search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் தொழிலாளி - முதலாளி உறவு
    X

    இஸ்லாம் தொழிலாளி - முதலாளி உறவு

    பணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.
    “நான் பத்தாண்டுகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பணியாளராக இருந்தேன். அவர்கள் என்னை ஒருபோதும் அடித்ததில்லை.; ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் இதைச் செய்யவில்லை? என்று கேட்டதில்லை. என்னைப் பார்த்து ‘சீ’ என்று கூட சொன்னதில்லை” என்று கூறுகிறார், நபிகளாரிடம் பணியாற்றிய அனஸ் மாலிக் (ரலி).

    அபூ மசூத் என்ற நபித் தோழர் கூறுகிறார்: “நான் எனது வேலைக்காரனைப் பிரம்பினால் அடித்துக் கொண்டிருந்தேன். பின்னர், ‘அபூ மசூதே, அறிந்து கொள்’ என்ற குரலைக் கேட்டேன். எனக்கிருந்த கோபத்தில் அது எவருடைய குரல் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். பின்னர் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் என்னை நெருங்கியதும், அவர்கள் நபிகள் நாயகம் என்பதை அறிந்தேன். பெருமானாரைப் பார்த்ததும் எனது பிரம்பைத் தூக்கி எறிந்தேன். ‘அறிந்து கொள்! அபூ மசூதே, இந்த வேலையாள் மீது நீ பெற்றிருக்கும் அதிகாரத்தை விட இறைவன் உன் மீது அதிக அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றான்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள். அதனைக் கேட்ட நான் அந்த வேலையாளுக்கு விடுமுறை அளித்து விட்டேன்.

    நபித் தோழரின் முடிவைக் கேட்ட நபிகளார், “நீர் அவ்வாறு விடுதலை செய்யவில்லையாயின் நரக நெருப்பு உம்மைத் தீண்டி இருக்கும்” என்றார்கள். அன்று முதல் நான் வேலைக்காரர்களை அடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்றார், அபூ மசூத்.

    அடிமைகளை அடித்தால் அதற்குரிய பரிகாரம் அவரை விடுதலை செய்வதாகும்.

    தனது அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களை ஒருவர் எப்படி நடத்துகிறார் என்பதை வைத்து அவரை எடை போடலாம். பணியாட்கள் பாராட்டும் அளவிற்கு பலர் நடந்து கொள்வதில்லை. வேலையாட்களை அற்பமாகவும், துச்சமாகவும் மதிப்பது, தகாத சொற்களினால் அவர்களை ஏசுவது, அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்துவது, அவர்களுடைய சக்திக்கு அதிகமான வேலைகளைத் தருவது, உரிய கூலியை உரிய நேரத்தில் வழங்காதிருப்பது, என்று தொழிலாளர்கள் மீது பல கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வில் இருந்து பல வழிகாட்டுதல்கள் உள்ளன.

    * உங்கள் பணியாள் வெப்பத்தையும், புகையையும் சகித்துக் கொண்டு உணவு சமைத்து உங்களுக்குக் கொண்டு வருகிறார். அவரை அருகில் அமர வைத்து, அவர்களுடன் உணவு அருந்துங்கள். ஒருவேளை உணவு குறைவாக இருந்தால் ஒரு கவளம் அல்லது இரண்டு கவளமாவது அவர்களுக்கு அளியுங்கள்.

    நீங்கள் உண்ணுவதைப் போன்ற உணவையும், உடுத்துவதைப் போன்ற உடையையும் அவர்களுக்கு வழங்குங்கள்.

    பணியாட்களின் சக்திக்கு அதிகமான வேலைகளை வழங்காதீர்கள். அவ்வாறு வழங்கினால் அவர்களது பணிகளில் ஒத்தாசை செய்யுங்கள்.

    வேலையாட்கள் நோயுற்றிருந்தால் நபிகள் நாயகம் அவர்களை நேரில் சென்று பார்ப்பார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ஒரு யூதச் சிறுவன் நோயுற்றிருந்தபோது, அவனுடைய வீட்டுக்குச் சென்று விசாரித்தார்கள்.

