search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையச்சம் தந்த இறைவசனம்
    X

    இறையச்சம் தந்த இறைவசனம்

    ஏக இறைவன் அல்லாஹ், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை தனது திருத்தூதராக தேர்வு செய்த பின்னர், இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்தில் பிரகாசிக்கத் தொடங்கியது.
    ஏக இறைவன் அல்லாஹ், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை தனது திருத்தூதராக தேர்வு செய்த பின்னர், இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்தில் பிரகாசிக்கத் தொடங்கியது.

    எந்த ஒரு நற்செயலுக்கும் எதிர்ப்பு இருப்பது போல, நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை தெய்வங்களாக வழிபட்டு வந்த மக்கள், ஏக இறைவனாக அல்லாஹ்வை ஏற்க தயங்கினார்கள். அப்போது சிலர் நபிகளாரை கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.

    எனவே இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பகிரங்கமாக அதை வெளிப் படுத்த இயலாமல் இருந்தனர். இரவு நேரத்தில் நபிகளார் தனது தோழர்களை சந்தித்து இறைவனிடம் இருந்து ‘வஹி’ (இறைச்செய்தி) யாக வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி அதற்கான விளக்கங்களை அளித்துவந்தார்கள்.

    எத்தனை நாள் தான் பயந்து பயந்து ஏக இறைக்கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்று நபிகள் பெருமானார் ஏங்கினார்கள். வீரமும், பலமும் மிக்க வீரர் ஒருவர் இருந்தால் தைரியமாக தங்கள் கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யமுடியும் என்று நினைத்தார்கள்.

    இதுகுறித்து இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனையும் செய்தார்கள்:

    ‘இறைவா, எதிர்ப்பு அலைகள் சூழ்ந்துள்ளன. உனது கொள்கைகளை எடுத்துரைப்பதில் பலவீனம் தென்படுகிறது. இந்த இஸ்லாமிய கொள்கையை பலம் பொருந்தியதாக மாற்றி அமைப்பாயாக. உனக்கு பிரியமானவர்களில் அபூஜஹில் அல்லது உமர் இப்னு கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக’ என்று மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

    அதே நேரத்தில் எதிரிகள் கூடாரத்தில் நபிகளாரைக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. சிறந்த வீரரான உமர் இப்னு கத்தாப் அப்போது எதிர் அணியில் இருந்தார். அவரை சதிகாரர்கள் தூண்டிவிட்டனர்.

    அப்போது வெள்ளை நிற ஒட்டகங்கள் மிகவும் உயர்ந்த பொருளாக கருதப்பட்டது. எனவே அதுபோன்ற 7 வெள்ளை நிற ஒட்டகங்கள் பரிசாக தருகிறோம், முகம்மதுவை கொல்லவேண்டும் என்று உமரிடம் எதிரிகள் பேரம் பேசினார்கள்.

    ‘அமைதியின் உருவமான, சாந்தமான ஒருவரை கொல்வதற்கு இத்தனை உயர்ந்த பரிசா?’ என்றவராக உமர், ‘இதோ! இந்த நொடியில் அவர் தலையை கொய்து வருகிறேன்’ என்று உருவிய வாளுடன் புறப்பட்டுச்சென்றார்.

    செல்லும் வழியில் அவரை தடுத்த ஒருவர் ‘உங்கள் தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்’ என்று கூறினார். இதையடுத்து தனது தங்கை வீடு நோக்கிச்சென்றார் உமர்.

    வீட்டுக்குள் அவரது தங்கை திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் கோபத்துடன் சென்ற அவர் தங்கையை கண்டித்தார்.

    ‘நீயும் அந்த முஹம்மதுவின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டாயா?’ என்று கோபத்துடன் கேட்டார்.

