search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: கண்ணியமிக்க இரவு
    X

    நோன்பின் மாண்புகள்: கண்ணியமிக்க இரவு

    ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
    ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
    அந்த சிறப்பான நாளை ‘லைலத்துல் கத்ர்’ என்று கூறுகிறோம். அதன் பொருள் “கண்ணியமிக்க இரவு” என்பதாகும்.

    இது ரமலானின் கடைசி பத்து தினங்களில் ஒற்றைப்படை நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வரும்.

    ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்ன?

    அந்நாளில் தான் அருள் மறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்டது. மனிதகுலத்திற்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக  அறிவிக்கக்கூடியதாகவும், நன்மை, தீமையை பிரித்தறியக்கூடியதுமான ஒரு வேதம் அருளப்பட்டது இந்த நாளில் தான். எனவே இந்த நாளைவிட உலகில் வேறு எந்த நாள் சிறப்புக்குரியதாக இருக்க முடியும்?

    கண்ணிய மிக்க இரவை எப்படி கழிக்க வேண்டும்?

    வழிகாட்டும் வான் மறையை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக அந்நாளில் நாம் அதிக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
    ரமலானின் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் பெருமானார் தம் இடுப்பில் உள்ள கச்சையை இறுக்கிக்கட்டிக் கொண்டு இரவெல்லாம் நின்று வணங்குவார்கள். தமது குடும்பத்தாரையும் விழித்து வணங்கச் சொல்வார்கள்.

    எனவே இந்த இரவை வணக்கங்களால் நிரப்ப வேண்டும். அதோடு அதிகமாக பாவமன்னிப்பு கோரிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாவமன்னிப்பிற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு நாட்களில் அதுவும் ஒன்றாகும்.

    “இறைவனின் தூதரே! கண்ணியமிக்க இரவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது இறைவனிடம் இவ்வாறு பிரார்த்திக்குமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    “இறைவா, நிச்சயமாக நீயே மன்னிப்பவன்! மன்னிப்பை விரும்புபவன்! எனவே என்னை மன்னிப்பாயாக!

    இந்த ஓர் இரவில் மட்டும் வணங்கி விட்டு, இதர நாட்களில் எப்படியும் நடந்து கொண்டு, ‘இறைவன் கூலி வழங்கிவிடுவான்’ என்று முடிவு செய்து செயல்படுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவர்கள்.

    லைலத்துல் கத்ரில் கிட்டும் நன்மை ஒரு ஊக்கத்தொகை (போனஸ்) போன்றது. ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்பவர்களுக்குத்தான் ஊக்கத் தொகை தருவார்கள். பிற நாட்களில் வேலை செய்யாமல் ஊக்கத்தொகை கொடுக்கும் நாளில் மட்டும் வருபவர்களுக்கு எவரும் ஊக்கத் தொகை அளிக்கமாட்டார்கள்.

    “யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்” என்று திருக்குர்ஆன் (98:7) குறிப்பிடுகிறது.

    எனவே ஆண்டில் எல்லா நாட்களிலும் இறைவழிகாட்டல்களுக்கு பணிந்து வாழ்ந்து, கண்ணியமிக்க இரவிலும் வணங்குவோருக்கே அதிக கூலி கிட்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×