search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமானாரின் இறுதி‌ ஹஜ்ஜுப் பயணம்
    X

    பெருமானாரின் இறுதி‌ ஹஜ்ஜுப் பயணம்

    இறைத் தூதுத்துவத்தை முழுமையாக்கிய நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள். தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர்.
    இஸ்லாமிய அழைப்புப் பணி தோன்றுவதற்கு முன் உலகை அறியாமை ஆட்கொண்டிருந்தது. மடமை, மூடப்பழக்க வழக்கங்கள், பெண் அடிமைத்தனம், பெண் சிசுக் கொலை, இனப் பாகுபாடு, நிறப் பாகுபாடு, ஏற்றத் தாழ்வு என்று பிரிந்து கிடந்த சமூகங்களெல்லாம் ஒன்றாயின. இறைவன் ஒருவனே அவன் ஒருவனுக்கே அனைவரும் அடிமைகள். நாம் அனைவரும் சகோதரர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவும் அன்பு பாராட்டுதலும் வேண்டுமென்று இருள்களிலிருந்து மீண்டு, உலக ஆசைகளிலிருந்து மக்கள் விடுபட்டு, இறையச்சத்தை நிலைநிறுத்தினர்.

    பல இன்னல்களையும், சோதனைகளையும் தாண்டி, இஸ்லாமியப் பணிகளை ஒழிக்கத் தொடர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர்களையும் எதிர்த்துப் போராடி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆற்றிய இறைப் பணியின்  வெற்றியாக அரபுலகம் பணிந்தது. சிலை வணக்கத்திலிருந்தும், மனிதனை மனிதன் வணங்குவதிலிருந்தும் விடுபட்டு ஏகத்துவக் கொள்கை பாலைவனங்களையும் தாண்டி, உலகில் எல்லாத் திசைகளிலும் பரவியது. கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் எல்லாத் திசைகளுக்கும் சென்று திருக்குர்ஆனை ஓதிக் காண்பித்து, இஸ்லாமிய சட்டங்களை நிலை நிறுத்தினர்.

    இஸ்லாமுடன் சேர்ந்து ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, அக- புறத் தூய்மை, சுதந்திரம், கல்வியறிவு, மனிதம், வியாபரம் செய்யும் நியாயமான முறை, திருமணச் சட்டத்திட்டங்கள் என்று வாழ்விற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் சென்று சேர்ந்தது. திருக்குர்ஆன் மனித குலத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

    இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஆழ்மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் இறைத் தூதுத்துவத்தை முழுமையாக்கிய நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள். தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர்.

    துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 2:25:1545

    -ஜெஸிலா பானு
    Next Story
    ×