    தங்கையோ அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவே இல்லை. ‘எங்கள் நாயகம் எங்களுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்கிறார். நன்னடத்தையின் பக்கமும், நற்குணத்தின் பக்கமும் எங்களை வழிநடத்திச் செல்கிறார். எனவே அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை உமக்கு பயந்து விடுவதாயில்லை’ என்று தைரியமாக எதிர்க்குரல் எழுப்பினார்கள்.

    ‘அப்படி உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார்?’ என்று உமர் வினவினார்கள்.

    தங்கை பாத்திமா கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

    ‘(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை’.

    ‘ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்)’.

    ‘உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது’.

    ‘(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்’.

    ‘வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை’ (திருக்குர்ஆன் 20:2-6).

    ஆழ்ந்த தத்துவம் நிறைந்த இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றத்தை தந்தது. அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.

    ‘இது நிச்சயமாக இறைவனிடம் இருந்து வந்தவைகளேயன்றி பிரிதொன்றாக இருக்க முற்றிலும் வாய்ப்பில்லை’ என்று சொல்லிய உமர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.

    ‘இப்போதே பெருமானாரிடம் சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்’ என்றவர் மீண்டும் வீதியில் இறங்கி நபிகளார் இல்லத்தை நோக்கி நடக்கஆரம்பித்தார்.

    உமர், உருவிய வாளுடன் நபிகளார் வீட்டுக்கு வருவதை அறிந்த ஒருவர் ஓடோடிச் சென்று “எம் பெருமானே, உமர் அவர்கள் குரைஷித் தலைவர்களின் தூண்டுதலினால் உங்களை கொல்வதற்காக உருவிய வாளுடன் வந்து கொண்டிருக்கிறார்’ என்று எச்சரித்தார்.

    உருவிய வாளுடன் வந்த உமர், அண்ணல் நபிநாதரின் அருகாமையை நெருங்கியதும் தன் கையில் இருந்த வாளை அவர்கள் முன் அர்ப்பணித்தார்.

    “அண்ணலே! இதுவரை எனக்கு உங்களைப் பற்றிய தவறான தகவல்களே தரப்பட்டது. ஆனால் என் தங்கையோ என் கண் களைத் திறந்து விட்டாள். அவள் ஓதிக்காட்டிய அந்த இறை வசனத்தின் உண்மைகள் என் இதயத்தில் நம்பிக்கையை ஊட்டியது. நிச்சயமாக அவைகள் இறைவன் வாக்காகவே இருக்க முடியும். அதை எந்த ஒரு மனிதரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே என்னை உங்களை பின்பற்றியவர்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

    நபியவர்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. நான் கையேந்திகேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் இவ்வளவு விரைவில் நிறைவேற்றித் தந்து விட்டானே என்று.

    இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மறு கணமே, “இத்தனை சத்திய மார்க்கம் இன்னும் ஏன் இருட்டிலே உலா வந்துகொண்டிருக்க வேண்டும். வாருங்கள் தோழர்களே, உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்” என்று வீரத்துடன் முழங்கினார் உமர் (ரலி) அவர்கள்.

    ‘உமர் மதம் மாறி விட்டார்’ என்ற செய்தி பரவிய போது, உமர் (ரலி) கூறினார்: “இந்த உமர் மதம் மாறவில்லை. இத்தனை காலமும் அறியாமையில் உழன்று கொண்டிருந்த உமர் இப்போது அறிவு ஞானத்தை தெரிந்து கொண்டார். ஓரிறையை ஏற்றுக் கொண்ட உமர் இறைத் தூதரையும் உண்மைப் படுத்தினார்” என்றார்.

    அன்று முதல் இஸ்லாம் பகிரங்கமாக பரவத்தொடங்கியது. அனைத்து மக்களும் இஸ்லாமிய நெறிகளை தைரியத்துடன் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். சுபீட்சம் என்னும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். இருண்ட அரபு கண்டத்தில் நபிகளார் மூலம் இஸ்லாம் என்ற ஒளி வெள்ளம் பாய்ந்தது. 
    Next Story
    ×