search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: பிரார்த்தனையிலும் பொதுநலம் தேவை
    X

    நோன்பின் மாண்புகள்: பிரார்த்தனையிலும் பொதுநலம் தேவை

    பிரார்த்தனை செய்யும் முன் நல்லறம் ஒன்றை அவசியம் செய்யுங்கள். தான தர்மம், நோயாளிக்கு உதவி, கல்வி, கற்க உதவுதல், நலிவுற்ற மக்களுக்கு உதவுதல் என்பது போன்ற நல்லறத்தை செய்துவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
    பிரார்த்தனை செய்யும் முன் நல்லறம் ஒன்றை அவசியம் செய்யுங்கள். தான தர்மம், நோயாளிக்கு உதவி, கல்வி, கற்க உதவுதல், நலிவுற்ற மக்களுக்கு உதவுதல் என்பது போன்ற நல்லறத்தை செய்துவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

    நீங்கள் முன்னர் செய்த நல்லறங்களை நினைவுகூர்ந்து அதன் வாயிலாக வாய்மையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

    மிகப் பணிவுடனும், நடுங்கிய உள்ளத்துடனும் பிரார்த்தியுங்கள். இறைவனின் மேன்மை, மகத்துவம், ஆற்றல் குறித்த அச்சத்தினால் உங்கள் இதயம் நடுங்க வேண்டும். தலையும் பார்வையும், குரலும் தாழ்ந்திருக்க வேண்டும். கண்கள் ஈரமாக இருக்க வேண்டும்.

    "நபியே! காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூர்வீராக. உம் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும் மெதுவான குரலிலும் (பிரார்த்தனை செய்வீராக)" என்று இறைவன் நபிகள் நாயகத்திற்கு கட்டளையிடுவதைக் கவனியுங்கள். ( திருக்குர்ஆன் 7:205)

    இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள். இறைவனிடம் முறையிட எவருடைய துணையும் தேவையில்லை. ஏனெனில் இறைவன் நமக்கு மிக அருகில் உள்ளான். "பிடரி நரம்பைவிட சமீபமாக இருக்கின்றான்." என்று குர்ஆன் கூறுகிறது (50:16).

    "நபியே! என் அடியார்கள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்கள். நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால் அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்) என்ற இறைவசனம் (2:186) இறைவனை நேரடியாக நெருங்க முடியும் என்பதை உணர்த்துகிறது.

    பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள். பிரார்த்தித்த விஷயங்கள் நிறைவேற தாமதமானால் பிரார்த்தனை புரிதலை விட்டுவிடாதீர்கள்.

    "உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது இறைவன் உங்களுடைய வேறு தேவையை பூர்த்தி செய்கின்றான் அல்லது மறுமையில் வெகுமதிகளை வழங்குகின்றான்" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: ஹாகிம்)

    உங்களுக்காக மட்டுமல்ல. மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை புரியுங்கள்.

    "எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் மறுமையில் மன்னிப்பை அருள்வாயாக" (14:41)

    "எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களை விட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக" (59:10)

    மேற்கண்ட இந்த இறைவசனங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கும் பண்பை நமக்குக் கற்றுத்தருகிறது. எனவே நாம் செய்யும் பிரார்த்தனையிலும் பொதுநலம் தேவை.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது
    சென்னை.
    Next Story
    ×