search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: மறுமைக்கு தயாரா?
    X

    நோன்பின் மாண்புகள்: மறுமைக்கு தயாரா?

    இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.
    இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.

    இம்மை வாழ்வில் நற்செயல் புரிந்து தீயசெயல் தவிர்த்து அறத்துடன் வாழ்ந்தவர்கள் நேர்மையாக உழைத்தவர்கள், நேர்மையாக வாழ்ந்ததற்காக பல இழப்புகளை சந்தித்தவர்கள், மனித சமூகத்திற்கு சேவை ஆற்றியவர்கள் ஆகியோருக்கு சுவனம் எனும் வெகுமதி வழங்கப்படும்.

    மாறாக அம்மையில் அறக்கட்டளைகளுக்கு மாறுசெய்து தீமைகளை செய்தவர்கள், பிறர் உரிமைகள் பறித்தவர்கள், அநீதிகள், கொடுமைகள் இழைத்தவர்கள் ஆகியோருக்கு நரகம் எனும் தண்டனை வழங்கப்படும்.

    தீமைகளைச் செய்தவர்களையும், இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இருசாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்று போல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கு அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக (45:21-22) என்ற இறைவசனம் இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது.

    இறைவனின் விவேகம், கருணை, நீதி ஆகியவற்றை மறுமை வெளிப்படுத்துகிறது. நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் ஒரே முடிவு என்பது விவேகமுல்ல, கருணையுமல்ல, நீதியுமல்ல. தண்டனையும் வெகுமதியும் உரிய விசாரணைக்கு பின் சாட்சியாளர்களோடு நிரூபிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும். இதுகுறித்து திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.

    மனிதர்கள் செய்த ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது (36:12)

    மறுமையில் அவனுடைய கரங்களில் அவன் செய்த வினைகள் பதிவு செய்யப்பட்ட சுவடி வழங்கப்பட்டு அதனை அவன் படிக்கும்படி கோரப்படுவான். (17:13-14)

    அதைக்கண்ட மனிதன் அலறுவான்.

    அந்தோ...எங்கள் துர்பாக்கியமே. இது என்ன பதிவேடு. எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே. தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். (18:49)

    அவர்களின் காதுகளும், கண்களும், தோல்களும் உலகில் அவை என்வென்ன வேலைகளை செய்து கொண்டிருந்தன என்று மனிதனுக்கு எதிராகச் சாட்சி கூறும். (41:20,21)

    அந்த மறுமை நாளில் எவரும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முடியாது. எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் மீட்புப்பணம் பெற்று யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது (2:48)

    எனவே இம்மையை புறக்கணிக்காமல் இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவித்து கொண்டே மறுமையில் வெற்றிக்காக உழையுங்கள். இம்மையில் சுகபோகங்களில் மூழ்கி நிலையான மறுமை வாழ்வை இழந்துவிடாதீர்கள்.

    டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×