search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: நீதியை நிலைநாட்டுங்கள்
    X

    நோன்பின் மாண்புகள்: நீதியை நிலைநாட்டுங்கள்

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன்.
    நன்மைகளை ஏவுவதோடு தீமையைத் தடுத்தால் மட்டுமே நீதிமிக்க, அமைதி மிக்க சமூகத்தை உருவாக்க முடியும். எனவே இஸ்லாம் எப்போதும் இவ்விரண்டையும் இணைத்தே பேசுகிறது. நன்மையை ஏவுவது சிலவேளைகளில் எளிதாக நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் தீமைகளை தடுக்க முயன்றால் எதிர்ப்புகளும், சோதனைகளும், நம்மை நோக்கி வரும்.

    பலவீனமான மக்களை பாதுகாக்கும்படியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை தந்து அவர்களை தலைவர்களாக ஆக்கும்படியும் குர்ஆன் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது.

    “பலவீனர்களாக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக, மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக, எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.” (திருக்குர்ஆன் 4 : 75)

    “மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.” (28 : 5)

    தர்மத்தை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத சமூகம், ஒரு பெண் நீண்ட தூரத்திற்கு தன்னந்தனியாகப் பயணம் செய்யும் சமூகம், அநீதி மிக்க ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட சமூகம், இதை உருவாக்குவதே என் லட்சியம் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் தம் வாழ்நாளிலேயே மது, சூது, வட்டி, ஆபாசம், குலஆட்சிமுறை, சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவைகளை அகற்றி ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்கி காட்டினார்கள்.

    தீமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் உங்களால் முடிந்தவரை முயலுமாறு கூறப்பட்டுள்ளது.“உங்களில் ஒருவர் தீயதைக் கண்டால் கைகளால் தடுக்கட்டும். அது அவரால் முடியவில்லை எனில் நாவால் தடுக்கட்டும். அதுவும் முடியவில்லை எனில் மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே இறைநம்பிக்கையின் கீழ்நிலையாகும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : முஸ்லிம்)

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன். நன்மையை ஏவி தீமையை விலக்காதவர்களை நபிமொழி எப்படி எச்சரிக்கிறது என்பதைப் பாருங்கள்.

    “எனது ஆன்மா எவன் கையில் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையைக் கட்டாயம் ஏவ வேண்டும். தீமையைக் கட்டாயம் தடுத்தாக வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் அவனிடமிருந்து ஒரு வேதனையை உங்கள்மீது அனுப்புவான். பின்னர் நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.” (திர்மிதி)

    எனவே நன்மையை ஏவுவது போல் தீமைகளை தடுப்போம், நீதிமிக்க சமூகத்தையும் உருவாக்குவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×