search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்
    X

    நோன்பின் மாண்புகள்: நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்

    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.
    உலகம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள். நாம் மட்டுமே நல்லவராக வாழ்ந்துவிட்டு இந்த உலகம் மாறவில்லையே என அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சமூகத்தில் சிலர் மட்டுமே நல்லவர்களாக இருப்பதால் மாற்றங்கள் வந்துவிடாது.

    எனவே, நல்ல செய்திகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இறைச்செய்திகளை இனம், மொழி, நாடு வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். இறைவனைப்பற்றிய கருத்துக்கள், மனிதர்களைப் பற்றிய கருத்துக்கள், இறப்புக்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றிய கருத்துக்கள், அற போதனைகள், வாழ்வியல் கோட்பாடுகள், ஒழுக்க மாண்புகள், இறைவன் - மனிதன், மனிதன்&மனிதன் இடையே உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றி இறைவன் வழங்கி உள்ள வழிகாட்டுதல்களை மக்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.

    இப்பணி முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். நமது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரை நெறிப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களிலும் இது தொடர வேண்டும். ஊடகங்கள், பொதுமேடைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, நாடு கெட்டுப் போய்விட்டதே என்று கூறுவதில் பயனில்லை.

    “இறைநம்பிக்கையாளர்களே! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்று திருக்குர்ஆன் (3 : 110) குறிப்பிடுகிறது.

    “நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்”  என்றும் திருக்குர்ஆன் (3 : 104) வலியுறுத்துகிறது.

    நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமூகமே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. ஒரு சமுதாயத்தின் சிறப்பிற்கு பொருள்வளம், மனிதவளம், இயற்கை வளம், அறிவுவளம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாக கொள்ளக்கூடாது. அறம் சார்ந்து வாழும் சமூகம், தீமைகளற்ற சமூகம், மனித உரிமைகள் வழங்கப்பட்டு மனித மாண்புகளை பேணிக்காக்கும் சமூகமே சிறந்த சமூகமாகும். இந்த நோக்கில் செயல்படும் மனிதர்களையே வெற்றியாளர்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது. மனித சமூகத்தை சீர்திருத்துபவனை விட மிகப் பெரும் வெற்றியாளர் யாராக இருக்க முடியும்?

    மேலும் இப்பணியில் ஈடுபடுவோருக்கு மிகுந்த வெகுமதியை மறுமையில் இறைவன் அளிக்கின்றான் என்று திருமறையில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×