search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: இறைவனிடம் கையேந்துங்கள்
    X

    நோன்பின் மாண்புகள்: இறைவனிடம் கையேந்துங்கள்

    அலட்சியமாகவும், அக்கறையின்றியும், உள்ளத்திலிருந்து வெளிப்படும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)
    இறைவனிடம் பிரார்த்திப்பதும் ஒரு வழிபாடாகும். பிரார்த்தனை வழிபாட்டின் சாரம், பிழிவு என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)
    “சில குறிப்பிட்ட நேரங்களில், இடங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் உடன் அங்கீகரிக்கப்படுகின்றன”, என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    ரமலானில் நோன்பு திறக்கும் நேரம், குர்ஆன் அருளப்பட்ட இரவு (லைலத்துல் கத்ர்) ஆகிய தருணங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளும் அதில் அடங்கும்.
    ஏக இறைவனிடம் மட்டும் பிரார்த்தனையைப் புரியுங்கள். மனிதனின் காரியங்களை, தேவைகளை நிறைவேற்றும் அதிகாரமும், ஆற்றலும் அவன் வசமே உள்ளது. அவனே நமது பிரார்த்தனைகளை கேட்கும் ஆற்றல் படைத்தவனாக இருக்கின்றான். பதில் அளிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

    “மனிதன் தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். காலணியின் வார் பட்டை அறுந்தாலும் அந்த இறைவனிடமே கேட்க வேண்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைவன் தடுத்துள்ள தீமைகள், தவறான செயல்கள், பாவச் செயல்கள் ஆகியவற்றிலிருந்து உங்களைக் காத்துக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். இறைவனுக்குப் பிடிக்காத செயல்களை செய்துகொண்டே இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

    “இறைவன் தூய்மையானவன். அவன் தூய வருவாய் ஈட்டுவோரின் பிரார்த்தனையைத் தான் அங்கீகரிக்கின்றான்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
    நபி (ஸல்) அவர்கள் நீண்ட தூரத்தைக் கடந்து புனிதப் பயணம் செய்யும் மனிதனைப் பற்றி இவ்வாறு வருணித்துக் கூறினார்கள்: “புழுதி படிந்த தலையுடன் அந்த மனிதன் தன் இரு கைகளையும் வானத்தின் பால் உயர்த்தி “என் இறைவனே!” என்று பிரார்த்திக்கின்றான். அவனுடைய உணவும், பானமும் ஹராமான வழியில் ஈட்டப்பட்டுள்ளன. அவனுடைய ஆடையும் அவ்வாறே! அவன் ஹராமான

    (தடுக்கப்பட்ட) வழியில்தான் தன் உடலையும் வளர்த்திருக்கின்றான். இறைவரம்புகளை மீறிய இத்தகைய மனிதனுடைய துஆ (பிரார்த்தனை) எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (முஸ்லிம்)

    பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை புரியுங்கள். மலை போல குவிந்திருக்கும் தன் பாவங்கள் பற்றி மலைப்பு கொள்ளாமல் இறைவனின் எல்லையற்ற மன்னிக்கும் தன்மை, கணக்கின்றி வழங்கும் கருணை, ஆற்றல், கொடை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து பிரார்த்தியுங்கள்.

    “தன்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று முழு உறுதியுடன் உளப்பூர்வமாகப் பிரார்த்தியுங்கள். அலட்சியமாகவும், அக்கறையின்றியும், உள்ளத்திலிருந்து வெளிப்படும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×