search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்
    X

    நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்

    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள்.
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள்.

    “மக்களே, மிகக் கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் மறுபடியும் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது. இந்த மக்கா நகரை புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். பழிவாங்குவதை, அப்படியான எண்ணங்களைக் கைவிடுங்கள். கொலை செய்வதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். வட்டி வாங்குவதை விட்டுவிடுங்கள். பெண்களை மரியாதையோடு நடத்துங்கள். அவர்கள் உங்கள் மனைவியராக இருந்தாலும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யுங்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளியுங்கள். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டும் நிபந்தனையாகச் சொல்லிவிடுங்கள்.

    நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும். எனக்குப் பின் எந்தவொரு இறைத்தூதரும் இல்லை, உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை மட்டும் விட்டுவிடாமல் நிறைவேற்றுங்கள். ரமதான் மாதத்தில் நோன்பு இருங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்திலிருந்து ஒரு பங்கை தர்மமாக (ஜகாத்தாக) கொடுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். இப்படியான நற்கருமங்கள் செய்தால் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள். உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும்போது அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்.

    மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. மக்களில் ஒருவரைவிட ஒருவர் எந்தவிதத்திலும் மேன்மையானவர்கள் இல்லை. மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் இன்று நான் சொன்னதையெல்லாம் எடுத்துக் கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி உரையை முடித்தார்கள்.

    அப்போது “இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்” என்ற இறைவசனம் இறங்கியது.

    திருக்குர்ஆன் 5:3, ஸஹீஹ் புகாரி 5:65:4606, 1:2:53

    - ஜெஸிலா பானு
    Next Story
    ×