏழைகளுக்கு நிரந்தரமாக எப்போதும் உதவி செய்யும் வகையில் பொதுநிதியை (பைத்துல்மால்) தொடங்குங்கள்.

    ரமலானே! சென்றுவா. எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்த ரமலானே சென்றுவா. மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.

    Next Story
    ×