    பணியாட்கள் தமது தேவைகளை தம்மிடம் நேரடியாகக் கேட்குமாறு நபிகள் நாயகம் கூறினார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ரபியா என்பவர் கூறுகிறார்: “ஒருநாள் நான் நபிகளாருடன் இரவில் உடன் இருந்தேன். தொழுகைக்காக உடலைச் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கொண்டு வந்தேன். அவருக்குத் தேவையான மற்ற பொருட்களையும் கொண்டு வந்தேன். நபிகளார் என்னை நோக்கி, “உனது தேவையை என்னிடத்தில் கேள்” என்றார்கள். அதற்கு நான், “மறுமையில் நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்கிறேன்” என்றேன். “இதற்கு மேலும் உனக்கு வேறேதும் தேவைகள் உண்டா?” என்று நபிகளார் கேட்டார்கள். “இதற்கு மேல் எனக்குத் தேவைகள் இல்லை” என்று பதில் அளித்தேன்.” (நூல்: முஸ்லிம்)

    வியர்வை உலருமுன் கூலியைக் கொடுத்து விடுங்கள் என்பது ஒரு நபிமொழி.

    மறுமையில் மூன்று பேருக்கு எதிராக நான் இறைவனிடம் வாதிடுவேன் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

    1. எனது பெயரால் ஓர் ஒப்பந்தம் செய்து விட்டு அதை முறிப்பவன்.

    2. ஒரு சுதந்திர மனிதனை விற்று அவனை அடிமை ஆக்குபவன்.

    3. ஒருவனிடம் வேலை வாங்கி விட்டு அவனுடைய ஊதியத்தைத் தர மறுப்பவன்.

    பணியாட்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டும். அதிக தண்டனை வழங்குவது பாவமாகும்.

    நபிகளாரிடம் ஒருமனிதர், “இறைத்தூதர் அவர்களே! என்னிடத்தில் இரண்டு அடிமைகள் உள்ளனர்; அவர்கள் பொய்யுரைக்கின்றனர்; எனக்குத் துரோகம் இழைக்கின்றனர்; எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். அதற்குப் பதிலாக நான் அவர்களைச் சபிக்கிறேன். அடிக்கிறேன். மறுமையில் இறைவன் முன்னால் எனது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம், “அவர்கள் செய்த தவறுகளும், நீர் கொடுத்த தண்டனைகளும் எடை போட்டு பார்க்கப்படும். இரண்டும் சமமாக இருப்பின் உமக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ எதுவும் இராது. நீர் கொடுத்த தண்டனையின் அளவு குறைவாக இருப்பின் அது உமக்கு நன்மையாக முடியும். நீர் கொடுத்த தண்டனையின் அளவு அதிகமாக இருப்பின் உமக்குத் தண்டனை வழங்கப்படும்; அவர்களுடைய தவறுகள் குறைக்கப்படும்” என்றார்கள்.

    ஒருவர் நபிகளாரிடம், “இறைத்தூதரே! எனது பணியாள் மிகவும் மோசமாகவும், நியாயமின்றியும் நடந்து கொள்கிறார். நான் அவரை அடிக்கலாமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட நபிகளார் மவுனமாக இருந்தார். மீண்டும் அவர் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் மவுனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாகக் கேட்டபோது, “அவர்கள் செய்யும் தவறுகளை எழுபது முறை மன்னியுங்கள்” என்றார்கள்.

    அடிமைகளை நோக்கி, “அடிமைகளே!” என்று அழைக்காதீர்கள். ஏனெனில் நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே! மாறாக “சிறுவனே, சிறுமியே, எனது குழந்தையே” என்று அழையுங்கள்.

    வேலைக்காரர்கள் தனது முதலாளியை, “அதிபரே” என்று அழைக்காதீர்கள். மாறாக “எங்களது பாதுகாவலரே” என்று அழையுங்கள்.

    பணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.

    தொழிலாளி, முதலாளி உறவுகளுக்கு நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் மிகச் சிறந்த அடிப்படையாக விளங்குகின்றன.

    - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.
    Next Story
    ×